Header Ads



ஸ்ரீலங்கா முஸ்லிம் போரத்தின் ரமழான் வேண்டுகோள்

(ஏ.எல்.ஜுனைதீன்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அலாஹ்வின் திருநாமத்தால்,
    
அன்புள்ள இஸ்லாமிய சோதரீர்,
    அஸ்ஸலாமு அலைக்கும்.

    ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், ஊடகத் துறையில், சமூக நலன் பேண அயராது உழைக்கும் 720 அங்கத்தவர்களைக் கொண்ட ஓர் இயக்கமாகும். இலங்கையில் இருக்கும் சக்திவாய்ந்த இயக்கங்களில் ஒன்றாக எமது அமைப்பு பரிணமித்துள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

    அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முஸ்லிம் விரோதச் செயற்பாடுகள் குறித்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கும் சமூக மட்டத்தில் ஒருமித்த நடவடிக்கைகளை எடுக்குமுகமாக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தினை ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவதற்கும் முஸ்லிம் மீடியா போரம் பல ஆக்கபூர்வமான பணிகளை பின்னணியிலிருந்து மேற்கொண்டு வருகின்றது. இது மட்டுமன்றி இப்பணிக்காக முஸ்லிம் புத்திஜீவிகளின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

    முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் இன்று பல கூறுகளாகப் பிரிந்து இயங்குவதனை நீங்கள் அறிவீர்கள். இதனால் முஸ்லிம் சமூகம் அதனது குரல் சரியாக ஒலிக்கப்படாத ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  இந்த நிலையில், புத்திஜீவிகளை உள்ளடக்கிய எம் போன்ற இயக்கங்கள் தோளில் பாரதூரமான பொறுப்பு சுமத்தப்பட்டிருப்பதனை நீங்கள் உணர்வீர்கள். இந்தப் பணியை சமூகத்திற்காக முன்னெடுத்துச் செல்வதில் முஸ்லிம் மீடியா போரம் அரசியல் மற்றும் குறுகிய பேதங்களின்றி செயற்பட்டு வருகின்றது. இந்த பாரிய பொறுப்பினை அல்லாஹ்வுக்காக நேர்மையாக மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றோம்.. இதற்கு உங்கள் ஆதரவு இன்றியமையாததாகும்.

    முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க முன்னணியில் நின்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் 105 முஸ்லிம் இயக்கங்களை உள்ளடக்கிய Muslim Council of Sri Lanka  வின் உந்து சக்தியாகவும் முஸ்லிம் மீடியா போரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இலங்கையில் முஸ்லிம்களைப் பற்றியும், புனித இஸ்லாத்தைப் பற்றியும் தவறான அபிப்பிராயங்களை மாற்று மதத்தவர் மனதில் பதிய வைக்க ஊடகங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுவது தாங்கள் அறிந்திராத விடயமல்ல. மேற்படி சவாலைச் சமாளிப்பதற்கு பல வழிகளில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் எமது அமைப்பு, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் விரோத பிரசாரங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக “கண்காணிப்புக் குழு” (Monitoring Committee) ஒன்றினையும் அமைத்து ஆக்கபூர்வமாக செயற்பட்டு வருகின்றது.

    இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான திட்டமிட்ட சதிகளை முறியடிப்பதற்கு எம்மத்தியில் ஆற்றல் மிகுந்த ஊடகத்துறையினர் அவசியம் என்பதை தாங்கள் உணர்ந்துள்ளீர்கள். இதன் காரணமாக எமது அங்கத்தவர்களை இத்துறையில் நிபுணத்துவம் பெறச் செய்வதற்காக ஒரு நிதியினையும் ஆரம்பித்து அதன்மூலம் நாம் பல உதவிகளைச் செய்து வருகின்றோம்.

    கடந்த காலத்தில் நீங்கள் அளித்த உதவிகளைப் பயன்படுத்தி முஸ்லிமல்லாத ஊடகவியலாளர்கள், சிங்கள மற்றும் பெளத்த அமைப்பு முக்கியஸ்தர்களைச் சந்தித்து எமது சமூக நிலமையைத் தெளிவு படுத்தியதோடு இது தொடர்பாக அவர்களது ஆதரவுடன் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்.

    21 ஆம் நூற்றாண்டின் சவாலை எதிர்நோக்குவதில் கம்பியூட்டர் முக்கியத்துவம் வகிப்பதால் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கம்பியூட்டர் தொடர்பான அறிவினைப் பெறுமாறு வலியுறுத்தும் எமது அமைப்பு முஸ்லிம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாகப் பயிற்சியும் அளித்து வருகின்றது.

    தகவல் தொழில்நுட்பம் பற்றி பாடசாலை மாணவர்கள், அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்குகளை நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றோம். பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கு ஊடகத்துறையில் பயிற்சி வழங்கும் எமது நோக்கங்களில் ஒன்றை நிறைவு  செய்து அறிவிப்பாளர்களாக இதுவரை 84 பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளோம்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு இளைக்கப்படும் அநீதிகளை சர்வதேசமயப்படுத்துமுகமாகவும் நாட்டு விவகாரங்களை முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் மீடியா போரம் இணையத்தளத்திலும் தன்னை இணைத்துள்ளது முகவரி:http://slmuslimmediaforum.blogspot.com

    முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் தினசரி ஒன்றோ, இலத்திரனியல் ஊடக நிறுவனங்களோ இல்லாமையால் கடந்த காலங்களில் சமூகம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியது. சில முக்கிய பிரச்சினைகளின் போது முஸ்லிம் சமூகத்தின் உண்மையான நிலைப்பாட்டை உலகுக்குச் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.. இந்த நிலையை மாற்றுவதற்காக ஊடக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் பூரணப்படுத்தப்பட்டு தமிழ், ஆங்கில பத்திரிகைகளை வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டுகளில் பரோபகாரிகளினால் எமது அமைப்புக்கு அளிக்கப்பட்ட ஒத்தாசைகளின் மூலம் சுமார் 54 அங்கத்தவர்கள் இதழியல் துறையில் கொழும்பு பல்கலைக்கழக மற்றும் அக்வினாஸ் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளனர். என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். அத்தோடு எமது அங்கத்தவர்களை இத்துறையில் மேலும் சிறப்பிக்க கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும் அடிக்கடி நடாத்தி வருகின்றோம். ஊடகத்துறையினர் அல்லலுறும் போது உதவிக் கரம் நீட்டுவதும் எமது செயற்பாடுகளில் ஒன்று.

    அருள்மிகு மாதமான இந்த ரமழான் மாதத்தில் மேற்படி எமது இயக்க நிதிக்கு தாராளமாக உதவுவதன் மூலம் இப் புனித போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்பது எமது அவா. 

 உங்கள் காசோலைகளை “Sri Lanka Muslim Media Forum”  என்று பின்வரும் வங்கிக் கணக்குகளில் ஒன்றுக்கு எழுதவும்.
 Bank of Ceylon – Lake House Branch A/C No. 3268511
 Amana Investment Mudarabah  A/C No. 1-4782-10-1  

      அல்லாஹ் எம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக!
      ஈருலக வாழ்க்கையையும் அழகாக்கி வைப்பானாக!!  ஆமீன்.

No comments

Powered by Blogger.