கல்முனையில் காட்சிதரும் அத்திபார தூண்கள் (படங்கள்)
(ஏ.எல்.ஜுனைதீன்)
இப்படத்தில் காணப்படும் இந்த அத்திபாரத் தூண்கள் எமது இலங்கை நாட்டின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரத்தில் அல்லது பொலன்னறுவையில் ஆட்சி செய்த மன்னர்கள் பாவித்த கட்டடம் ஒன்றின் அத்திபாரத் தூண்கள் என நினைக்கிறீர்களா?
அப்படித்தான் எம் எல்லோராலும் நினைக்கக் கூடிய வகையில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு அரசியல்வாதியினதும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உட்படுத்த வேண்டும் என்ற சிந்தனைக்குள் வராமல் அப்படியே விடப்பட்டுள்ள கல்முனை நகரப் பிரதேசத்திற்குள் அமைந்திருக்கும் அத்திபாரத் தூண்கள்தான் இவைகள்.
முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்களால் அரச செயலகக் கட்டடத் தொகுதியை விரிவாக அமைக்கும் பொருட்டு இந்த அத்திபாரத் தூண்கள் அன்று கல்முனை நகரில் போடப்பட்டன. அதில் ஒரு பகுதியில்தான் கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டன. சில காரணங்களால் இந்த அத்திபாரத் தூண்களில் கட்டடங்கள் பூரணமாக கட்டிமுடிக்கப்படவில்லை.
இவ்வாறு கடந்த 30 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த அத்திபாரத் தூண்களே இவ்வாறு சரித்திர காலக் கட்டடங்களின் தூண்கள் போன்று கல்முனை அரச செயலகக் கட்டடத் தொகுதிக்குப் பின்புறத்தில் மறைந்திருந்து காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கல்முனையில் கட்டடங்கள் கட்டுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நில வசதிகள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் இப்படி அத்திபாரத் தூண்கள் இடப்பட்ட நிலையில் வெற்று நிலம் இருந்து கொண்டிருப்பது அதிஸ்டத்திலும் அதிஸ்டமல்லவா? கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தில் இந்த அத்திபாரத் தூண்களும் எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்படுமா?


Post a Comment