Header Ads



கிழக்கு மாகாண சர்ச்சை - ஜனாதிபதி தலைமையில் நாளை அவசர பேச்சு

கிழக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாகாண ஆளுநருக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போர்க்கொடி தூக்கிவரும் நிலையில், அந்த சர்ச்சையைத் தீர்ப்பது தொடர்பிலான முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

நாளை மாலை ஐந்து மணிக்கு கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சில் கலந்துகொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நேற்று மாலை ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்திருக்கிறது.

அதேபோல் இந்த முக்கியமான பேச்சில் கலந்துகொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுங்கட்சியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

கிழக்கு மாகாணத்தின் சிவில் நிர்வாக செயற்பாடுகளிலும் மாகாண அமைச்சர்மாரின் விடயதானங்களிலும் ஆளுநரின் தலையீடு அதிகரித்துவருவதாக மாகாண அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருவதால் அங்கு மாகாண நிர்வாக செயற்பாடுகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் அரசின் மூத்த அமைச்சர்மார் சிலர் அண்மையில் கிழக்கு மாகாண அமைச்சர்களுடன் பேச்சுகளை நடத்தியிருந்தனர். என்றபோதிலும், அந்தச் சந்திப்பின் பின்னரும் கிழக்கு மாகாணசபையில் பிரச்சினைகள் தொடர்வதால் நாளைய சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாமெனத் தெரிகிறது.

13ஆவது திருத்தத்தின் முக்கிய அதிகாரங்களை நீக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஆட்சேபனையைத் தெரிவித்து கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிகளை எடுத்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.