Header Ads



மன்னம்பிட்டி மினி பஸ் விபத்தில் மூவர் பலி – 20பேர் காயம்

(பழுளுல்லாஹ் பர்ஹான் + நஷ்ஹத் அனா)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் மினி பஸ் வண்டியொன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 04.00 மணியளவில் மன்னம்பிட்டிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நான்கு மணியளவில் குறித்த தனியார் மினி பஸ் வண்டி அதிகாலை மன்னம்பிட்டி  கோட்டாஎலிய பகுதியில் வைத்து மரமொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி முகாமையாளர்களுக்கான செயலமர்வொன்றை முடித்து விட்டு நேற்றிரவு மட்டக்களப்புக்கு  திரும்பிக்கொண்டிருந்த போது இவர்கள் பயணித்த பஸ் வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைட்(நளீமி) தெரிவித்தார்.

இதில் பயணித்த 21 சமுர்த்தி முகாமையாளர்களில் மூன்று சமுர்த்தி முகாமையாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பஸ்வண்டியின் சாரதி நடாத்துனர் அடங்களாக 20 பேர் காயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மன்னம்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயப்பட்டவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை விபத்துத் தொர்பான விசாரணைகளை மன்னம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.