பிரிட்டனில் பணமாற்று நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மூடல் - இலங்கையர்களுக்கு பாதிப்பு
எச்.எஸ்.பி.சி மற்றும் பார்க்கிளேஸ் போன்ற வங்கிகள் உரிய காரணம் கூறாமல் தமது கணக்குகளை மூடுவதால், தாமும் தமது வாடிக்கையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாக பிரிட்டனில் இருந்து வேறுநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதற்கான சிறிய பணமாற்று நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
குறிப்பாக குடிவரவாளர்கள் பணத்தை தமது சொந்த நாடுகளில் உள்ள உறவுகளுக்கு அனுப்புவதற்கு உதவுகின்ற சிறிய அளவிலான பணமாற்று நிறுவனங்களே இவ்வாறு பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
உலக மட்டத்தில் எடுக்கப்பட்ட மேலிட முடிவின் அடிப்படையில் தமது பழுவைக் குறைப்பதற்காக என்று கூறியே, இந்த வங்கிகள் தமது கணக்குகளை மூடுவதாக பணமாற்று நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
சில காலத்துக்கு முன்னதாக சட்ட விரோத பணமாற்று விவகாரம் ஒன்றில் அமெரிக்காவால் எச்சரிக்கப்பட்ட இந்த வங்கிகள், தமது பழுவைக் குறைப்பதற்காக, உயர் அபாயம் உள்ள வணிகங்களுக்கான வங்கிக் கணக்குகளை மூடுவதாகக் கூறி, பக்க சார்பாக, நூற்றுக்கணக்கான சிறிய பணமாற்று நிறுவனங்களின் கணக்குகளை மூடுவதாக லண்டனில் செயற்படும் பணமாற்று நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும், யூ.கே பணமாற்று நிறுவனங்களின் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவருமான ரவி ரவிந்திரன் பிபிசிக்கு தெரிவித்தார்.
இதன் மூலம் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், சோமாலியா போன்ற நாடுகளில் இருந்து வந்து குடியேறி வாழும் குடியேற்றக்காரர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
உண்மையில் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போர் குறித்து நிதி கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கும் வங்கிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு மாதகால அவகாசம் கொடுத்து, காரணம் எதுவும் தராமலே வங்கிக்கணக்குகளை வங்கிகள் மூடமுடியும் என்பதால், தம்மால் இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும் ரவி ரவீந்திரன் கூறினார்.
இதற்கிடையே, இந்த விடயம் குறித்து பிபிசிக்கு கருத்துக்கூறியுள்ள பார்க்கிளேஸ் வங்கி, இப்படியான சில நிறுவங்களில் பணம் சட்டவிரோத பணமாற்றுக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கைகளைச் சென்று, சேர்வதை சோதித்து, தடுப்பதற்கான வழிமுறைகள் கிடையாது என்று கூறியுள்ளது. bbc
.jpg)
Post a Comment