Header Ads



'முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய முஸ்லிம் மாகாண சபை வேண்டும்'

1986 நவம்பரில் பெங்களூரில் நடைபெற்ற இலங்கை - இந்திய அரசின் பேச்சு வார்த்தையில் பரிந்துரை செய்யப்பட்ட கிழக்கின் மூன்று சமூகங்களுக்குமான மூன்று மாகாண சபைகளில் ஒன்று முஸ்லிம் சமூகத்திற்கான மாகாண சபையாகும். அதைத் தருவதற்கு அரசு தயாரானால் அரசின் பக்கம் முஸ்லிம் தலைமைகள் 13ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைப்பதற்கு ஆதரவு வழங்க முடியும். அல்லது தமிழ் தரப்புக்கள் அந்த நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் தமிழ் தரப்பிற்கு ஆதரவு தரமுடியும். இதுவே இன்றுள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடாகும். 

இவ்வாறு அம்பாறை மாவட்ட அஹ்லுஸ் சுன்னத்து வல்ஜமாஅத் உலமா சபைத் தலைவர் பன்னூல் ஆசிரியர் மௌலவி அல்ஹாஜ். றபீயுடீன் ஜமாலி அவர்கள் அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற மேற்படி சபையின் உலமாக்களின் செயல் அமர்வில் கலந்துகொண்டு பேசும் போது கூறினார்.  மேலும் அவர் கூறியதாவது,

கடந்த 30 வருடங்கள் தமிழ் பயங்கரவாதத்தையும் அதைபோல இன்று தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் சிங்களப் பயங்கர வாதத்தையும் முஸ்லிம்கள் இலகுவாக மறந்துவிட முடியாதுள்ளது. 

இன்று வரை முஸ்லிம்கள் தமிழ், சிங்கள சமூகத்துடன் மட்டுமல்ல, எல்லா சமூகத்துடனும் சார்ந்தும், இணங்கியும்தான் வந்துள்ளனர். எல்லா சமூகத்திற்கும் இணைப்புப்பாலமாகவே அவர்கள் இருந்துள்ளனர். மேலும், இன்றுவரை முஸ்லிம்கள் தமிழ், சிங்கள சமூகங்களை ஒருபோதும் பகைத்துக்கொள்ளவோ, பிணங்கிக்கொள்ளவோ விரும்பவில்லை என்பது முஸ்லிம்களின் பகிரங்க அறிக்கையாகும்.  1956ல் திருமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மகாநாட்டிலும், 1964ல் நடைபெற்ற தழிரசு கட்சியின் ஒன்பதாவது மகாநாட்டிலும், கிழக்கில் முஸ்லிம்களின் அபிலாiஷகளுக்கு அமைவாக முஸ்லிம்களுக்கான முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு முஸ்லிம் மாகாணம் நிறுவுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நினைவுபடுத்துவது இன்று காலத்தின் தேவையாகும். 

அந்த மகா நாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் கிழக்கின் அதிகாரம் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பங்கிடப்பட வேண்டும் என்று கூறியதை அனைவரும் ஏற்றாக வேண்டும். 

வடக்குக் கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசப்படும் போது கிழக்கில் வாழும் முஸ்லிம் தேசியத்தை கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், கிழக்கின் முஸ்லிம்களின் வீதம் 33, தமிழர் வீதம் 42, சிங்களவர்களின் வீதம் 25 ஆகும். ஆனால், வடக்கும் கிழக்கும் இணைப்புச் செய்யப்பட்டால் முஸ்லிம்களின் வீதம் ஒரேயடியாக 18இற்குக் குறைந்து போவதால், பாதிக்கப்படப் போவது முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்கக்கூடாது. இதற்கு இழப்பீடாக கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களான அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் மாகாண சபை உருவாக்கப்பட வேண்டுமென்பதாகும்.

மேலும் 1988ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொது முன்னனியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கிழக்கில் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் ஏற்படுத்துவதற்கு எல்லா வகையான ஒத்துழைப்புக்களையும் தருவதாக வாக்குறுதி தரப்பட்டதையும் இன்று அனைவருக்கும் நினைவுகூறுவது சாலச்சிறந்ததாகும். 

அந்த முன்னனியில் தமிழ் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல, 2000ம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்னனி அரசு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய அரசியல் சீர்திருத்த மசோதாவிலும் இதற்கான அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. 

13வது திருத்தம் தொடர்பாக முஸ்லிம்களின் ஆதரவுக்கு இந்த நிபந்தனைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால், 13வது திருத்தச் சட்டம் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக மட்டும் இந்திய அரசால் திணிக்கப்பட்டதாகும். அத்திருத்தத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக எதுவுமே குறிப்பிடப்படவில்லை. சுருக்கமாகப் பார்த்தால் முஸ்லிம்களை முற்று முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டதுதான் அவ்வொப்பந்தமாகும். ஆகவே, 13வது திருத்தத்தை ஆதரிப்பதற்கு முஸ்லிம்கள் அவர்களின் நலன் தொடர்பாக யோசிக்கும் போது முஸ்லிம் மாகாண அதிகார அலகை நிபந்தனையாக முன்வைப்பது முஸ்லிம்களுக்கான உரிமையும், கடமையும் ஆகும் இவ்வாறு றபீயுடீன் ஜமாலி கூறினார்.

No comments

Powered by Blogger.