Header Ads



''முடங்கிப்போய் நிற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்''

(கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்)

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முழுமையாக முற்றுப்பெற்றுள்ளன. அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்போரின் மீள்குடியேற்றப் பணிகள் பலமட்டங்களிலும் பல்வேறு பிரிவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 300,000 மேற்பட்ட வன்னித்தமிழ் மக்களை முடியுமானவரை வேகமாக மீள்குடியேற்றம் செய்துவிட்டதாக அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மார்தட்டிக்கொள்கின்றது. மக்கள் கம்பிவேலியினாலான மாணிக்க பண்ணை (மெனிக் பார்ம்) முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டு தமது பூர்வீக இருப்பிடங்களை நோக்கி அனுப்பப்பட்டுள்ளார்கள். எனினும் இன்னும் அவர்கள் தமது அடிப்படை வசதிகளைக்கூட பெறமுடியாமல் தவித்துக்கொண்டிருப்பதாகவும்; தமது மீள்குடியேற்றம் என்பது பெயரளவிலானதே என்று தமிழ் மக்கள் தரப்பில் பலமானதும் தொடர்ச்சியானதுமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இவ்வாறு உள்நாட்டில் யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றுமொரு பிரிவினர்தான் “வடக்கு முஸ்லிம்கள்” ஆவர். 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இரண்டு மணித்தியால அவகாசத்தில் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு கடந்த 23 வருடங்களாக வடக்கிற்கு வெளியே பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த நிலையில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவற்றில் காணப்படும் தடங்கல்கள் தொடர்பாகவே இக்கட்டுரை விசேடமாக ஆராய்கின்றது. 

பல நூற்றாண்டுகால வரலாற்றை உடைய யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பூர்வீக பிரதேசங்களை விட்டும் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வானது விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வு மட்டுமின்றி ஒரு வரலாற்றுத்தவறாகவும் பலராலும் இன்றுவரை பார்க்கப்படுகின்றது. ஒரு இனச்சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலின்கீழ் இம்மக்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட நிகழ்வானது ஒரு மனிதாபிமானமற்ற ஒரு செயல் மட்டுமின்றி எந்தவொரு நாகரீக சமூகத்தினாலும் ஜீரணிக்க முடியாத ஒரு துரோகச் செயலாகும். இன்று இவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்கொள்ளப்படும் சவால்களைப் பற்றி ஆராயமுன்னர், முதலில் இவர்கள் எவ்வாறானதொரு அரசியல் பின்புலத்தில் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை சிறிது ஆராய்வது சாலப்பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் அவ்வாறதானதொரு ஆய்வின் மூலம்தான் இன்றைய யதார்த்த நிலையை நாம் சரிவரப் புரிந்துகொள்ள முடியும். 

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் இறுதி பிரிவினரை ஏற்றிய கப்பல் திருகோணமலை துறைமுகத்தை விட்டும் இந்தியாவை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தபோது விடுதலைப் புலிகள் ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டனர். அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாஸாவுடன் செய்துகொண்ட தமது இரகசிய பேச்சுவார்த்தைக்கும் தமது இராஜதந்திரத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரின் வெளியேற்றத்தைப் பார்த்தனர். ஏறத்தாள 32 மாதங்கள் (1987 ஜூலை-1990 மார்ச்) தமக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்திய அமைதி காக்கும் படையினரை தமது பிரதேசத்தை விட்டும் வெளியேற்றிய பின்னர் வழமை போன்றே தமது காலம் கடத்தும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் ஆரம்பித்தார்கள். தம்மை இராணுவரீதியாக பலப்படுத்திக் கொள்ளவே இந்த பேச்சுவார்த்தை மூலம் கிடைத்த நேரத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள் என பின்னர் இலங்கை அரசாங்க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. வழமையாகவே விடுதலைப் புலிகள் சமாதான காலங்களை அல்லது யுத்தநிறுத்த காலங்களை தமக்கு சார்பாகவே பயன்படுத்த முனைந்தமை யாவரும் அறிந்தவொரு பொதுவான விடயமாகும். பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் தீர்வில் ஒருபோதும் நம்பிக்கை கொண்டிருக்காத விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் தம்மை இராணுவ ரீதியாக மீள்கட்டியெழுப்பிக் கொள்ளவே பேச்சுவார்த்தை காலங்களையும் அதன் சூழ்நிலை அமைவுகளையும் பயன்படுத்தியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அபிப்பிராயமாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான குறித்த இந்த பேச்சுவார்த்தை எனும் ‘தேன்நிலவு’ம் வழமை போன்றே அதிக காலம் நீடிக்கவில்லை. அரசாங்கத்தரப்பில் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துச்செல்ல நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர் ஏ. ஸீ. எஸ். ஹமீத் பலமுறை யாழ்ப்பாணம் சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினாலும் கூட ஒவ்வொரு முறையும் அவர் விரக்தியுடனேயே கொழும்புக்கு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஒரு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளவில்லையென அரசாங்க தரப்பினர் உறுதியாக நம்பினர். விடுதலைப் புலிகளின் நோக்கமும் மனோநிலையும், தமக்கு பாரிய அழிவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி தமது நடமாட்டத்தையும் கெரில்லாத் தாக்குதல்களையும் பெருமளவு வன்னிக்காடுகளுக்குள் மாத்திரம் முடக்கி தமது போராட்டத்திற்கு பெரும் சவாலாக இருந்த இந்திய இராணுவத்தை முழுமையாக தமது தாயக மண்ணில் இருந்து வெளியேற்றுதல் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் ஆட்சி செய்த வரதராஜப் பெருமாளின் மாகாண அரசாங்கத்தை இல்லாமல் செய்தல் என்ற இரண்டு மிகப் பெரும் விடயங்களையும் கனகச்சிதமாக செய்துமுடிப்பதிலேயே இருந்தது. விடுதலைப் புலிகள் தம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தன்னை இலங்கை அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு முன்பதாகவே விடுதலைப் புலிகள் தமது இலக்கை அடைந்து விட்டார்கள். இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் உள்நோக்கத்தை அறிந்து கொண்டபோது அது ஓர் காலம் தாழ்ந்த ஞானமாகவே இருந்தது.

இந்திய அமைதி காக்கும் படையினரின் பிரசன்னம் இலங்கையில் இருக்கும்போதே 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் செய்துகொண்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையானது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதைய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில், நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த ஏறத்தாள 600 சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிஸாரை சுட்டுக்கொல்வதுடன் இரண்டாம் கட்ட ஈழப்போரை விடுதலைப் புலிகள் தொடங்கி வைத்தனர். தொடரும்

No comments

Powered by Blogger.