Header Ads



முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் குறித்து சிங்கள அரசியல்வாதிகளின் அபிப்பிராயம்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளின் தொகுப்பு-

அமைச்சரும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஸ் குணவர்த்தன –

அரசியல்வாதி அல்லாத ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளது. வடக்குத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக அரசியல்வாதி ஒருவரை நியமிக்க முடியாத அளவுக்கு கூட்டமைப்பு பலவீனடைந்துள்ளது. அதனால் தான் அரசியல்வாதி அல்லாத ஒருவரை தேர்தலில் களமிறக்கி மக்களை கவர முயற்சிக்கின்றனர். விக்னேஸ்வரன் அரசியலுக்கு புதியவர். அரசியல் ரீதியில் அவரை எமக்குத் தெரியாது.  எனினும் வடக்குத் தேர்தலில் ஆரோக்கியமான போட்டியை வழங்குவதற்கு ஆளும்கட்சி எதிர்பார்க்கிறது.

அமைச்சர் பசில் ராஜபக்ச-
.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் இந்தத் தெரிவை நாங்கள் வரவேற்பதுடன் மகிழ்ச்சியும் அடைகிறோம்.  விக்னேஸ்வரன் ஒருபோதும் வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கமாட்டார்.

இந்தத் தெரிவின் மூலம் வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு அல்ல என்பது தெளிவாகிறது. அவர்கள் இந்த தேர்தலை வைத்து அனைத்துலக ரீதியில் வேறு ஒரு நோக்கத்தை அடைய முயற்சிக்கின்றனர். மாறாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அவர்கள் எண்ணவில்லை. முதலமைச்சர் வேட்பாளரும் தான் அனைத்துலக உதவியுடன் புரட்சி செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

மாகாணசபைக்கு செல்வதன் மூலம் அனைத்துலக ரீதியில் புரட்சி செய்ய முடியாது. அதற்கு நாடாளுமன்றம் வரவேண்டும். அவர் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்து இதனை செய்ய முயற்சிக்கலாம். வடக்குத் தேர்தல் விடயத்தில் கூட்டமைப்பினால் எடுக்கப்படும் முடிவுகள் புலம்பெயர் மக்களினால் தீர்மானிக்கப்படுகின்றன. வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் ஊடாக இந்த விடயம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மக்களின் துன்பங்களை நீக்கவோ அவர்களின் துயர்துடைக்கவோ கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை. இந்தத் தேர்தலை பயன்படுத்தி அவர்கள் வேறு ஒரு நோக்கத்தை அடைய முயற்சிக்கின்றனர். கூட்டமைப்பின் இந்தத் தெரிவானது வடக்கு மக்களுக்கோ நாட்டின் எதிர்காலத்துக்கோ ஆரோக்கியமாக அமையாது.”

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர –

அனைத்துலகத்தால் அங்கீகரிக்கப்படக் கூடிய விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம் கூட்டமைப்பு தனது விடுதலைப் புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க முனைந்துள்ளது. மாவை சேனாதிராசா முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்.இதனை அனைவரும் அறிவார்கள். குறிப்பாக இந்தியாவுக்கு இது நன்றாகத் தெரியும். இலங்கைத் தீவில் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. எனவே மாவை சேனாதிராசாவை வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவையை நிறுத்துவதை இந்தியா விரும்பாது.

அதேவேளை, விக்னேஸ்வரனின் இரண்டு மகன்மாரும் சிங்களப் பெண்களையே மணந்துள்ளனர். இது மட்டுமல்லாது உயர்பதவி வகித்தவர், படித்தவர், இதனை அனைத்துலக சமூகத்துக்கு கூட்டமைப்பு எடுத்துக் கூறும். விக்னேஸ்வரனால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அனைத்துல சமூகசத்துடன் ஒத்துப் போகக் கூடியவர் என்பதையும் கூட்டமைப்பு எடுத்தியம்பும். இதுதான் சம்பந்தனின் தந்திரமான வியூகம். இந்தியாவின் உளவுப்பிரிவான ‘‘றோ’’ வின் ஆலோசனையும் சம்பந்தனின் தந்திரமான அரசியல் வியூகமுமே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படக் காரணம்.

இது பயங்கரமான – நாட்டுக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலை. இதனை தடுத்து நிறுத்த  மஹிந்த ராஜபக்ஸ அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் பதவியையோ, வெளிநாட்டு தூதுவர் பதவியையோ வழங்கி முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

No comments

Powered by Blogger.