பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - எம்.பி.க்கள் சிறை பிடிப்பு
கடந்த மே மாதம் பல்கேரியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போது ஆட்சி அமைத்துள்ள சோசியலிஸ்ட் ஆதரவுக்கட்சி நாடாளுமன்றத்தில் 240க்கு 120 இடங்களை பெற்றது. தற்போது தேசியகட்சி ஒன்றின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஊடக தொடர்பாளரான தெல்யான் பீவ்ஸ்கி தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது, பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.
இதனை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த நியமனம் உடனடியாக திரும்பப்பெறப்பட்டது. பின்னர் இந்த ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது என்றும், அரசு பதவி விலகவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 40 நாட்களாக நடைபெற்றுவந்த போராட்டம் நேற்று தீவிரமடைந்தது. நேற்று மாலை அந்நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள் போன்றவர்களை வெளியே வரவிடவில்லை. உறுப்பினர்களை அழைத்துச் செல்ல ஒரு பேருந்து உள்ளே வந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதச் சங்கிலி அமைத்தும், கற்களை எறிந்தும் அவர்களை வெளியே வரவிடாமல் தடுத்தனர். அப்போது அரசு பதவி விலகவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதில் காயம் அடைந்தனர். பொதுமக்களிலும் 4 பேர் காயமடைந்தனர். மூன்று அமைச்சர்கள்,.30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் என 109 பேர் மக்களால் அங்கு சிறை வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. தங்களுடைய கோரிக்கை நிறைவேறும்வரை முற்றுகை தொடரும் என்று அவர்கள் கூறினர்.
பல்கேரியாவின் அதிபர் ரோசென் பிலெவ்னிலிவ், பொதுமக்களை அமைதியாகவும், நாகரீகமாகவும் போராட்டத்தில் ஈடுபடும்படி அறிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment