Header Ads



'முர்ஸிக்கு எதிரான எந்த சதி முயற்சியும் இறந்த உடல்களுக்கு மேல்தான் ஏற்பட வேண்டும்'

(Tn) எகிப்தில் நிலவும் நெருக்கடிக்கு 48 மணி நேரத்திற்குள் தீர்வுகாணப்பட வேண்டும் என அந்நாட்டு இராணுவம் காலக்கெடு விதித்துள்ளது. எனினும் இந்த காலக்கெடுவை நிராகரித்த ஜனாதிபதி முர்சி, இராணுவத்தின் இந்த அறிவிப்பு குழப்பத்தை மாத்திரமே ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் வெளியிட்ட காலக்கெடு தேசிய அளவில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என கூறிய முர்சி தனது நல்லிணக்க செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் கூறினார்.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசாங்கமும், எதிர்க் கட்சியும் தவறினால் அதில் தாம் தலையிடுவோம் என்று இராணுவம் எச்சரித்தது. ஆனால் இந்தக் காலக்கெடு என்பது ஒரு இராணுவம் புரட்சிக்கு வழி செய்யும் என்ற கருத்தை இராணுவம் மறுத்துள்ளது.

எனினும் திங்கட்கிழமை இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் 48 மணி நேரத்திற்குள் தீர்வுகாணப்படாத பட்சத்தில் எதிர்கால அரசியலுக்கான பாதையை இராணுவம் வகுக்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு அரச எதிர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எனினும் முர்சிக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட சட்ட உரிமைக்கான கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

‘ஜனநாயகத்திற்கு எதிரான இராணுவத்தின் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது’ என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இராணுவத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து திங்கட்கிழமை இரவு நாட்டின் பல பகுதிகளிலும் ஜனாதிபதிக்கு ஆதரவான பேரணி நடத்தப்பட்டது. எனினும் தலைநகர் கெய்ரோவின் தஹ்ரியார் சதுக்கத்தில் நிலைகொண்டிருக்கும் எதிர்ப்பாளர்கள் இராணுவ அறிவிப்புக்கு ஆதரவாக ஆரவாரித்தனர்.

அமைச்சர்கள் ராஜினாமா

எகிப்தில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் ஜனாதிபதியை தனிமைப்படுத்தும் வகையில் பல அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதில் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மொஹமட் காமல் அம்ர் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

ஏற்கனவே சுற்றுலாத்துறை அமைச்சர் ஷிஹாம் சாசூ, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அதப் ஹில்மி, நீதி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஹாதம் பகாடொ, நீர் அமைச்சர் அப்தல் காவி கலிபா மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் காலித் அப்தல் ஆல் ஆகியோர் நேற்று முன்தினம் தமது பதவியை ராஜினாமா செய்தனர்.

அதேபோல் தனது இராணுவ ஆலோசகர் சமி எனனின் ஆதரவும் ஜனாதிபதிக்கு பறிபோயுள்ளது. தனது பதவியை ராஜினாமா செய்த சமி எனன், இராணுவம் மக்களின் எதிர்பார்ப்பை கைவிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதற்ற சூழல் குறித்து ஜனாதிபதி முர்சியுடன் தொலைபேசி ஊடாக உரையாடியதாக வொஷிங்டன் நேற்று உறுதி செய்தது. இதன்போது எகிப்தின் ஜனநாயக செயற்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும், ஆனால் தனி கட்சி அல்லது குழுவுக்கு ஆதரவளிப் பதில்லை என்றும் ஒபாமா முர்சியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஆர்ப்பாட்டங்களில் இடம் பெறும் வன்முறைகள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து ஒபாமா கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். முர்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதலில் இதுவரை ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்க பிரஜை ஒருவரும் பலியாகியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஒட்டுமொத்த மாக 16 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அரச எதிர்ப்பாளர்கள் கெய்ரோவில் இருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்தை முற்றுகையிட்டு தீவைத்து தகர்த்தனர். எனினும் நேற்றைய தினத்தில் பாரிய அளவான எந்த வன்முறையும் நிகழவில்லை என கெய்ரோவிலிருக்கும் அல் ஜkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘பாரிய பேரணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. முர்சி ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்’ என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் அரச எதிர்ப்பாளர்கள் தஹ்ரியார் சதுக்கத்தை மையமாகக் கொண்டு முகாமிட்டுள்ளனர். அதேபோன்று முர்சி ஆதரவாளர்கள் கெய்ரோவின் ரபா அல் அதவியா பள்ளிவாசல் இருக்கும் நாஸ்ர் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு எப்போது, என்ன தீர்வுடன் உரையாற்றுவார் என இரு தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அல் ஜkரா செய்தியாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினர் மொஹமட் அல் பில்தாஜி, முர்சி ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ‘எகிப்து நகரம், கிராமங்களில் இருக்கும் அனைத்து மக்களும் வீதிக்கு இறங்க தயாராகுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ரபாஹ் அல் அதவியா பள்ளிவாசலுக்கு வெளியில் கடந்த நான்கு தினங்களாக தரித்து நிற்கின்றனர். ‘எந்த சதி முயற்சியும் எமது இறந்த உடல்களுக்கு மேலால்தான் ஏற்பட வேண்டும்’ என பில்தாஜி எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.