Header Ads



டுபாயில் அரசை கவிக்க சதி செய்தார்களாம் - 64 பேருக்கு சிறைத் தண்டனை,

(Tn) அரசை கவிழ்க்க சதிசெய்த குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 64 இஸ்லாமியவாதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு 13 பெண்கள் உட்பட 25 பேர் விடுவிக்கப்பட்டதாக அபூதாபி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட 94 பேரில் 56 பேருக்கு 7 முதல் 10 ஆண்டு சிறையும் 8 பேருக்கு 15 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையையும் பெடரல் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அல் இஸ்லாஹ் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அல் இஸ்லாஹ் அமைப்பு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புபட்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாரிய அளவில் பரவாத நிலையில் அந்நாட்டு வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய வழக்கு விசாரணையாக இது பதிவானது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 2012 மார்ச் தொடக்கம் டிசம்பர் வரையான காலத்தில் வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என அரசை கவிழ்க்க சதிசெய்த குற்றச்சாட்டில் பலர் கைதுசெய்யப்பட்டனர்.

எனினும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் செயற்பாடு குறித்து மனித உரிமை அமைப்புகள் கடும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளன. இந்த கைதிகள் முறையற்று நடத்தப்பட்டதாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதகாவும் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டின் அரசியல் முறைக்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பை உருவாக்கி அரசை கவிழ்க்க திட்டமிட்டதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்டமா அதிபர் சலம் கொலை கடந்த பெப்ரவரியில் கூறியிருந்தார்.

மன்னர் குடும்பத்தால் ஆளப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அரசியல் கட்சிகளை அமைக்கவோ ஆர்ப்பாட்டம் நடத்தவோ தடையுள்ளது.

இந்நிலையில் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளோர் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் உரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.