சாமஸ்ரீ - தேசமானிய பட்டம் பெற்றார்
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியும், அக்கரைப்பற்று உதவி தவிசாளருமான ஐ.எல்.ஏ.ஹக்கீம் 2013ஆம் ஆண்டிற்கான சாமஸ்ரீ, தேசமானிய பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (29.06.2013) அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் திரு. மல்லவ ஆராய்ச்சி தலைமையில் இரத்தினபுரி மாநகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு மற்றும் கௌரவிப்பு விழாவின் போதே இவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பிரபல சமுக சேவையாளரான இவர் சுமார் 18 வருடங்கள் பொலிஸ் சேவையில் கடமையாற்றி பல பாராட்டுதல்களையும், பரிசில்களையும் பெற்றுள்ளார். 1995 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணை அதிகாரியாக கடமை புரிந்துள்ளதுடன், அல் பாயிஸா மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும், கிராம அபிவிருத்திச் சங்கப் பொருளாளராகவும், அக்கரைப்பற்று அரச பகிரங்க ஓய்வூதிய சங்கத்தின் உப தலைவராகவும், பள்ளிக்குடியிருப்பு அபிவிருத்தி சங்கங்களின் சம்மேளனத் தலைவராகவும் இன்னும் பல சமுக சேவை அமைப்புக்களிலும் சேவையாற்றிவருகிறார்.
இவரின் முயற்சியினால் அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லையில் ஹக்கீம் பீ.சி எனும் இவரின் பெயரில் பாதை ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மக்கள் நேசன், கருங்கொடியான் எனும் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. சமாதான நீதிவானான இவர் தற்போது அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளருமாவார்.

Post a Comment