Header Ads



முஸ்லிம்களை துரத்தும் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும்..!!

(எம்.எஸ்.சஹாப்தீன்)

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாத சக்திகளின் தொழிற்பாடுகள் மீண்டும் தீவிரமாக தலை விரித்தாடிக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றன. முஸ்லிம்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தாம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு நாட்டின் பாதுகாப்புக்கே இவ்வாறு நாம் நடந்து கொள்கின்றோம் என்று பௌத்த பேரினவாத தேரர்கள் தெரிவிக்கின்றார்கள். இவர்கள் தாம் நினைக்கின்றவைகளை எந்த அச்சமுமின்றி சட்டத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் முன் வைக்கின்றவைகளுக்கு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டத்தினால் தங்களை எதுவும் செய்ய முடியாதென்ற நம்பிக்கையே அவர்களின் முஸ்லிம் விரோத நடத்தைகளுக்கு உந்து சக்தியாக இருக்கின்றது.

ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட போது தமது தீவிரத்தைக் குறைத்துக் கொண்ட பௌத்த பேரினவாத தேரர்களின் தலைமையிலான குழுவினர், முஸ்லிம் விரோத நடத்தைகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதனைக்  காணக் கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைத்து அணிந்து செல்லும் நிகாப்  ஆடையை முற்றாக தடை செய்ய வேண்டுமென்றும், அதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டுமென்றும் பொது பல சேன தெரிவித்துள்ளது.

இந்த நிகாப் ஆடையைப் பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டிருப்பதாகவும் பொது பல சேன தெரிவித்துள்ளது. இந்த நோக்கங்களுக்காகத்தான் பொது பல சேன நிகாப்பை தடை செய்ய வேண்டுமென்று கூறுவதாக இருந்தால் நாட்டில் உள்ள மதுபானசாலைகள், இரவு கேளிக்கை விடுதிகள் என எத்தனையோ பாவப்பட்ட இடங்கள் உள்ளன அவற்றையும் தடை செய்யுமாறு கோர வேண்டும். அவற்றைச் செய்யாது முஸ்லிம் பெண்களின் நிகாப் ஆடையின் மீது மட்டும் இவர்களின் கவனம் திரும்பி இருப்பது முஸ்லிம்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியேயாகும்.

பெண்கள் அரைகுறையாக ஆடைகளை அணிந்து செல்லும் போது அதனால் எற்படுகின்ற விபரீதங்கள் ஏராளமாகும். ஆண்களை பாவத்தில் ஈடுபடச் செய்கின்றது. ஆதலால், பெண்களை அரைகுறை ஆடைகளில் இருந்து முழுமையான ஆடைகளை அணிவதற்கு தூண்டுவதற்கு பதிலாக முஸ்லிம் பெண்களின் நிகாப் ஆடையை தடை செய்ய வேண்டுமென்று கூறுவது அறிவுடமையாகாது.

சில வேளைகளில் அரைகுறை ஆடைகளை அணிவது அவர்களின் சுதந்திரம் என்று வாதிடவும் கூடும், அரைகுறை ஆடை அணிவது அவர்களின் சுதந்திரம் என்றால், நிகாப் போன்ற ஆடைகளை அணிவது முஸ்லிம் பெண்களின் சுதந்திரமாகும். ஒருவர் தான் பின்பற்றும் மதத்தின் பிரகாரம் ஆடைகளை தெரிவு செய்வதற்கும், அணிவதற்கும் பூரண சுதந்திரம் இருக்கின்றது. அதற்கு தடைவிதிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

இதே வேளை, முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைத்து அணிந்து கொள்ளும் நிகாப் ஆடை விடயத்தில் முஸ்லிம்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டியும் உள்ளது. ஏனெனில், முஸ்லிம் பெண்கள் நல்ல நோக்கத்தின் அடைப்படையில் அணிந்து செல்லும் நிகாப் ஆடையைப் பயன்படுத்தி பாதாள உலக உறுப்பினர்கள், கொள்ளைக்காரர்கள் போன்றவர்கள் தப்பித்துக் கொள்ளுகின்ற சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிகாப் ஆடையை பயன்படுத்தி வங்கிக் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளார்கள். முஸ்லிம் பெண்கள் அணிந்து கொள்ளும் நிகாப் ஆடையை பயன்படுத்தி இவை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதனாலும் முஸ்லிம் பெண்களின் நிகாப் ஆடை மீது சுலபமாக தடை செய்ய வேண்டுமென்று கோரிக்கைவிடுப்பதற்கு பொது பல சேனவுக்கு காரணமாக அமைந்து விட்டது. ஆதலால், முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து நிகாப் அணிந்து கொள்வதில் கருத்து முரண்பாடுகளும் உள்ளன. ஆதலால், உலமாக்கள் ஒரு தீர்வினை எடுத்தல் வேண்டும். அதற்காக நாம் அடிபணிந்து செல்வதாகவும் இருக்க முடியாது. நீண்ட கால சிந்தனையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

இதே வேளை, தமிழ் பிரதேசங்களிலும் முஸ்லிம் மாணவிகள் அணிந்து செல்லும் பர்தாவுக்கு தடைகளை ஏற்படுத்துகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. அம்பாரை மாவட்டத்தில் கல்முனை கார்மல் பத்திமா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு அப்பாடசாலையின் அதிபர் பர்தா அணிந்து கொண்டு வரக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தார். இப்பிரச்சினையை கல்முனை வலயக் கல்வி அலுவலகம தலையீடு செய்து முடிவுக்கு கொண்டு வந்தது.

பதுளையில் தமிழ் பாடசாலை ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கொண்டு வர முடியாதென்று பாடசாலையின் அதிபர் கட்டளையிட்டிருந்தார். இதனை எதிர்த்து பாடசாலையின் முஸ்லிம் மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் முஸ்லிம் மாணவிகள் அணியும் பர்தாவுக்கு அதிபரினால் தடை போட முடியாதென்று தீர்ப்பு வழங்கியது.

தற்போது திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி தமிழ் மகாவித்தியாலயத்தில் 93 முஸ்லிம் மாணவிகள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இம்மாணவிகள் வழமை போன்று கடந்த 03.07.2013 புதன்கிழமை பர்தா அணிந்து கொண்டு பாடசாலைக்கு சென்ற போது பாடசாலையின் அதிபர் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கொண்டு இனிமேல் பாடசாலைக்கு வரமுடியாதென்று கட்டளையிட்டுள்ளார். இதனால், இம்மாணவிகள் பாடசாலையின் கதவிற்கு வெளியே பரிதாபமான நிலையில் அநாதரவாக நீண்ட நேரம் நின்றிருக்கின்றார்கள். இதனை கேள்வியுற்ற இம்மாணவிகளின் பெற்றோர்கள் பாடசாலைக்கு வந்து போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் அபிவிருத்திக் குழுவினர், பாடசாலையின் நிர்வாகத்தினர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இப்பிரச்சினை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த போது, சில தமிழ் சகோதரர்கள் முஸ்லிம் மாணவிகளின் பர்தா உடையால் தமிழர்களின் கலாசாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதே வேளை, இம்மாணவிகளை அருகில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றிக்கு இடமாற்றம் செய்வதற்கு தீர்மானித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தீர்மானம் பிழையானதொரு முன்மாதிரியாகும். சிங்கள பிரதேசத்தில் சில பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து செல்வதில் பிரச்சினைகளை சந்தித்து, போராடி அந்த உரிமையை வென்று எடுத்துள்ளார்கள். இந்த நிலையில் நிலாவெளி பாடசாலையில் கல்வி கற்ற முஸ்லிம் மாணவிகளை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்படுமாயின் அதிபரின் சட்ட விரோத இனவாதச் சிந்தனைக்கு அடிபணிந்தாகவே இருக்கும். நாட்டின் சட்டம் தனி நபர்களுக்கும், இனவாத இயக்கங்களுக்கும் விட்டுக் கொடுப்பை செய்து கொண்டிருந்தால் நாட்டை கட்டி எழுப்ப முடியாது. சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக காட்டாட்சியே இடம்பெறும். ஆதலால் சட்டம் தனது கடமையை செய்வதற்கு வழிகள் திறக்கப்பட வேண்டும்.

பொது பல சேன முஸ்லிம்களின் நிகாப் ஆணடைக்கு தடைவிதிக்க வேண்டுமென்று கூறிய போது தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால், தமிழ் பாடசாலை ஒன்றில் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவுக்கு அதிபரினால் தடைகளை எற்படுத்திய போது அதற்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் குரல் கொடுக்கவில்லை. தமிழ் அரசியற் தலைமைகள் இரட்டை வேடம் போட்டுள்ளதாகவே இருக்கின்றது. சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் போது ஒரு முகமும், தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் போது ஒரு முகமும் காட்டுவதனை அவதானிக்கும் போது தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களை தங்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

நிலாவெளி தமிழ் மகாவித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சிகைளுக்கு தீர்வு காண்பதற்கு உதவுமாறு கிழக்கு மாகாண உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.தண்டாயுதபாணிக்கு கடிதமொன்றினை (09.07.2013இல்) எழுதியுள்ளார். ஆனால், தண்டாயுதபாணி இப்பத்தியை நாம் எழுதும் வரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பெரிதாக கதைத்துக் கொண்டாலும், செயலில் அதனைக் காண முடியாதிக்கின்றது. இந்த நிலையில் உள்ளவர்களை நம்பி முஸ்லிம்கள் எவ்வாறு இணைந்து பயணிக்க முடியும். ஆற்றைக் கடக்கும் வரை முஸ்லிம்களை பயன்படுத்திவிட்டு, பின்னர், நீ யாரோ நான் யாரோ என இறுதியில் முடிவை சொல்லுவார்கள் என்;ற நடத்தைகளைக் கொண்டவர்களாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள்ளார்கள்.

பாடசாலையின் முஸ்லிம் மாணவிகளை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கு மாகாண கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே அன்றி, கல்விக் கொள்கைக்கு மாற்றமாக ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

ஒரு சில முஸ்லிம் பாடசாலைகளிலும் தமிழ் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மாணவர்களுள் ஆண் மாணவனைப் பார்த்து தொப்பி அணிந்து கொண்டு வர வேண்டுமென்றோ, பெண் மாணவிகளைப் பார்த்து பர்தா அணிந்து கொண்டு வர வேண்டுமென்றோ எந்த முஸ்லிம் பாடசாலை அதிபரும் கட்டளையிட்டதாக பதிவுகள் எதுவுமில்லை. இந்த மாணவிகளினால் முஸ்லிம் மாணவர்களின் கலாசாரம் பாதிக்கப்படுகின்றது என்று வேதனைப்பட்டதும் இல்லை.

முஸ்லிம்கள் மீது ஏக காலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களிலும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களிலும் கலாசார ரீதியான எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது இனவாதப் போக்காகும். இனவாத சிந்தனைதான் இந்த நாட்டை சீரழித்தது என்ற உண்மையை தெரிந்து இருக்கின்ற நிலையிலும், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சிந்தனையை மேற்கொள்வது தடுக்கப்பட வேண்டும்.

இதே வேளை, கொழும்பு கிராண்ட்பாஸ் மோலவத்தை மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசலின் புதிய கட்டிடத் தொகுதி கடந்த 04.07.2013 வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளிவாசலை உடனடியாக மூட வேண்டுமென்று பௌத்த தேரர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து பள்ளிவாசல் மூடப்பட்டு அருகில் உள்ள பழைய பள்ளிவாசலில் தொழுகைகள் இடம்பெற்றன.

இப்பள்ளிவாசல் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றது. பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள விகாரை ஒன்றில் நிற்கும் அரச மரத்தின் வேர் இப்பள்ளிவாசல் காணிக்குள்ளும் இருப்பதனால் எற்பட்ட சர்ச்சை காரணமாக பள்ளிவாசலில் தொழுகைளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனைத் அடுத்து பழைய பள்ளிவாசலுக்கு அருகில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு திறக்கப்பட்ட போது. அதனையும் முடுமாறு பௌத்த தேரர்கள் எதிர்ப்புக் காட்டியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் பயப்படத் தேவையில்லை என்று அரசாங்கமும், அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் கட்சிகளும் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தாலும் முஸ்லிம் மீதான நெருக்கீடுகளும் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

முஸ்லிம்களை இந்த நெருக்குவாரத்தில் இருந்து விடுவிக்க வேண்டுமாயின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்படல் வேண்டும். இவர்களை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளை முஸ்லிம் புத்திஜீவிகள் எடுக்க வேண்டும். முஸ்லிம் புத்திஜீவிகள் பார்வையாளர்களாக இருக்க முடியாது. சமூகத்தில் வெறும் பார்வையாளனாக இருப்பவர்களை புத்திஜீவிகள் என்று அழைக்கவும் முடியாது.

2 comments:

  1. தற்போதுள்ள சுயநலவாத அரசியல் தலைவர்கள் நிச்சயமாக ஒன்று படமாட்டார்கள். அப்படி ஒன்றுபட்டாலும், கூழ் முட்டைகளை ஒரே கூடையில் இடுவதால் நாற்றமே அதிகரிக்கும்.
    தக்வா உடைய புதிய தலைமைத்துவம் அடையாளம் காணப்பட வேண்டும் அல்லது உருவாக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. Why can't we file a case against principal of Nilaweli school. There are very good Lawers in our community but unfortunately the situation is that who is going to bell the cat. So we have to think of the future and make necessary steps to counter this type of problems with the panel of good Lawers, which should be formed for the sake of our community and the funds for the activities should be channelled through. scholors, Lawers, doctors, engineers, other professionals and business community you all in any aspects of your calibre shape our community so, this appeal is to you and try to make our way clear for future generations. May Almighty guide all in the right path.

    ReplyDelete

Powered by Blogger.