எகிப்தின் இராணுவ சதிப் புரட்சியின் பின்னால் சர்வதேச பிராந்திய ஆதிக்க சக்திகள்!
(கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனமுல்லாஹ் நளீமி
இலங்கை ஒருங்கிணைப்பாளர் - சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம்)
உண்மையில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அரபு வசந்தம் வெற்றியின் விளிம்பில் இருக்கும் பொழுது இடம் பெற்ற உள்ளக இராணுவ சதியொன்றின் மூலமே ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப் பட்டார், புரட்சியை காவு கொண்ட உயர் இராணுவ கவுன்ஸில் நயவஞ்சகத்தனமாக முன்னால் சர்வாதிகாரியின் எச்ச சொச்சங்களினதும் பிராந்திய சர்வதேச எஜமானர்களினதும் தேவைகேற்ப அரபு வசந்தத்தைக் கையாண்டனர்.
ஹுஸ்னி முபாரக் பதவியிலிருந்த அகற்றப்பட்டது முதல் 2010 நவம்பர் மாதம் 28/29 ஆம் திகதிகளில் முதலாம் கட்டமாகவும் டிசெம்பர் மாத14/15ஆம் திகதிகளில் இரண்டாம் மூன்றாம் கட்டங்களாகவும் பாராளுமன்றத் தேர்தல்கள் இடம் பெற்று 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப் படும் வரைக்கும் சுமார் ஒரு வருட காலம் அரபு வசந்தப் போராளிகள் உயர் இராணுவ கவுன்சிலுடன் மேற்கொண்ட போராட்டங்களை எகிப்து மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
எழுச்சிக்குப் பின்னரான முதலாவது ஜானதிபதித் தேர்தல் 2012 மே மதம் 23/24ஆம் திகதிகளிலும் இரண்டாம் கட்டமாக ஜூன் மாதம் 16/17 ஆம் திகதிகளிலும் இடம் பெறுகின்றது, முபாரக்கின் ஆட்சின் கீழ் இருந்த எவரும் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கக் கூடாது என்ற வேண்டுகோலையும் மீறி உயர் இராணுவ கவுன்சிலால் முதலாவது பிரதம மந்திரியாக நியமிக்கப் பட்டு பின்னர் மக்கள் எதிர்ப்பால் ௨௦௧௧ மார்ச் மாதம் பதவியில் இருந்து நீக்கப் பட்ட அஹமது ஷபீக்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உயர் யாப்பியல் நீதிமன்றம் அனுமதிக்கின்றது.
இரண்டாம் கட்ட ஜனாதிபதித் தேர்தலில் முஹம்மது மூர்ஸி வெற்றிபெறுவது நிச்சயம் என்று அறிந்து கொண்ட இராணுவ உயர் கவுன்ஸில் இக்வான்களினதும் இஸ்லாமிய வாதிகளினதும் அதிகரித்த செல்வாக்கையுடைய, மிகக் கடினமான பிரசவ வேதனையின் பின் அரபு வசந்தப் போராளிகள் வென்றெடுத்த பாராளுமன்றத்தை அது இடம் பெற்ற தேர்தல் முறைகளில் குளறுபடி இருப்பதாக கூறி உயர் அரசியலமைப்பு நீதிமன்றின் தீர்ப்பு ஒன்றினைப் பெற்று இராணுவ ஆட்சியாளர் 2012 ஜூன் மாதம் 14 ஆம் திகதி கலைத்து விட்டமை இராணுவம் செய்த மற்றுமொரு சதிப் புரட்சி என ஆய்வாளர்களால் வர்ணிக்கப் பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னர் பாராளுமன்றத்தை இராணுவம் கலைத்ததர்கான பிரதான நோக்கம் அரசியல் ஆய்வாளர்களுக்கு புரியாமல் இல்லை, நடைமுறையில் இருந்த சட்ட யாப்பின் படி ஜனாதிபதியின் முழுமையான கட்டுப் பாட்டிலேயே இராணுவம் இருந்தது, ஜனாதிபதியே அதன் தலைவர்களை நியமனம் செய்வார், யுத்தம் சமாதானம் தொடர்பான விவகாரங்களின் இறுதி முடிவு ஜனாதிபதியிடமே இருந்தது, உண்மையில் இவாறான அதிகாரங்கள் புதிய ஜனாதிபதியிடம் இருப்பது இராணுவம் சேவை செய்த பிராந்திய மற்றும் சர்வதேச சதிகார சக்திகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் இராணுவத்தின் அதிகார வரம்புகள் என்பவற்றை இஸ்லாமிய வாதிகளைக் கொண்ட புதிய பாராளுமன்றம் அதனால் நியமிக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு சபை தீர்மானித்து விடக் கூடாது என்பதில் அமெரிக்காவும் நேச நாடுகளும் கவனமாக இருந்தன அமெரிக்காவின் இரண்டு முக்கிய பிரதிநிதிகளான ஜோன் மக்கையின்,ஜான் கெர்ரி ஆகியோர் ஒரு வர்த்தக தூதுக் குழுவுக்கு தலைமை தாங்கி எகிப்துக்கு இந்தக் காலப் பிரிவில் விஜயம் செய்தனர்.
இந்த பின்புலத்தில் தான் பாராளுமன்றத்தை கலைத்தது மாத்திரமன்றி புதிய அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளை முடக்கி எதிர்காலத்தில் அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகளை தாமே முன்னெடுத்து புதிய அரசியலமைப்பு வரைவு தயாரானதன் பின் அதனை மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு விட்டு அதன் பிரகாரம் ஜனாதிபதியின் அதிகாரங்களை தீர்மானிப்பதாகவும் பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்துவதாகவும் அதுவரை அரசியலமைப்பு தொடர்பான அறிவிப்புக்களை உயர் இராணுவ கவுன்ஸில் மேற்கொள்ளும் என்றும் பிரகடனம் செய்யப் பட்டது.
இது தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னே இராணுவம் செய்த மற்றுமொரு சதி முயற்சியாகும்.
இவ்வாறு, இஸ்லாமிய வாதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றம் புதிய அரசியலமைப்பை வடிவமைப்பதற்காக நியமித்த அரசியலமைப்புக் குழுவினை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர், ஜனாதிபதிக்குரிய பல்வறு அதிகாரங்களை கையகப் படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்பிற்கு ஏற்ப பாராளுமன்றத் தேர்தல்இடம் பெரும் வரை சட்டவாக்க அதிகாரத்தையும் தமக்கு கீழ் கொண்டு வந்தனர்.
அவர்களது சூழ்ச்சிகளுக்கு துணை போகின்ற ஹுஸ்னி முபாரக்கின் அரசியலமைப்பு நீதிமன்றம், சட்டமா அதிபர் ஆகியோரை பயன் படுத்தி அரபு வசந்த ஆர்ப்பாட்டக் காரர்களைக் கொன்று குவிக்கவும் அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடவும் காரணமாக இருந்தவர்கள் தப்பித்துக் கொள்ள வழி வகுத்தனர்.
இவற்றை எல்லாம் மிஞ்சிய ஒரு சூழ்ச்சியிலும் இந்த உயர் இராணுவ கவுன்ஸில் ஈடு பட்டிருந்தது, அதாவது கலைக்கப் பட்ட பாராளுமன்ற அரசியலமைப்புக் குழுவில் இருந்து இஸ்லாமிய வாதிகளின் செல்வாக்கைக் குறைத்தல், அல்லது அதனை செயற்படாமல் தடுத்து தொடர்ந்தும் சட்டவாக்க அதிகாரத்தை தாம் தக்க வைத்துக் கொள்ள சகல நடவடிக்கைகளையும் எடுத்தனர்.
லிபரல் வாதிகள் அந்த அரசியலமைப்புக் குழுவிலிருந்து விலகினர் , புதிய அரசியலமைப்பு நகல் யோசனைகளுக்கு எதிராக ஹுஸ்னி முபாரக்கின் அரசியலமைப்பு நீதி மன்றில் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்தனர், இவ்வாறு பல சதிகளைச் செய்து அடுத்த பாராளுமன்றத்தில் இஸ்லாமிய வாதிகளின் செல்வாக்கைக் குறைத்து அஹ்மது ஷபீக் ஆதரவாளர்களான ஹுஸ்னி முபாரக்கின் எச்ச சொச்சங்களின் வலிமையை கூட்டுதல் அதற்கேற்றாற்போல் சட்டமா அதிபரையும் அரசியலமைப்பு நீதி மன்றத்தையும் பயன் படுத்தல்.
இந்த சூழ்ச்சிகளில் இருந்து அரபு வசந்தத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி மூர்ஸிஇற்கு முன்னால் இருந்த ஒரே வழி :
அரசியலமைப்பு நீதிமன்றத்தைக் கலைத்தல்
சட்டமா அதிபரை பதவி நீக்கல்
சட்டவாக்க அதிகாரத்தைக் கையகப் படுத்தல்
அரசியலமைப்புக் குழுவினை பாதுகாத்து வலிமைப் படுத்தல்
அரபு வசந்தத்தை அடக்குவதற்காக இரானுவத்தியும் வன்முறையையும் பயன்படுத்திய ஹுஸ்னி முபாரக் உற்பட சகலரையும் மீண்டும் விசாரணைக்கு உற்படுத்துதல்..அவர்கள் மீனும் மீண்டும் தலை தூக்குவதை சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தல்.!
எட்டு மாதத்திற்குள் புதிய அரசியல் யாப்பை தயாரித்து பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடுதல்
அந்த புதிய யாப்பிற்கு ஏற்ப பாராளுமன்ற தேர்தலை நடாத்தி சட்டவாக்க அதிகாரத்தை பாராளு மன்றத்துக்கு வழங்குதல்
அதன் பிரகாரம் உயர் நீதிமன்றத்தை மீளமைத்து நீதித் துறையின் சுயாதிபத்தியத்தை ஸ்தாபித்தல்
இடை நடுவில் இந்த நகர்வுகளை இராணுவ கவுன்ஸிலோ அரசியலமைப்பு நீதி மன்றமோ தலையிட முடியாதவாறு இந்த அறிவிப்புக்களை எந்த ஒரு அதிகார பீடமும் கேள்விக்கு உற்படுத்த முடியாதென பிரகடனம் செய்தல்.
அதுவரை மேற்படி இலக்குகளை அடைந்துகொள்ள தேவைப்படுகின்ற சட்டவாக்க அதிகாரங்களை ஜனாதிபதி கொண்டிருத்தல்.
இந்த இலக்குகள் அடையப் பெற்றவுடன் தனது பிரகடனங்கள் தானாகவே வலிததற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி மூர்ஸி அறிவித்தார்.
தான் பதவி ஏற்ற பின்னர் மேற்படி அறிவிப்புக்களை ஜனாதிபதி விடுத்த பின்னரும் பாராளுமன்றத்தை கூட்டுவதனை உயர் அரசியலமைப்பு நீதிமன்றம் தடுத்து வந்ததோடு அரசியலமைப்பு சபை செயற்பட முடியாதவாறு இன்று வரை பல்வேறு முறைப்பாடுகளுடன் நீதிமன்றங்களால் முட்டுக் கட்டைகள் போடப்பட்டுள்ளன. இவாறான நிலைமையில் தான் ௨௦௧௧ முதல் ௨௦௧௨ இறுதிவரை எகிப்தின் அரபு வசந்தம் இராணுவத்தினால் கையாளப் பட்டு வந்துள்ளது.
எனவே முறையான பாராளுமன்றம் ஒன்று அமையாத நிலையில் அதனை நிறுவுவதற்கான சட்டயாப்பு தயாரில்லாத நிலையில் சட்டவாக்க அதிகாரங்களை தான் கையில் எடுத்து ஏற்கனவே இராணுவத்தினால் சட்டவிரோதமாக கலைக்கப் பட்ட பாராளுமன்றத்தினால் நியமிக்கப் பட்ட அரசியலமைப்பு சபை தயாரித்துள்ள அரசியலமைப்பை பொது சன அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விட முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி முர்சி, உண்மையில் ஜனாதிபதி மூர்ஸி இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை எடுக்காவிடின் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் பிரதிபலிக்கும் சட்டமன்றமான பாராளுமன்றமும் இல்லாத நிலையில், அரசியலமைப்பும் தயாரில்லாத நிலையில் அரபு வசந்தம் எனும் மக்கள் எழுச்சியை எவ்வாறு முன் கொண்டு செல்ல முடியும்?
ஜனாதிபதி மூர்ஸி பதவிக்கு வந்த ஒரு வருடகாலமும் இராணுவம் அவருக்கு சர்வதேச பிராந்திய சக்திகளுடன் இணைந்து பல்வேறு நெருக்கடிகளை மிகவும் இலாகவமாக ஏற்படுத்தி வந்தது, எகிப்து இஸ்ரேல எல்லையில் பதட்டம், கிறிஸ்தவர்களின் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், அரபு வசந்தத்தில் பங்கு கொண்ட லிபரல் வாதிகளை தமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரல், நாடு முழுவதும் வேலை நிறுத்தங்களை ஊக்குவித்தல், வெளிநாட்டு உதவிகளை மட்டுப் படுத்தல், உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் அவரையும் இஸ்லாமியர்களையும் அபாயகரமானவர்களாக சித்தரித்தல் போன்ற இன்னோரன்ன சதித்திட்டங்களை அமுல் படுத்தி வந்தனர்.
இறுதியாக ஒரு நாட்டின் ஜனநாயக இஸ்தாபனங்களில் பிரதானமான சட்டமன்றம் (பாராளுமன்றம்) ஒரு நாட்டின் அரசியல் இஸ்திரத்தனமையை பேணுகின்ற நிறுவனங்களுக்கிடையில் வலு வேறாக்கங்களை மட்டுப் தீர்மானிக்கின்ற அரசியலைமைப்பு இல்லாத நிலையில், முறையான நீதித் துறையின் ஆதிக்க வரையறைகள் தீர்மானிக்கப் படாத நிலையில், இராணுவத்தால் அரைகுறையாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள அரசியலமைப்பின் கீழ் இராணுவத்துடனும் நீதித் துறையுடனும் மோதுகின்ற சட்டவாக்க அதிகாரங்களை கையில் எடுத்துள்ள சர்வாதிகாரியாக வெளிநாட்டு ஊடகங்களால்மாத்திரமன்றி தனது ஆட்சியில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள உள்நாட்டு ஊடகங்களாலும் சித்தரிக்கப் பட்டு இன்று அவரது ஆட்சி சூழ்ச்சியின் மூலம் கவிழ்க்கப் பட்டுள்ளது.
இஸ்லாமிய உலகில் நிலவுகின்ற வரலாற்று ரீதியிலான குரோதங்களும், கருத்து வேறுபாடுகளில் மூழ்கிப் போன சிந்தானா முகாம்களும் முஸ்லிம் உம்மத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் எதிரிகளின் காலடியில் சரணாகதியாக மண்டியிட்டு விடவே உதவும் என்பதற்கு எகிப்தின் சமகால அரசியலில் போதுமான படிப்பினைகள் இருக்கின்றன.
உள்நாட்டு அரசியலைக் கையாளுவதில் ஆயிரம் நிலைப்பாடுகள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பல்வேறு பட்ட சிந்தனா முகாம்கள் இருந்திருக்கலாம், ஆனால் பன்னாட்டு உளவுத் தாபனங்களின் அவசரத்திற்கும் அவசியத்திற்கும் ஏற்ப காரியம் பார்க்கும் இராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் சென்றிருப்பது எகிப்திற்கு மாத்திரமல்ல முழுப் பிராந்தியத்திலுமுள்ள இஸ்லாமிய முற்போக்கு சக்திகளுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாகும்.
மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936) மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952) ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970) அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981) ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012) என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தெரிவான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!
.
என்றாலும் அரபு வசந்த எழுச்சியை நெறிப்படுத்துவதில் பாரிய பங்களிப்புச் செய்த இக்வான்கள் மற்றும் இஸ்லாமிய வாதிகளின் அதிகரித்த செல்வாக்கிற்கு முன்னால் 2012 ஜூன் மாதம் வரையும் இராணுவம் தனது பலத்தை தக்க வைத்துக் கொள்ளவே முயன்றது, குறிப்பாக பாராளுமன்றம் மற்றும் ஜானதிபதியிற்கான அதிகாரங்களை மாத்திரமன்றி நீதித்துறையிலும் இராணுவம் கணிசமான தலையீடுகளை செய்ததோடு இராணுவத்தின் அதிகாரங்களை மட்டுப் படுத்தும் புதிய அரசியலமைப்பு வரைவு ஒன்று முன்வைக்கப் படுவதற்கு இராணுவம் முட்டுக்கட்டைகளை போட்டுவந்தது மாத்திரமல்லாமல் அரசியலமைப்பு பிரகடனங்களையும் செய்து வந்தது வந்தது.
ஹுஸ்னி முபாறக்கை வீழ்த்திய பின்னர் இக்வான்கள் சார்பாக முர்சியும் இராணுவம் சார்பாக அப்துல் பாத்தாஹ் சி சி யும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பொழுது மிகவும் கனிவாக பணிவாக விசுவாசியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட அப்துல் பாத்தாஹ் சி சி யை நம்பி பாதுகாப்பு அமைச்சராகவும் படைகளுக்கு தளபதியுமாக நியமித்தமை தான் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நல்ல நோக்கில் அவர் செய்த மிகப் பெரிய தவறாகும்.!
ஜனாதிபதி முரசி பதவியேற்ற பின்னர் இன்றுவரை முறையான அரசியலமைப்பு ஒன்றை வரைவு செய்துகொள்வதற்கும் அதனடிப்படையில் பாராளுமன்றம் ஒன்றை தேர்தல் மூலம் கொண்டுவந்து மக்களாட்சியை இசதிரப்படுத்துவதற்கும், பாராளுமன்றம், நீதித்துறை ம,அற்றும் ஜனாதிபதி ஆகிய மூன்று ஜனநாயக நிறுவனங்களினதும் அதிகார எல்லைகளை தீர்மானிப்பதற்கும், தேவைப்படுகின்ற சட்டவாக்கங்களை செய்து தனது பணிகளை முன்னெடுப்பதற்கும் இராணுவத்திற்கு தேவையானவாறு முட்டுக் கட்டைகளைப் போட்டு வந்த உயர் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி இன்று இராணுவத்தினால் பொம்மை ஜனாதிபதியாக நட்டப் பட்டுள்ளார்.
முபாரக் ஆட்சியில் நீதித்துறையை மிகவும் கேவலமாக கையாண்ட சட்டமா அதிபரையே மீண்டும் சட்டமா அதிபராக நியமித்து இக்வான்களுக்குக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சோடித்து விசாரணைகளை நடாத்துவதற்கான முன்னெடுப்புக்களை இராணுவ ஆட்சியாளர்கள் செய்கின்றமை 2011 ஜனவரி 25 அரபு வசந்தத்தை காவு கொண்ட இராணுவம் இன்றும் மக்கள் எழுச்சியை காவுகொண்டுள்ளதொடு பல்வேறு பிரதான தரப்புக்களை ஏமாற்றி காரியம் அபார்த்திருப்பதும் நிரூபணமாகிறது.
அஹமத் முசல்மானி எனும் ஹுஸ்னி முபாரக்கின் ஊடக ஆலோசகரை இடைக்கால பொம்மை ஜனாதிபதி மன்சூர் அத்லியுடைய ஊடக ஆலோசகராக இராணுவம் நியமித்துள்ளது.
முஹம்மது பர்தாஈ இராணுவ ஆட்சியின் கீழ் எகிப்தின் பிரதம மந்திரியாக நியமிக்கப் பட்டுள்ளார், ஏற்கனவே பர்தாஈ துணை ஜனாதிபதியை நியமனம் பெறுவார் என தெரிய வந்தவுடன் சலாபி தவா அமைப்பின் அல் நூர் கட்சியின் பிரதித் தலைவர் யாசிர் புர்ஹாணி தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி முர்சி பதவியிலிருந்து கவிழ்க்கப் படுவதற்கு முன்னர் "பாதை வரைவு " குறித்து இராணுவத்துடன் நாம் ஒரு உடன் பாட்டுக்கு வந்திருந்தோம் , அந்த உடன் பாட்டின் படி பிரதான் அதரப்புக்களின் அங்கீகாரம் இன்றி புதிய அரச நியமனங்ககள் இடம் பெற முடியாது, அரசியலமைப்பு தொடர்பான அறிவிப்புக்கள் செய்ய முடியாது, ஆனால் பர்தாஈயின் நியமனம் எமது உடன்பாடுகளை மீறி செய்யப் பட்டுள்ளது.
பாராளுமன்ற உயர் சபையை எமது அங்கீகாரம் இல்லாது இராணுவம் கலைத்துள்ளது, அதேபோல் அரச தலைவர்களை ஜனாதிபதி முர்சியுடைய ஆதாரவாளர்களை கைது செய்வது தாக்குவது இவையெல்லாம் எமக்கிடையே இடம்பெற்ற உடன்பாடுகளை மீறும் நடவடிக்கைகளாகும். என யாசிர் புர்ஹாணி தெரிவித்துள்ளார்.
இக்வான்களுக்கு அடுத்து எகிப்தில் அதிக செல்வாக்குடைய அல் நூர் கட்சி இறுதி நேரம் வரையும் நடுநிலைமை வகித்தமை தெரிந்ததே, ஆனால் பாதை வரைவு குறித்து வழங்கப்பட்ட உத்தரவாதங்களுக்கு இணங்கியே தாம் இராணுவத்துடன் ஒத்துழைத்ததாக தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பிரமாண்டமான சுனாமி போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்து வந்த ஜனாதிபதி முர்சி ஒரு வருடகாலத்துக்குள் எகிப்தின் அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு கண்டிருக்க வேண்டும், மக்களது வாழ்க்கை தரத்தை வானளவு உயர்த்தியிருக்க வேண்டும், உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களை பிரமிக்கத் தக்கவகையில் சீர் செய்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியல் பிரசார மேடைகளுக்கு வேண்டுமென்றால் அழகாக தெரியலாம்.
முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் ஒருபோதும் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம விரோதிகள்..!
முர்சியும் இக்வான்களும் அவர்களோடு அணிசேர்ந்திருக்கும் இஸ்லாமியர்களும் யாருடைய நேசர்கள் யாருடைய பகைவர்கள் என்பதனை முஸ்லிம் உலகின் எதிரிகள் தான் தீர்மாணிப்பார்கள், ஏனென்றால் முஸ்லிம் உலகு அதிலும் கருத்து வேறு பாடுகளுக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும்.
ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது..!

இவ்வாறானதொரு கதி வலை பின்னப்பட்டுகின்ற போது அதற்கு எதிராக இஸ்லாமியவாதிகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய சலபிகள் சவுதியை திருப்திப்படுத்த இஜ்லாத்தின் எதிரிகளுக்கு துணை போனார்களே. இதுதான் கவலைக்குறிய விடயம்.
ReplyDelete