கரவாகுப் (கல்முனை(க்குடி) பள்ளிவாசலின் வரலாறு
(ஏ.எல்.ஜுனைதீன்)
முஸ்லிம்கள் ஓரிடத்தில் குடியேறி அங்கு வாழத் தொடங்கியதும் அவர்கள் தாம் வசிப்பதற்குரிய வீடுகள் அமைக்கும் போது தம்மைப் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தொழுவதற்கு மஸ்ஜித் ஒன்றையும் அமைத்துக் கொள்வது இஸ்லாமியர்களின் வரலாறாகும். இந்த வகையில் கரவாகுப் ( கல்முனை(க்குடி) ) பள்ளிவாசலின் வரலாற்றைப் பார்ப்போம்.
கல்முனை(க்குடி) கிராமத்தின் அசல் பெயர் கரவாகு என்பதாகும். இதற்கு குடியிருப்பு, கன்முனை, கைனை என்றும் பெயர் உண்டு. உள்ளுராட்சி விடயத்தில் இக் கிராமம் கல்முனை என்றே அழைக்கப்படுகின்றது. கரவாகு என்னும் பெயர் பண்டு தொட்டு இருந்து வருகின்றது. காரணம் கரவாகுப் பற்று எனும் நிர்வாகப் பிரதேசம் இன்றும் இங்கு இருந்து வருவதாகும்.
சோழன் இராசேந்திரன் (1017-1044) அநுராதபுர இராசதானியைக் கைப்பற்றி ஆண்ட காலம் 11 ஆம் நூற்றாண்டாகும் அவன் ஆதமுனைப் (திருக்கோவில் பிரதேசம்) பகுதியைக் கைப்பற்றி அங்கு இருந்த சேகு அசனப்பா பள்ளியை அழித்து முஸ்லிம்களைத் துரத்துவதற்கு முன்னர் வள்ளிக் குறத்தி என்பவள் அப்பள்ளிக்கு நேர்த்தி வைத்து அதைக் கொடுக்க அங்கு செல்லும் வழியில் “கரவாகுச் சோனாக்கள் மாடு கட்ட வருவார். பால் கறந்து தருவார். குடித்திடலாம் மகனே” என்று கூறுவது கரவாகு 11 ஆம் நூற்றாண்டில் இருந்ததை ஆதாரம் காட்டி கரவாகுப் பரவணியில் கரவலெவ்வை, நெய்ன எலவ ஆலிமு ஆகியவர்கள் ஹிஜ்ரி 532 இல் ( கி.பி 1142) கரவாகுவில் கட்டிய பள்ளிக்கும் பெயரளவிலும் காலத்தாலும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.என இப் பள்ளியின் நீண்டகால வரலாற்றுக்கு ஆதாரம் காட்டுகிறார்கள். இக் கரவாகுப் பள்ளிவாசல் முஹியித்தீன் பள்ளி என அன்றிலிருந்து இன்று வரை அழைக்கப்படுவதையும் ஆதாரமாகக் கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறு நீண்ட சரித்திரம் கூறப்பட்டுள்ள கரவாகு (கல்முனை(க்குடி) முஹியித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் 1790 ஆம் ஆண்டு கல்முனைக் காரியப்பர்கள் என அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான அவக்கலெவ்வைக் காரி, முஹம்மதுத் தம்பி லெவ்வைக் காரியப்பர், கோசுக் குட்டிப் போடி ஆகியோர் கொண்ட குழுவினரால் புனருத்தானம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் இப் பள்ளிவாசல் மீண்டும் சதக்குலெவ்வைக் கண்டு, விசுவாராச்சி அசன் கண்டு முல்லைக்காரன், சாஞ்சமரத்தால (சாய்ந்தமருதிலிருந்து) கல்யாணம் முடித்திருந்த நெய்னாக்குட்டி ஆலிமு என்போர் தலைமையிலான குழுவினரால் மீண்டும் 1806.05.07 ஆம் திகதியிலிருந்து புனருத்தான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்புனருத்தான வேலைகள் நீண்ட நாட்களுக்குப் பின் 1859.08.13 ஆம் திகதி முடிக்கப்பட்டது. இப் புனருத்தான வேலையில் இப் பள்ளிக்கட்டடம் செங்கற்களால் நீறு கொண்டு கட்டப்பட்டு மரத்தினால் கூரை போடப்பட்டு சல்லி ஓட்டினால் வேயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இக் காலத்தில் சதக்கு லெவ்வைக்கண்டு ஆலிமுக்குடி, விசுவா எலவ ஆராட்சி எலவகுடியான், அசன்கண்டு முல்லக்காரன், பொன்னாச்சிக்குடியான் ஆகியோரே இப் பள்ளிவாசலை நிர்வகித்திருக்கின்றனர் நெய்னாக்குட்டி ஆலிமு கதீப் ஆக ஐங்காலத் தொழுகைகளையும் ஜும்ஆத் தொழுகையையும் நடத்தியிருக்கிறார். பெரியதம்பி ஆலிம், அறபி ஆலிம், சின்ன ஆலிம், என்போரும் இப் பள்ளிவாசலில் தொழுவித்திருக்கிறார்கள்.
இதன் பின்னர் இப் பள்ளிவாசல் இரு தெரு மரைக்காயர்களான மு.வ.வி. முஹம்மது காசிம் லெவ்வைப் போடி மரைக்காயர், க.பொ. ஆதம்லெவ்வைப் போடி மரைக்காயர், அ.போ.அலியார் போடி மரைக்காயர், மு மீராலெவ்வை மரைக்காயர்,, அ.க.பொ.த.சீனிமுகம்மது லெவ்வை மரைக்காயர், இ.மிஸ்கீன்வாவா மரைக்காயர், பொ.த. சாஹுல் ஹமீது லெவ்வை மரைக்காயர், மு.த.போ.கோசி மீராலெவ்வை போடி மரைக்காயர், இ.போ.உதுமாலெவ்வைப் போடி மரைக்காயர், மீ.முகம்மது இப்றாஹீம் மரைக்காயர் ஆகியோர்கள் தலைமையில் 1920 ஆம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு 1933.03.11 ஆம் திகதி பூர்தியாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்ட போது அயலூரவர்கள் அதனைப் புதினமாகப் பார்த்ததாகவும் அதன் சிறப்பைப் புலவர்கள் பாராட்டிப் பாடியதாகவும் ஒரு கதையும் எழுதப்பட்டிருக்கிறது.
“அன்னா தெரியுது கல்முனைக்குடியாம்
இங்கினியாக் கல்லு மானே
எட்டி நடந்து வா தேனே
செப்பமாகிய பள்ளி தெரியுது
சித்திர வேலை செய்து இருக்கார்
செல்ல முடியாது பாரு”
( கிராமத்து இதயம் பக்கம்-74 )
இதன் பின்னர் 1984 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற நம்பிக்கையாளர் சபைக் கூட்டத்தில் இப் பள்ளிவாசலை சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப பெரிதாகக் கட்டி முடிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் தலைமையில் ஜாமீயா நழிமியா ஸ்தாபகர் மர்ஹும் அல்-ஹாஜ் எம்.ஐ.எம் நளீம் (ஜே.பி) அவர்களால் 1985.08.09 ஆம் திகதி பள்ளிவாசல் பெரிதாக்கும் திட்டத்தை நிறைவேற்ற அடிக்கல் நடப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் இப் புதிய பள்ளிவாசலின் தரைக்கு இடுவதற்கென அன்றைய பெறுமதியில் சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான தொகைக்கு வெளிநாட்டிலிருந்து மாபிள் கற்களையும் பெற்றுக் கொடுத்தார். அல்-ஹாஜ் எம்.ஐ எச். ஹபீப் முகம்மது அவர்களின் தலைமையில் நம்பிக்கையாளர் சபையினால் இக் கட்டட வேலைகள் அன்று ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்ந்து அல்-ஹாஜ் முகம்மது இப்றாகீம் லாபீர் தலைமையிலான கட்டடக் குழுவினாலும் முன்னெடுக்கப்பட்டது.
தற்பொழுது இப் பள்ளிவாசல் கட்டடத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் அவர்களின் தலைமையில் நம்பிக்கையாளர்களின் ஒத்தாசைகளுடன் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
( தகவல் உதவி: கலாபூசணம் எம்.எம். காசிம்ஜி (E,T.special Palaly)
Class 1 officer. SLTS

Post a Comment