Header Ads



'இஸ்லாமிய சமுதாயம் மீது பா.ஜ.க. பொய்யான பிராசரம் மேற்கொள்கிறது'

(Inne)  பாஜகவின் மாநிலச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை வைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என்று முஸ்லிம் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

'அரசியல் அநாதை'யான பாஜக இந்தப் படுகொலை சம்பவத்தை வைத்து முஸ்லிம்கள் மீது அபாண்டமான பழி போடவும், அரசியல் ஆதாயம் தேடவும் முயல்கிறது என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனீபா சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

முஹம்மது ஹனீபாவின் பேட்டி விவரம்:

தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த வாரம் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சூழலில் இக் கொலை சம்பவத்துக்கு மத சாயம் பூசி, அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்புகூட தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடைபெறும் பல கொலைச் சம்பவங்களுக்கு கந்து வட்டி, ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பெண்கள் தொடர்பு போன்றவை பிரதான காரணங்களாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலைக்கான உண்மையான காரணங்களை அறியும் விதத்தில் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. தலைமையில் சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதை வரவேற்கிறோம். விரைவிலேயே உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டித்திட வேண்டும்.ஆனால் கொலைக்கான காரணம் எதுவுமே தெரியாத தற்போதைய நிலையில், இஸ்லாமியர்களை பழி சுமத்தும் வகையில் பா.ஜ.க.வினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். இது அபாண்டமாகும்

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தனித்து விடப்பட்டுள்ள பா.ஜ.க. இந்தக் கொலை சம்பவத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது.

இஸ்லாமிய சமுதாயம் மீது பொய்யான பிராசரத்தை பா.ஜ.க. மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அப்பாவி முஸ்லிம்களும், இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்களும் தாக்கப்படுகின்றன. புனித ரமலான் நோன்பு நேரத்தில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால் இஸ்லாமிய சமுதாய மக்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.

ஆகவே, இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய மதத் தலைவர்கள், இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்

இவ்வாறு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முஹம்மது ஹனீபா கூறினார்.

No comments

Powered by Blogger.