ஹெடோயா நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான அறிக்கையினை விரைவுபடுத்த உத்தரவு
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
மொனராகல மாவட்டத்திலுள்ள ஹெடோயா பாரிய நீர்ப்பாசனத்திட்டத்தினை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறி பாலடிசில்வா நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகளைப் பணித்தள்ளார்.
இத்திட்டத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொத்துவில், லௌகல பிரதேச செயலகப்பரிவிலுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் காணிகள் இரு போகங்களில் விவசாயம் மேற்கொள்ளக் கூடியதாக அமையும். பொத்துவில் பிரதேச மக்களின் ஆயிரக்கணக்கான விவசாயக்காணிகள் நீர்ப்பாசன வசதிகள் இன்றி பல்லாண்டுகாலமாக கஷ்டப்பட்டு வருகின்றனர். மேற்படி திட்டத்தினை மேற்கொள்வதன் மூலம் இப்பிரதேசமக்களுக்கான நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த முடியுமென உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கடந்த தேர்தல் காலத்தின் போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கிணங்கவே ஜனாபதியினால் இத்திட்டம் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அதற்கான சாத்தியவள அறிக்கைனை தயாரிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.
மேலும் வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தம் வகையில் அமைச்சர் அதாஉல்லா, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் மேற்படி ஹெடோயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சரை சந்தித்து பேசுவதெனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய அண்மையில் அம்பாறை றம்புகன் ஓயா நீர்ப்பாசன திட்டத்தை பார்வையிட வந்திருந்த நீர்ப்பாசன அமைச்சரிடம் சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரத்ன, கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கிணங்க ஹெடோயா நீர்ப்பாசனத்திட்டம் தொடர்பில் அமைச்சரிடம் பிரஸ்தபித்திருந்தனர். இதன் போது அமைச்சரினால் திட்டத்தின் ஆய்வறிக்கையினை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார். இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் பொத்துவில் பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர் நோக்கிவந்த பிரச்சினைக்கு தீர்வெட்டப்படவுள்ளதுடன் அவர்களின் நீண்ட கால கனவும் நிறைவேறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment