இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்துக்கு புத்தளம் யாகூபின் நியமனமும், எதிர்பார்ப்பும்
(ஸாரா)
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் தற்சமயம் பிரதி அதிபராக பணியாற்றும்; எஸ்.ஏ.சீ.யாகூப் இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்துக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இவருக்கான நியமனம் அண்மையில் கல்வியமைச்சில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவினால் வழங்கப்பட்டது.
புத்தளம் சாஹிரா கல்லூரியில் 1977ல் க.பொ.த. சாதாரன தரக் கல்வியை முடித்துக் கொண்ட இவர் 1978ல் பேருவளை ஜாமியா நளீமிய்யாவில் பிரவேசித்து 1984 வரை இஸ்லாமிய கற்கை நெறியையும் க.பொ.த. உயர்தர மற்றும் பட்டப் படிப்பையும் அங்கு தொடர்ந்தார். புpன்னர் 1985ல் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் கலைமாணி சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1995ல் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா பாடநெறியில் மிகத் திறமைச் சித்தியையும் பெற்றுக் கொண்டார். இவர் 2006ல் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டமேற் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாபட்டம் பெற்றார்.
2001ல் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட தஃவா ஊழியர்களுக்கான பயிற்சி நெறியிலும் கலந்து கொண்டுள்ளார். 2011ல் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் கல்வித் துறையில் முதுமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்.
1984ல் இவருக்கு முதல் ஆசிரியர் நியமனம் கற்பிட்டி அல்அக்ஸா கல்லூரிக்கு வழங்கப்பட்டது. 9 வருடங்கள் ஆசிரியராக சேவையாற்றியதைத் தொடர்ந்து 1993ல் அதிபர் சேவையில் இணைந்துக் கொண்டார். 1996ல் இலங்கை அதிபர் சேவையின் தரம் இரண்டுக்கான நியமனம் இவருக்கு கிடைத்தது. 1991முதல்1994 வரை புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயம் 1995ல் வட்டக்கண்டல் முஸ்லிம் வித்தியாலயம் என்பவற்றில் அதிபராக இவர் பணியாற்றினார். 1996முதல்2001 வரை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் 5 வருடங்கள் அதிபராகவும் சேவையாற்றினார். இந்நிலையில் 2006.01.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்துக்கு இவர் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். சுமார் 28 வருடங்கள் ஆசிரிய அதிபர் சேவையில் நிறைவான அனுபவம் வாய்ந்தவராக இவர் திகழ்கிறார். மேலும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா பாட நெறியை தொடருவோருக்கான வருகைத் தரு மேற்பார்வையாளராகவும் (ஏளைவைiபெ ளுரிநசஎளைழச) இவர் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் புத்தளத்தின் கல்வியலாளர்கள் வரிசையில் இன்னுமொரு பன்முக ஆளுமையாகத் திகழும் அதிபர் எஸ்.ஏ.சீ.யாகூப் அவர்கள் மென்மேலும் புத்தளம் பிரதேச கல்விக்கு தனது முழுமையான பங்களிப்பை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறமும் புத்தளம் பிரதேச சமூகமும் இத்தகைய ஆளுமைமிக்கவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை ரேகை மறு புறமும் துளிர்விட்டுள்ளது.

Post a Comment