நாயை காப்பாற்றினாலும் கதாநாயகனாக வலம்வரலாம்..!
ஆஸ்திரேலியாவின் பல்லாரட் பகுதியை சேர்ந்த ஸ்டீவ் ஹண்டர் என்பவர் வேலை விஷயமாக சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க ஓடிவந்த நாய் காரில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டது.
மரண வேதனையுடன் மூச்சடைத்து சுருண்டு விழுந்த நாயின் கதை முடிந்தது என்றுதான் எல்லா வழிப்போக்கர்களும் நினைத்தனர். ஆனால், ஸ்டீவ் ஹண்டரின் எண்ணமோ, வேறு வகையில் சிந்திக்க தொடங்கியது.
சற்றும் தாமதிக்காமல் நாயின் அருகே ஓடிய அவர், மனிதர்களின் இதயம் நின்று விட்டால் செய்யக்கூடிய சி.பி.ஆர். எனப்படும் முதலுதவி சிகிச்சையை செய்யத் தொடங்கினார்.
நாயின் தாடையை பிடித்து, வாயை அகலமாக விரித்து, தனது வாயை நாயின் தொண்டை அருகே கொண்டுச் சென்று செயற்கை சுவாசம் அளித்தபடி, அதன் மார்பு பகுதியை லேசாக கையால் குத்திக்கொண்டிருந்தார். அசைவற்று கிடந்த நாய், சிறு முனகலுடன் கண் விழித்து பார்க்கத் தொடங்கியதும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்ற அவர், யுரேகா கால் நடை ஆஸ்பத்திரியில் நாயை அனுமதித்தார்.
தலையில் ஏற்பட்ட காயத்துக்காகவும், இடுப்பு மற்றும் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்ட 'சால்ட்டி' என்னும் அந்த நாய் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, அப்பகுதியின் கதாநாயகனாக வலம் வரும் ஸ்டீவ் ஹண்டர், 'முதலுதவிக்காக நாயின் வாயில் எனது வாயை வைக்க முயன்றபோது, அது பல் துலக்கியிருக்காதே என்ற எண்ணம் முதலில் தோன்றியது. ஆனால், ஓர் உயிரை காப்பாற்றப் போகிறோம் என்ற உந்துதல் அந்த எண்ணத்தை மறக்கடித்து விட்டது' என்கிறார்.

Post a Comment