மருதானையில் வியாழக்கிழமை முதல் ஒருவழி வாகனப் போக்குவரத்து திட்ட நடைமுறை
(Nf) கொழும்பு - மருதானை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 18-07-2013 முதல் ஒருவழி வாகனப் போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானை மேம்பாலம் அமைந்துள்ள சந்தியிலிருந்து டெக்னிக்கல் சந்தி வரையும், அங்கிருந்து சங்கராஜ சுற்றுவட்டம் வரையிலும், சங்கராஜ சுற்றுவட்டத்திலிருந்து மருதானை மேம்பால சந்தி வரையிலும் நாளை காலை 6 மணி முதல் ஒரு வழியாக மாத்திரமே வாகனப் போக்குவரத்து இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, மாளிகாவத்தை வீதி, ஆமர் வீதி பகுதிகளில் இருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை ஊடாக பஞ்சிகாவத்தைக்குள் பிரவேசிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
பின்னர், எல்பின்ஸ்டன் கலையரங்கத்தை அண்மித்து வலப்புறமாக சென்று டெக்னிக்கல் சந்தியால் இடப்புறம் திரும்பி புறக்கோட்டையை சென்றடைய முடியும்.
காமினி சுற்றுவட்டம் ஊடாகவும் புஞ்சி பொரளை ஊடாகவும் ஆமர் வீதி மற்றும் மாளிகாவத்தை வீதி நோக்கிப் பயணிக்கின்ற வாகனங்கள் டெக்னிக்கல் சந்தியை அடைந்து, அங்கிருந்து வலப்புறமாக சங்கராஜ மாவத்தையால் ஆமர் வீதியை அல்லது மாளிகாவத்தை வீதியை அடைய முடியும் என்றும் பொலிஸார் அறிவித்தனர்.
.jpg)
Post a Comment