13 க்கு எதிரான மனு ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு - அமைச்சர் அத்தாவுல்லாவும் பிரதிவாதி
(Tm) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் 17-07-2013 புதன்கிழமை ஒத்திவைத்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டுமென்பதற்கான ஆதாரங்களை அன்றையதினம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
இந்த மனு, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்களான கே.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.
மனுவில், சட்டமா அதிபர், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரரான நீர்கொழும்பைச்சேர்ந்த எம்.எஸ். பத்மபிரிய சிரிவர்த்தன, 13 ஆவது திருத்தம் தனது உரிமைகளை மீறுவதனால் அது வெறுமையானதாகும் அதுமட்டுமன்றி வறிதானதாகும் என்று நீதிமன்றம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் தீர்மானித்ததன் பிரகாரம் இந்த திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இந்த திருத்தத்தில் மக்களின் உரிமை மீறப்படும் ஒரு அம்சம் உள்ளது என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டிலிருந்தும் வெளியிலிருந்தும் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் பயங்கரவாதிகளின் பயமுறுத்தலாலும் அயல் நாடும் வல்லரசுமாகிய இந்தியாவிடமிருந்து வந்த யுத்த பயமுறுத்தலாலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த திருத்தமானது அரசியலமைப்புக்கு அமைந்ததா? என தீர்மானிப்பதற்காக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 13 ஆவது திருத்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தினார்.
13 ஆவது திருத்தமானது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களால் அங்கீகரிக்கப்படவேண்டுமென உயர்நீதிமன்றம் அதன்போது தீர்மானித்திருந்தது என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஆயினும், இவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்ந்து மீறப்படுவதால் உயர்நீதிமன்றுக்கு தலையிடுவதற்கான நியாயாதிக்கம் உள்ளது என மனுதாரர் வலியுறுத்தினார்.
எனவே, நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் நியாயாதிக்கத்துக்கு அப்பால் தனது உரிமை மனு உள்ளதாயினும் உயர்நீதிமன்றுக்கு இந்த மனுவை விசாரிப்பதற்கு உள்ளார்ந்த அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையா அமுலாக்குமிடத்து 13 ஆவது திருத்தம் தனது உரிமைகளையும் பொதுமக்களின் உரிமைகளையும் தொடர்ந்து மீறுவதாகுமென அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment