அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் சவால்..!
மாகாண சபை முறைமையை எதிர்ப்பவர்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் மக்கள் வாக்களிக்காது பகிஷ்கரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென்ற பிரசாரத்தை முன்னெடுப்பார்களா? என சவால் விடுத்துள்ளார் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார.இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகளுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபையை எதிர்ப்பவர்களுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் மக்கள் சிறந்த பாடம் புகட்டுவார்கள். மக்கள் இத் தேர்தலில் வழங்கும் பல இலட்சம் வாக்குகள் மாகாண சபையை எதிர்ப்பவர்களுக்கு சிறந்த பதிலாகும். மாகாண சபையை எதிர்ப்பவர்கள் தமது எதிர்ப்பு உண்மையானால் இம் முறை மாகாண சபை தேர்தல் பிரசாரங்களின் போது மக்கள் முன் சென்று தேர்தலை பகிஷ்கரிக்குமாறும் வாக்களிக்க வேண்டாமென்றும் பிரசாரம் செய்ய வேண்டும்.
எதிர்ப்பவர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன். முடிந்தால் எதிர்த்து பிரசாரம் செய்யுங்கள். ஆனால், என்ன வேடிக்கையென்றால் மாகாண சபை முறைமையை எதிர்ப்பவர்கள். தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது வேட்பாளர்களை அதிகளவு போட்டியிடச் செய்வதற்கு முட்டி மோதிக்கொள்கின்றனர்.
மாகாண சபை முறைமையை நீதிமன்றத்தால் ஒழிக்க முடியாது. இது தொடர்பில் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மட்டும் பாராளுமன்றத்திற்கு வழங்க முடியும். இறுதி முடிவை பாராளுமன்றமே எடுக்க வேண்டும். ஏனென்றால் பாராளுமன்றமே இறையாண்மை கொண்டது.
அத்தோடு 13ஆவது திருத்தம் இலங்கை அரசியலமைப்பில் சட்டமாக உள்ளது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். vi

Post a Comment