Header Ads



'வேலைவாய்ப்புக்களில் ஏமாற்றுதலில் இலங்கை நிலைமை மோசம்'

(Bbc) வேலைவாய்ப்புக்கள் குறித்து பொய்ய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் இரண்டாவது நிலைப் பட்டியலில் அந்த நாடு பட்டியலிடப்பட்டுள்ளது.

பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு கட்டாய வேலைகளுக்காகவும், பாலியல் தொழிலுக்காகவும் இலங்கையர்கள் வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவது கணிசமாக தொடர்வதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது.

16 முதல் 17 வயது வரையிலான சிறார்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட பல இலங்கையர்கள், சவுதி அரேபியா, குவைத், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், பஹ்ரைன், லெபனான், இராக், ஆப்கான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நிர்மாணப்பணியாளர்களாக, வீட்டு வேலையாட்களாக, ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களாக கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நடமாடுவதற்கான சுதந்திரத்தை இவர்களில் சிலர் இழந்துள்ளதாகவும், சிலரிடம் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜன்சிகளின் அமைப்பில் அங்கம் வகிக்கும் பல முகவர்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஆண்களிடம் கணிசமான வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறுவதாகவும், பெண்கள் பலர் தமக்கு கிடைக்கும் சம்பளத்தில் இந்தப் பணத்தையும் பிடித்துக்கொள்ள அனுமதிப்பதாகவும் அது கூறுகிறது.

பல ஏஜன்சிகள் ஒரு வேலைக்காக ஒப்பந்தத்தை செய்துவிட்டு அதனிலும் குறைவான சிரமமான வேலைகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும், அனுமதி பெறாத பல துணை முகவர்கள் இதில் உதவுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கையின் உள்நாட்டிலேயே பல இடங்களில் சிறார்கள் தொழிலாளர்களாகவும், பாலியல் தொழிலாளர்களாகவும் பயன்படுத்தப்படுவதாகவும், மலையக தமிழ் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பு போன்ற இடங்களில் வீட்டுப் பணியாளர்களாக பலவிதமான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதாகவும் அமெரிக்க அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இந்த மலையக சிறார்கள் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் அது கூறுகிறது.

இப்படியான முறையற்ற ஆட்கடத்தல்களுக்கு பெருமளவில் போர் விதவைகளும், பதிவு செய்யப்படாத பெண் தொழிலாளர்களும் இலகுவில் ஆட்படுவதாகவும் அது கூறுகிறது.

சீனா, தாய்லாந்து மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்கள் இலங்கையில் அண்மைக்காலமாக பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

இவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்திருகின்ற போதிலும், அவை போதுமான பலனை இதுவரை தரவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது

1 comment:

  1. Sri Lankans know all of these facts and they are true too. What MR and regime will do? Nothing for sure.

    ReplyDelete

Powered by Blogger.