Header Ads



'இந்திய முஸ்லிம்களுக்கு சக்திமிக்க தலைவர் இல்லை'

(Inneram) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜெத்தா வாழ் இந்திய முஸ்லிம் பிரமுகர்கள் "இப்ராஹீம் சுலைமான் சேட்டுக்குப் பிறகு இந்தியச் சிறுபான்மையினர்" என்ற பெயரில் கருத்தரங்கு ஒன்றை நடத்தினர்.

ஜெத்தாவிலுள்ள டேஸ்ட்டி உணவக அரங்கில் நிகழ்ந்த இக்கருத்தரங்கில் பேசியவர்கள் 'சுலைமான் சேட்டை ப் போன்ற தன்னலமில்லாத தலைவர்கள் தேசத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் சேவையாற்ற இல்லாமலிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டனர்.

தனது அந்திமக் காலம் வரை இப்ராஹிம் சுலைமான் சேட் இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் தன்னலமின்றி பாடுபட்டு வந்தார் என்றும் நிகழ்ச்சியில் நினைவு கூரப்பட்டது.

அயலக இந்தியர் கலாச்சார காங்கிரஸ் (Overseas Indian Cultural Congress - Global Committee) என்னும் உலகளாவிய அமைப்பின்  பொதுச் செயலாளரான கே.எம். ஷரீஃப் குஞ்சு பேசும்போது இப்ராஹிம் சுலைமான் சேட் நெருக்கடியான காலக் கட்டங்களில் செயற்பட்ட விதத்தை நினைவு கூர்ந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவராகவும், பின்னர் தேசிய லீக்கின் அகில இந்திய தலைவராகவும் இருந்த சுலைமான் சேட், இந்தியாவின் பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகளின் தோற்றத்திற்கு அடிகோலியவர், குறிப்பாக, அகில இந்திய தனியார் சட்ட வாரியம், மஜ்லிசே முஷவ்வராத், பாபர் மசூதி கட்டிட ஒருங்கிணைப்புக்குழு , ஆல் இந்திய மில்லி கவுன்ஸில் ஆகியவற்றின் உருவாக்கத்தில் இப்ராஹிம் சுலைமான் சேட்டின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதும் நினைவு கூரப்பட்டது.

இந்திய - அரபு நட்புறவுக்குழுமத் தலைவர் டி,எம்.ஏ ரவூஃப் பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் இந்தியச் சிறைகளில் அப்பாவியாய் வாடும் இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை  சதவிகித அளவில்  இந்திய முஸ்லிம் மக்கள்தொகை சதவிகிதத்தை விடவும் அதிகம் என்று தெரிவித்தார். "இந்த அப்பாவிகளின் விடுதலைக்குப் பாடுபடக் கூடிய சுலைமான் சேட் போன்ற சக்திமிக்க தலைவர்கள் நம்மிடையே இன்று இல்லாமல் இருப்பது நமக்கு இழப்பாகும்" என்றும் டி,எம்.ஏ ரவூஃப் கூறினார்.

ஹம்ஸா பள்ளிக்காரா தொகுத்தளித்த இந்நிகழ்ச்சியில் மன்சூர் வந்தூர் நன்றி நவின்றார். முன்னதாக, ஏ.பி.அப்துல்கஃபூர் வரவேற்புரை நல்கினார்.

1 comment:

  1. ஆமாம் இலங்கை முஸ்லிம்களுக்கு இருக்கிறார்கள்... ரவூப் ஹக்கீம், ரிஷாட், அதாவுல்லா போன்ற தலை இல்லாத தலைவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.