கிழக்கு மாகாணத்திலும் அகலக் கால் பதிக்கிறது சீனா
(PP)சிறிலங்காவில் மேலும் பத்துத் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை, சிறிலங்கா முதலீட்டுச் சபையிடம் சீன நிறுவனங்கள் கையளித்துள்ளன.
சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்தத் தகவலை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்தத் திட்டங்கள் அனைத்தும், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கானதாகும். உருக்குத் தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மோட்டார் வாகன ஒருங்கிணைப்புத் தொழிலகம் என்பனவற்றை அமைப்பதற்கான திட்டங்களும் இவற்றில் அடங்கியுள்ளன. மேலும், மூலிகை அழகுசாதன பொருட்களை தயாரிக்கும் திட்டம் ஒன்றும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த திட்டங்களில் பெரும்பாலானவை, 25 மில்லியன் தொடக்கம், 50 மில்லியன் டொலர் வரையிலான முதலீட்டைக் கொண்ட சிறுதொழில் முயற்சிகளே ” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சம்பூரில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கனரக தொழில்துறைக்கான சிறப்பு வலயம் ஒன்றை உருவாக்கவே சிறிலங்கா அமைச்சரவை இந்த அனுமதியை அளித்துள்ளது.

KATHAVANKU VITHAYA
ReplyDelete