'மீனவர்கள் காப்புறுதி செய்யாமல் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்'
இலங்கையின் மீனவர்கள் உகாப்புறுதி செய்யாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் மீனவர்கள் காப்புறுதி செய்திருப்பதாகவும், இது தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாகவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா கூறுகின்றார்.
அண்மையில் வீசிய கடும் காற்று மற்றும் சீரற்ற கடல் நிலை காரணமாக பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழந்திருப்பதையடுத்தே, மீனவர்கள் கட்டாயம் காப்புறுதி செய்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் மிராண்டா தெரிவித்தார்.
காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடற்தொழில் திணைக்களம் இந்த காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. வருடாந்தம் 750 ரூபா மற்றும் 1500 ரூபா என இரண்டு வகையாகப் பணம் செலுத்த வேண்டிய வகையில் வைத்திய தேவைக்கான கொடுப்பனவு, உயிரிழப்புக்கான கொடுப்பனவு என்ற வகையில் இந்தக் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் மிராண்டா கூறினார்.

Post a Comment