ஈரானின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்க மேற்கு நாடுகள் தயாராம்..!
ஈரான் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஹஸன் ரவ்ஹானி, தேர்தலில் குறைவான வெளிப்படைத் தன்மை மற்றும் தணிக்கை முறைகள் பற்றி அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, ஈரானுடன் உறவைப் பேண தயாராக இருப்பதாக கூறியுள்ளது. மறுபுறத்தில் அணு சக்தி தொடர்பான ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
‘சர்வதேச சமூகம் ஈரான் மீது நல்லபிப்பிராயத்தை வழங்கக் கூடாது அல்லது அதன் அணு செயற்பாடு குறித்த அழுத்தங்களை இலகுபடுத்தக் கூடாது’ என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனியும் ரவ்ஹானியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘தேர்வாகியிருக்கும் ஜனாதிபதி மற்றும் அவரது அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துவதோடு அவர் முழு தேசத்துக்குமான ஜனாதிபதியாவார்’ என்று கொமைனி குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த தேர்தல் முடிவை ஆயதுல்லாஹ் கொமைனி ஓகஸ்ட் மூன்றாம் திகதி உறுதி செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பதவியேற்பார்.
இந்நிலையில் ஈரானிய தேர்தலை மதிப்பதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, அதன் அணு செயற்பாடுகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எனினும் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜே கார்னி, ஈரானின் தேர்தல் குறித்து எந்த வாழ்த்தையும் வெளியிடாமல் தவிர்த்துக் கொண்டார்.
பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ரவ்ஹானியின் தலைமையில் ஈரான் எதிர்காலத்தில் வேறு திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று புதிய தலைமையுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment