Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு ஒரு பகிரங்க மடல்..!

(அய்ஸ்)

நேற்றைய இரவில் உங்களாலும் உங்கள் சகபாடிகளினாலும் பிரதேச மக்களுக்காக ஆற்றப்பட்ட அல்லது முழங்கப்பட்ட உரைகள் தொடர்பாக இப்பிரதேசவாசி என்ற வகையில் உங்களோடு சில வார்த்தைகள் உரையாட நினைக்கின்றேன்.

 பிரதியமைச்சர் அமைச்சர் அவர்களே!

குறித்த உங்களின் உரையில் அல்லது ஒப்பாரியில் நீங்கள் வழமையாக முன்வைக்கும் சிறுபிள்ளைத்தனமான, பொய்யான, மனச்சாட்சியற்ற, முன்னுக்குப்பின் முரணான காரணங்களைத்தவிர புதிதாக எதையும் முன் வைக்கமாட்டீர்கள் எனத்தெரிந்திருந்தும், ஏதோ ஒரு ஆசையில் இன்றாவது புதிதாக எதையேனும் சொல்ல மாட்டீர்களா எனும் நப்பாசையில் நானும் வந்து இரவு 12 மணிவரை அங்கு குந்தியிருந்தேன். உங்கள் உரையில் நீங்கள் முன்வைத்த கருத்துக்களைக்கேட்ட பொழுது, இந்த ஊரின் மகன் என்ற வகையில் தாங்க முடியாத கோபமும,; உங்களுக்கு வாக்களித்து பதவிக்கு அனுப்பிய எங்கள் முட்டாள் தனத்தின் மீதான கைசேதமுமே எனக்கு எஞ்சியது. அதன்போது எனக்குள் எழுந்த நியாயமான கேள்விகள் இந்த ஊரில் பிறந்த சுய அறிவுடைய ஒவ்வொரு பொது மகனின் மனங்களிலும் நிச்சயம் எழுந்திருக்கும் எனவே அவர்களின் சார்பாகவும் இக்கேள்விகளை உங்களிடம் கேட்க விழைகின்றேன்.

1. எப்பொழுதும் போலவே  உங்கள் உரையில் அள்ளாஹ்வையும் ரஸுலையும் வரிக்கு வரி துணைக்கழைத்தீர்கள். மறுமைவிசாரணை பற்றி பயப்படுவதாய் சொன்னீர்கள். அதனால் நீங்கள் எப்பொழுதும் உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில் அள்ளாஹ் ரசூலுக்கு முரணாக செயற்படுவதில்லை என சத்தியமிட்டுக்கூறினீர்கள். பாராட்டப்பட வேண்டியவிடயம்தான் காத்தான்குடி மக்களாகிய நாங்கள் இதை நம்பிவிட்டோம். ஆனால் ஏறாவூர் ஓட்டமாவடி சகோதரர்கள் கேட்கிறார்கள் தற்பொழுது பிரச்சனையாக மாறி நிற்கும் இதே மீராபள்ளிவாயில் மிம்பரில் வைத்து அள்ளாஹ்வின் மீது ஆணையிட்டு இரண்டு வருடத்தில் எங்களுக்கு பதவியினை கையளிப்பதாக, பகிரங்கமாக வழங்கிய வாக்குறுதியை அப்பட்டமாக மீறியுள்ளீர்களே இது குறித்து பல கோடி மக்கள் முன்னிலையில் அள்ளாஹ் மறுமையில் உங்களை விசாரிக்கமாட்டானா? அப்பொழுது என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

2. இரண்டாவதாக இந்த நாட்டின் பௌத்த பயங்கரவாதம் தொடர்பாக நீங்கள் மிக அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் உங்களையும் ஏனைய அரசியல் தலைமைகளையும் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளும் படியும் இப்பிரச்சனையினை அரசுக்கு பணிந்தே கையாளவேண்டும். இல்லையேல் பயங்கர விழைவுகளை நாம் சந்திக்கநேரிடலாம் என்றும் சொன்னீர்கள். போதாததற்கு இந்துத்தீவிரவாதமும் எங்களுக்கு பிரச்சனையாக மாறலாம் என்று சும்மா இருப்பவர்களை தூண்டிவிடும் விதமாகவும் பேசினீர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முஸ்லிம் சமூகத்திற்காய் பாராளுமன்றத்தில் ஆற்றிய நியாயமான உரையினையும் அசாத் சாலியின் தனிப்பட்ட குரல் கொடுப்புக்களையும் மிக இலாவகமாக மறைத்து, அமைச்சர் பௌசி ஆக்ரோஷமாக ஜனாதிபதியை எதிர்த்து பேசியதை பெருமையுடன் பாராட்டினீர்கள். எல்லாம் சரி இப்பிரச்சனை தொடர்பாக 'நீங்கள்' ஜனாதிபதியுடன் என்னபேசிவருகிறீர்கள் என்பதை மறந்தும் சொல்லாமல் தவிர்த்து விட்டீர்கள். எவ்வளவு கால இடைவெளியில் இப்பிரச்சனைக்கான தீர்வினைப்பெற்றுத்தருவதாக ஜனாதிபதி உங்களுக்கு வாக்களித்துள்ளார். தேர்தல் காலம் வந்தால் மட்டும் ஜனாதிபதியை இங்கு அழைத்துவந்து, ஓராயிரம் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி பூச்சாண்டி காட்டத்தெரிந்த உங்களால் ஏன் இப்பொழுது ஒரே ஒரு வாக்குறுதியினை மக்களுக்காக பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இந்த இடத்தில் நீங்கள் ஜனாதிபதியை சார்ந்து போக நினைப்பதை ஓரளவு நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் பௌத்த பிக்குகளை ஆதரித்து, அவர்களின் பயங்கர வாத செயலுக்கு வக்காலத்து வாங்கி, தம்புள்ளை பள்ளிவாயிலின் ஒரு தகரத்தையும் கழற்றவில்லை என நீங்கள் போலி அறிக்கை விடுவதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வது? இது குறித்து அள்ளாஹ் நாளை மறுமையில் உங்களைக்கேட்கமாட்டானா?

3. முஸ்லிம்களை வன்முறையில் ஈடுபட தூண்ட மாட்டோம். பத்திரிகையில் அறிக்கை விட மாட்டோம். வன்முறையில் ஈடுபட்ட தமிழர்களின் வரலாறு கண்முன்னே உள்ளது. இன்று தமிழர்கள் பூச்சியமாகி நிற்கிறார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் அத்தனை இழப்புக்களை சந்தித்த அந்த தமிழ் சமூகம் இன்றும் இந்த அரசாங்கத்தின் அராஜகங்களுக்கு கட்டுப்படாது அல்லது தலை சாய்க்காது தொடர்ந்தும் போராடி வருவதைப்பற்றி என்ன சொல்ல வருகின்றீர்கள். அவர்களின் ஆயுதங்கள் களையப்பட்டாலும் அவர்கள் தங்களின் கோரிக்கைகளில் ஒரு வீதத்தினைக் கூட குறைத்துக் கொள்பவர்களாக இன்றுவரை இல்லை.. அவர்களுக்காக மட்டுமன்றி இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுப்பவர்களாக அவர்களை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. எனவே முஸ்லிம் சமூகத்தின் தனித்துவங்களைப்பேணிக்கொண்டு நம் நியாயமான உரிமைகளுக்காக நீங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்களாயின் எங்களை ஆயுதம் ஏந்தச்சொல்லி யாரும் தூண்ட வேண்டிய அவஷ்யம் இல்லை. அதைச்செய்ய முதுகெலும்பில்லாத நீங்கள் இராணுவம், உயிர்ச்சேதம், பொருட்சேதம் என மக்களை பயமுறுத்த முனைய வேண்டாம். மாறாக அரசாங்கம் நினைத்தாலும் பௌத்த பிக்குகளை கைது செய்யமுடியாது . அனைத்து இன மக்களின் அபிலாஷைகளையும் ஜனாதிபதி கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது என்று சொன்னீர்கள்.அப்படியானால் முஸ்லிம்கள். இந்த நாட்டில் வாழும் இனத்தவர்கள் இல்லையா?. உங்களினதும் உங்களைப்போன்ற முஸ்லிம் தலைமைத்துவங்களினதும்; இத்தகைய முன்னுக்குப்பின் முரணான வெளிப்படைத்தன்மையற்ற செயற்பாடுகளே மக்களை வன்முறைகளின் பால் தூண்டுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

4. தனது பதவி பட்டங்களுக்கு அப்பால் இந்த ஊரின் அபிவிருத்தியே தனக்கு முக்கியம் எனக்கூறினீர்கள். தேர்தல் காலங்களில் கூட தான் வாக்கு வங்கியைப்பற்றி கவலைப்படாது பிரதான வீதி அபிவிருத்தியை மேற்கொண்டதாக சொன்னீர்கள். அந்த அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டபொழுது உண்மையில் அந்த வீதியில் வாகனத்தரிப்பிடங்கள் அமைக்கப்படாமல், வீதி திட்டமிடப்படாத வகையில் அபிவிருத்தி செய்யப்படுவதை சுயேட்சைக்கட்சிக்காரர்கள்தான் வரைபடத்துடன் அன்று முதன்முதலில் சுட்டிக்காட்டியிருந்தனர். இன்று வாகனத்தரிப்பிடப்பிரச்சனையால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகளால் தனக்கு கடந்த வாரம் முறைப்பாடு ஒன்று கொண்டுவரப்பட்டதாக தாங்களே தனது உரையில் ஒத்துக்கொண்டீர்கள். இன்று இந்த ஊர் அபிவிருத்தியில் உண்மையில் இதுதான் நடக்கின்றது. உங்களின் மகத்தான அபிவிருத்திகளை யாரும் மேடை போட்டு எதிர்க்கவில்லை. அதனை திட்டமிடாமல் நீங்கள் செய்கிறீர்கள் என்பதையே அனைவரும் உங்களுக்கு சுட்டிக்காட்ட முனைகின்றனர். குட்வின் சந்தியில் மெத்தைப்பள்ளி கடைகளை உடைத்ததற்கு காரணம் 'நாங்கள் இரண்டு வருடத்தை கவனத்தில் கொண்டு அபிவிருத்தி செய்யவில்லை. 25 வருடங்களுக்குப்பின்னர் இந்த ஊரில் வாகனங்களின் தொகை அதிகரிப்பை கவனத்தில் கொண்டே அந்த சுற்று வட்டத்தினை விரிவாக அபிவிருத்தி செய்ததாக' சொன்னீர்கள். நல்லது அதே வாயினால் பாடசாலைகளில் நீங்கள் கட்டிய கட்டிடங்களை இடப்பற்றாற்குறை காரணமான மீண்டும் உடைத்து விரிவாக்க வேண்டியுள்ளதாகவும் அதனையும் இந்த சுயேட்சைக்குழுக்காரர்கள் விமர்சிக்கிறார்கள் என்றும் சொன்னீர்கள் . எனது சின்ன அறிவுக்குட்பட்ட வகையில் கேட்கிறேன். உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு வயது 25 தான் என்று இதே உரையில் பல முறை சொன்னீர்கள். அப்படியானால் பாடசாலைக்கட்டிடங்களை மட்டும் ஏன் இப்படி தீர்க்தரிசனத்துடன் அபிவிருத்தி செய்யாமல் வெறும் 10, 15 வருட காலாவதியுடன் கட்டினீர்கள்.?

5. சுயேட்சைக்கட்சிக்காரர்கள் 5கொப்பியைக்கொடுத்து விட்டு 1000ரூபாவிற்கு விளம்பரம் செய்வதாக குற்றம் சாட்டினீர்கள். அதற்காக அவர்கள் செலவளிப்பது, அவர்கள் மற்றவர்களிடம் வசூலித்ததும் அவர்களின் சொந்தப்பணமுமாகும். அது குறித்து பொது மக்கள் நாங்கள் அலட்டிக்கொள்ளமுடியாது. ஆனால் நீங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய் பணமும் எங்களின் சொந்தப்பணமாகும். அது உங்களின் சொந்தப்பணம் கிடையாது. எனவே அது குறித்து அவதானத்துடன் இருக்கவும் கேள்விகள் கேட்கவும் எங்களுக்கு பூரண உரிமை இருக்கிறது. 'நான் பொதுக்காணிகளை அபகரித்ததாகவோ மக்கள் பணத்தினைக்கொள்ளை அடித்ததாகவோ சுயேட்சைக்கட்சிக்காரர்கள் நிறூபித்தால் இந்த நிமிடமே அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக நீங்கள் நேற்றைய தினம் உங்கள் உரையில் சூழ் உரைத்தீர்கள்';.இதை நிறூபிக்க அவர்கள் எதற்கு? இந்த ஊரின் பொது மக்கள் சொல்கிறோம.; குவைத் சிட்டி வீட்டுத்திட்டத்திலும் சிலின்கோ பணவைப்பீட்டிலும் அள்ளாஹ் மீது ஆணையாக நீங்கள் மக்கள் சொத்தினை கொள்ளை அடித்திருக்கிறீர்கள். அதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். முடிந்தால் இதே போன்று ஒரு பொதுக்கூட்டத்தில் அள்ளாஹ்மீது ஆணையிட்டு இதனை நான் செய்யவில்லை என உங்களால் கூற முடியுமா? உங்களால் பல தடவை உங்கள் உரையில் நினைவூட்டப்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைத்தலைவருக்கும் இது குறித்து ஆதாரபூர்வமாக நாம் முறையிட்டிருக்கிறோம். இப்பொழுது உங்கள் அரசியல் வாழ்விலிருந்து விலகிக்கொள்ள நீங்கள் தயாரா?

6. ஒரு மணிநேர உங்களின் உரையில் ஒரு நூறு தடவைகள் அள்ளாஹ்வின் மீது சத்தியமிட்டும் தஹஜ்ஜூத் தொழுகை பற்றியும் பிரபல உலமாக்கள் எல்லாம் உங்களுடன் இருப்பதாகவும் பிரஸ்தாபித்தீர்கள். இதே உலமாக்களும் ஈமானிய உறுதியும் உங்களிடம் இருந்த போது உங்களின் அரசியல் அதிகாரத்தைப்பயன்படுத்தி எப்படி சாராயக்கடைகளுக்கான கோட்டாக்களை பிற மதத்தவர்களாக இருப்பினும் அவர்களுக்கு உங்களால் வழங்க முடிந்தது? இது குறித்து அள்ளாஹ் நாளை மறுமையில் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? வார்த்தைக்கு வார்த்தை அள்ளாஹ் ரசூல் என்று பேசினால் மட்டும் நீங்கள் அள்ளாஹ்விற்கு 100 வீதம் கட்டுப்பட்டதாய் ஆகிவிடுமா? உங்களோடு இருந்த உலமாக்கள் இது ஹராம் என்பதாக உங்களுக்கு சொல்லித்தரவில்லையா? மையவாடிக்காணியை பயன்படுத்த மட்டும் 'மஸ்லஹா ஆம்மா' வரை தேடி ஷரீஆ சட்டங்களை தெரிந்து கொள்ள முடிந்த உங்களால் மதுபானக்கடைகளுக்கு கோட்டா வழங்குவது ஹராம் என்பதை புரிந்து கொள்ள முடியாது போனது ஏன்?

7. மையவாடிக்காணிகள் அனைத்தும் நகர சபைக்கே சொந்தம். என்று ஆணித்தரமான வாதிட்டீர்கள். அதில் அபிவிருத்திப்பணி செய்ய சகல அதிகாரமும் உங்களுக்கு உள்ளதாகவும் சொன்னீர்கள். பள்ளி வாயில் நிர்வாகத்தினர் கள்ள உறுதிகளை முடித்து இவ்வாறு மையவாடிக்காணிகளுக்கு சொந்தம் கொண்டாடுவதாகவும் சொன்னீர்கள்.உங்கள் கூற்றுப்படி கள்ள உறுதி முடிக்கின்ற அளவிற்கு பொது சொத்துக்களுக்கு ஆசைப்படும் நபர்களை பள்ளிவாயில் நிர்வாகிகளாக இது வரை காலமும் அனுமதித்திருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு பிரச்சனை வந்திராவிட்டால் இப்பொழுதும் இந்த விவகாரம் எல்லாம் பேசியிருக்கமாட்டீர்கள். இப்படி நயவஞ்சகத்தனமாக நடப்பது பற்றி மட்டும் அள்ளாஹ் உங்களை மறுமையில் கேட்க மாட்டானா? இந்த ஊரின் தானைத்தலைவர் என்ற வகையில் இவ்வூரின் பள்ளிவாயில் நிர்வாகங்களை நீதியான மனிதர்களைக்கொண்டு முறையாக அமைக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா? அத்துடன் வார்த்தைக்கு வார்த்தை காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் மண்டபம் அமைந்துள்ள காணி உங்கள் காணி என்று உங்கள் உரையில் குறிப்பிட்டீர்கள். நகர சபை நிர்வாகத்தினருடன் பேசும் பொழுது 'நீங்கள் எனது இடத்தில் இருக்கின்றீர்கள். விரைவில் அதனை வலீமா மண்டபம் கட்ட விட்டுத்தர வேண்டும்' என நீங்கள் குறிப்பிட்டு காட்டுவதாக சொன்னீர்கள். உங்கள் பெயரில் ஒர் மண்டபம் இருப்பதனால் அது உங்கள் காணியாகிவிடுமா? மக்கள் அதை உங்களுக்கு எழுதிக்கொடுத்தார்களா? அல்லது நீங்கள் அந்தக்காணிக்கு கள்ள உறுதி முடித்து விட்டீர்களா?

8. பதவி பட்டங்கள் கொடுப்பது இறைவனின் நாட்டம். ஏன்று சொன்னீர்கள். அதை சொல்ல நீங்கள் தேவையில்லை. ஈமான் உள்ள ஒவ்வொரு உள்ளத்திற்கும் அது தெரியும். ஆனால் நாங்கள் கேட்பதெல்லாம் அள்ளாஹ் அமானிதமாகக்கொடுத்த அந்தப்பதவியினை மக்கள் நலனுக்காக ஒரே ஒரு முறை துறந்து உங்கள் எதிர்ப்பினை ஆட்சியாளர்களுக்கு வெளிப்படுத்த முன்வந்துள்ளீர்களா என்பதே ஆகும். நீங்கள் செய்யமாட்டீர்கள் உங்களால் செய்யவும் முடியாது. உங்களை பதவியிலிருந்து தூக்குவதற்காக 25 வருடங்களாய் சுயேட்சைக்கட்சிக்காரர்கள் நிறைய முயற்சி செய்து வருவதாகவும் பல கோடி ரூபாய்களை செலவளித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினீர்கள். பதவிக்கு அவர்கள் ஆசைப்படுவதாக இருந்தால், அதே பணத்தைக்கொண்டு தேசியப்பட்டியலில் பல பாராளுமன்றப்பதவிகளை அவர்களால் வாங்கியிருக்கமுடீயம். ஆனால் அவர்கள் மக்களை விழிப்பூட்டி மக்கள் அதிகாரத்துடனேயே எதையும் முன்னெடுக்க நினைப்பதாய் நடு நிலையாக சிந்திக்கும் எவருக்கும் தோன்றுகின்றது. பல கட்சிகளில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்த பின்னர் எல்லாவற்றையும் மறந்து மக்களுக்காய் ஒன்றுபட வேண்டும் என பெரிய மனித தோரணையில் கதை சொன்னீர்கள். அப்படியான நீங்கள் ஏன் சுயேட்சைக்கட்சிக்காரர்களின் பெயர் தாங்கிய ஒரே காரணத்திற்காக அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை உடைத்தெறிந்து, வெற்றி விழாக்கொண்டாடினீர்கள். இதுதான் நீங்கள் காட்டும் முன்னுதாரணமா?

9. தங்களின் ஆட்சி முறையானது அள்ளாஹ்வும் றஸுலும் சொன்ன வழியிலேயே முன்னெடுக்கப்படுவதாய் அடித்துச்சொன்னீர்கள். இந்த குர்ஆன் சந்தி, பிஸ்மில்லாஹ் சந்தி மற்றும் அள்ளாஹ் சந்திகள் பற்றி உலகம் முழுவதும் பெருமையாகப்பேசுவதாகவும் இங்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் அதனைப்பார்த்து 'மாஷா அள்ளாஹ்' சொல்வதாகவும் அதனை உடைத்தெறிய சுயேட்சைக்கட்சிக்காரர்கள் நீதிமன்றம் சென்றதாகவும் சொன்னீர்கள். அவர்களும்கூட பேரீட்சை மரங்களை பெருமையாக வெளியூர் அதிகாரிகளுக்கு காட்டிச்செல்வதாகவும் சொன்னீர்கள். உண்மையில் அல்குர்ஆனும் ரஸூலும,; குர்ஆனையும் அள்ளாஹ்வையும் மனித மனங்களில் விதைத்து மனிதர்களை அபிவிருத்தி செய்வதையே அபிவிருத்தியாக வலியுறுத்துகின்றன.. இவ்வாறு நடுச்சந்திகளில் இவற்றை நிறுவுவதும் பேரீட்சை மரங்களை நடுவதும் இந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் என நீங்கள் நினைத்தால் அது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இன்று இந்த ஊரின் கலாச்சாரமும் இஸ்லாமிய விழுமியங்களும் எவ்வளவு தூரம் சிதைந்து போயுள்ளன என்பதை இந்த அதிகாரிகள் அறிந்தால,; அதன் பின்னர் இந்த போலி அபிவிருத்திகளைப்பார்த்து மாஷா அள்ளாஹ் சொல்ல மாட்டார்கள். நீங்கள் ஊரை எப்படி வேண்டுமென்றாலும் அபிவிருத்தி செய்யுங்கள். அது உங்களின் சொந்தப்பணமாக இருக்கும் பட்ஷத்தில் நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். ஆனால் அபிவிருத்தியின் இறுதியில் அந்த சுமையினை எங்கள் தலைகளில் கட்டவேண்டாம் என்றுதான் சொல்கிறோம். ஈச்சை மரங்களுக்கு மத்தியில் பாரிய மின் விளக்குகளை நிறுவிய போது இந்த செலவீனத்தினை நகர சபையினால் சமாளிக்கமுடியாது என்று எதிர்க்கட்சிக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால் இன்று அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டண அதிகரிப்பால் எங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக மின்விளக்குகளை ஒளிர விடவே நாங்கள் பலதடவை யோசித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த லட்சனத்தில் உங்கள் அலங்கார அபிவிருத்திகள் எங்களுக்கு சந்தோஷத்தை தருவதற்கு பதிலாக வயிற்றில் புளியைத்தான் கரைக்கின்றது. இதற்கும் எங்கே எங்களிடம் வரி அறவிடப்போகின்றார்களோ என்று.. எனவேதான் அபிவிருத்தி என்பது மற்றவர்களிடம் பெருமை பாராட்டுவதற்காக இருப்பதை விட மக்களுக்கு மிக நீண்ட கால பயன்பாட்டிற்காக அமைய வேண்டும்.அதற்காக எங்கள் பணத்தினை நீங்கள் செலவளிக்கவேண்டுமென்றே வலியுறுத்துகின்றோம்.

10. அத்துடன் 60 மில்லியன் டொலர் செலவில் சுவரேஜ் சிஸ்டம், உலமாக்களுக்கு அறிவூட்ட 1500 மில்லியன் ரூபாய் செலவில் அறிவியற்கல்லூரி, 300 மில்லியன் ரூபாய் செலவில் பொருத்துக்கள் வீதிகள், 400 லட்சம் ரூபாய் செலவில் நகர சபை கட்டிடம் என்று உங்களின அபிவிருத்திப் பெருமைப்பட்டியல் இம்முறையும் உங்கள் உரையில் நீண்டது. ஆனால் அந்த ஒவ்வொரு அபிவிருத்தியிலும் எங்கள் பணமே சம்பந்தப்படுவதால் பொதுமக்களாகிய நாங்கள் தொடர்ந்தும் அவதானத்துடனேயே இருப்போம் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். 

இறுதியாக சமகால அரசியல் நிலவரங்களைப்பற்றி மக்களுக்கு தெளிவூட்டப்போவதாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உங்கள் பக்கம் உள்ள நியாயங்களை முன்வைப்பதை விடவும் சுயேட்சைக் கட்சிக்காரர்களை குற்றம் சாட்டும் உங்களின் வழமையான புராணத்துடனயே மக்கள் சந்திப்பும் முடிவடைந்தது, விட்டால் பொது பல சேனாவின் பிரச்சனைக்கும் இவர்கள்தான் காரணம் என நிறுவியிருப்பீர்கள். ஓர் ஜனநாயக நாட்டில் ஆழும் தரப்பின் தவறுகளை தட்டிக்கேட்கும் உரிமை எதிரணிக்கு உள்ளது. அதற்குப்பதிலலிக்கும் கடமையும் ஆழும் தரப்பிற்குள்ளது. அவர்கள் சவால் விடுகிறார்கள். விவாதத்திற்கு அழைக்கிறார்கள்...!

 விவாதம் நபி வழியல்ல எனவே நீங்கள் 3 மாதங்களுக்கு ஒர் முறை சுயேட்சைக்கட்சிக்காரர்களை சந்திக்கதயாராக உள்ளதாகவும் பகிரங்கமாக தெரிவித்தீர்கள். அதையும் கூட மிக சூட்சுமமான முறையிலேயே தெரிவித்தீர்கள். அவர்கள் உங்களை விவாதிக்க அழைப்பது உங்களுக்கு வாக்களித்த பொது மக்களாகிய எங்களுக்கு முன்னால். ஆனால் நீங்கள் அவர்களை சந்திக்க நினைப்பது அவர்களுடைய காரியாலயத்தில் திரைக்குப்பின்னால். உங்கள் மடியில் கனமில்லை என்கிறீர்கள். அப்புறம் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களை சந்திப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? இன்று இத்தனை பேர் சாட்சியாக இருக்கிறோம். எண்ணி 3 மாத காலத்தில் பொது மக்களாகிய நாங்களே ஒர் பகிரங்க சந்திப்பை ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் கட்டாயம் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம.; கலந்து கொள்வீர்கள்தானே??? எனவே நேற்று நாங்கள் எதை எதிர்பார்த்து வந்தோமோ அதையே நீங்கள் செய்து முடித்தீர்கள். தயவு செய்து இனிமேலாவது உங்கள் இயலாமையினையும் அரசியல் தந்திரோபாயங்களினையும் மறைக்க, மற்றவர்களை குற்றம் சுமத்துவதை தவிர்த்து உங்களுக்கு வாக்களித்து உங்களை பதவியில் அமர்த்திய எங்களின் கேள்விகளுக்கான விடைகளுடன் மற்றொரு பொதுமக்கள் சந்திப்பை கூட்டுவீர்கள் என நம்புகிறோம்.

3 comments:

  1. தம்பி அவறு எந்த சாராய கடைக்கி எப்ப லைசன் கொடுத என்பத நீங்க தெளிவான பதிவு இலக்கம் ஆண்டு திகதி மாததோட அறிவித்தா நா என்ட பெயரை கந்தசாமி என்று மாற்றிகொள்ள தயார் எங்கே உங்களால் முடியுமா? ஆமா மார்கத்தில கப்பாரா என்டது எதுக்கு இருக்கி சத்தியத்த முறிக்கிறது பாவமா என்ன? பரிகாரம் பன்னினா அதபத்தி அல்லாஹ் எப்படி கேள்வி கேட்பான் கொஞ்சமாவது யோசித்து கதைக்க மாட்டிங்களா?

    துரோகம் செய்தது ஹிஸ்புல்லாஹ்வா கல்குடா ஏராவூர் மக்களா? அவர்களது வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களித்து எப்படியாவது ஹிஸ்புல்லாஹ்வை விட அதிக வாக்குகளை தம் ஊர் பிரதி நிதிகள் பெற்று விருப்பு வாக்குகள் அதிகமாக பெற்றவர் நியமிக்கபடுவதன் அடிப்படையில் தம் ஊருக்கே எம்பி பதவி கிடைக்கனும் என்டு குறுக்குவழியால முயட்சி செய்ததும் அது 1989ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் வெட்ட வெளிச்சம் ஆனதும் உங்களுக்கு மறந்திடிச்சா?

    ReplyDelete
  2. கேள்வி கேட்கத் துணியாத சமூகம் அறிவும் ஆற்றலும் உடைய சமூகமாக ஒரு போதும் மாறாது!

    தவறுகளைச் சுட்டிக்காட்டித் தடடிக் கேட்க முன்வராத சமூகம் அடிமைத் தளையில் இருந்து விடுபட இயலாது!!

    அழ்ழாஹ்வுக்குப் பயப்படாமல் அரசியல் அதிகாரங்களுக்கு அஞ்சுகின்ற கோழைச் சமூகமாக காத்தான்குடிச் சமூகம் இன்னமும் இருக்கக்கூடாது!

    இதுபோலவே ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் பகிரங்க விவாதத்திற்கு மாத்திரம் நபி வழியை முன்னுதாரணமாகச் சொல்லித் தப்பித்துச் செல்லவும் முற்படக்கூடாது.

    நபி வழி பற்றிப் பேசும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, ஸ்ரீ மகராஜ் முன்னிலையில் மஞ்சள் சால்வை அணிந்து கைகூப்பி முதுகு வளைந்து பணிந்து நின்றபோது அவரின் நபி வழி எங்கே போனது?

    செலிங்கோ இஸ்லாமிய நிதிப் பிரிவில் அவரது மனைவிக்குப் பிணை நின்று கடன் எடுத்த விடயத்தில் மானுக்குப் பிணை நின்றவரெனச் சொல்லப்படும் மஹ்மூது நபியவர்களின் வாழ்க்கை ஒளி எப்படி அணைந்தது?

    அல்லாஹ்வின் பள்ளியில் நின்று சுழற்சி முறை ஒப்பந்தம் குறித்து பைஅத் செயததைக் காப்பாற்ற முடியாத அவரது அரசியல் வாழ்வில் ஒப்பந்தங்களால் உயர்ந்த உத்தம நபியின் வழி முறை பற்றி இன்றைய சமூகத்திற்கு எப்படி அவரால் எடுத்துரைக்க முடியும்?

    ஒன்று மட்டும் எனக்குத் தெரிகின்றது. காத்தான்குடி அரசியல் களத்தில் அவரது வாக்கு வங்கி நன்றாகவே சரிந்து வருகின்றது. என்றாலும் அவர் எப்படியும் வெல்வார் என்ற அச்சமும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.

    கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகுதி வாக்குகளின் அடிப்படையில் இறுதி ஆசனத்தைப் பெறுவதற்கு நிச்சயமான நல்லாட்சிக்கான மக்கள் இயக்த்தைக்கூட இறுதிக்கட்டத்தில் கவிழ்த்த மகா வல்லமை இலங்கை நாட்டில் அவருக்கு மாத்திரமே உண்டு.

    4000 வாக்குகளை தலை கீழாகப் புரட்டியதன் மூலம், தோற்றுப்போன கவலையுடன் வாக்கெண்ணும் நிலையத்தை விட்டும் எங்கோ போயிருந்த சந்திரகாந்தனை முன்னே கொணர்ந்து, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதித்துவத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண மட்ட 2 ஆசனங்களுக்கும் வேட்டு வைத்த வாக்குக் கொள்ளை பற்றி நான் பல்வேறு ஊடகங்களிலும் கடந்த காலங்களில் எழுதி வந்திருக்கின்றேன். ஏனென்று கேட்பாரும் இல்லை. என்மீது நடவடிக்கை எடுத்தாரும் இல்லை.

    இப்படிப்பட்ட மகா வல்லவர் இந்த ஊரில் மக்களால் தோற்கடிக்கப்பட்டாலும், தோற்றுப் போக மாட்டார் என்பது ஒரு அச்சம் கலந்த எதிர்பார்ப்பு.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. செவிடன் காதில் ஊதிய சந்குமாதிரி இதெல்லாம் அவருக்கு எப்படி விளங்கப்போவுது

    ReplyDelete

Powered by Blogger.