அடி பாவி..!
சீனாவில் தெருவோரத்தில் விற்கப்பட்ட யோகர்ட் எனப்படும் இனிப்பு தயிர் சாப்பிட்ட 2 பள்ளி குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. கிண்டர் கார்டன் பள்ளியின் பெண் உரிமையாளர் இந்த சதியில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஹெபி மாகாணத்தில் உள்ள கிராமத்தில் 2 கிண்டர் கார்டன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பள்ளி சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு பள்ளியில் குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். இதில் பொறாமைப்பட்ட அந்த பள்ளியின் பெண் உரிமையாளர், யோகர்ட் எனப்படும் இனிப்பு தயிரில் எலி விஷத்தை கலந்து, போட்டி பள்ளியின் அருகில் ஒருவர் மூலம் விற்க செய்துள்ளார்.
அந்த பள்ளியில் வகுப்புகள் முடிந்து வெளியில் வந்த குழந்தைகளில் 2 பேர், தெருவோரம் விற்கப்பட்ட யோகர்ட்டை வாங்கி குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, தனது பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், போட்டி பள்ளியின் நற்பெயரை கெடுக்கவும் யோகர்ட்டில் எலி விஷம் கலந்து விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பள்ளியின் பெண் உரிமையாளரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Post a Comment