Header Ads



முஸ்லிம் சகோதரரிடம் பொலிஸார் மன்னிப்பு கேட்கவேண்டும் - நீதியரசர் மொஹான் பீரிஸ்

இலங்கையில் யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று நாட்டின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் காவல்துறையை எச்சரித்துள்ளார்.

நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலித்தபோதே தலைமை நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறினார்.

நியாயமான காரணமின்றி தன்னைக் கைதுசெய்த பொலிசார் இரண்டு மணிநேரத்துக்குப் பின்னர், எந்தவிதக் குற்றச்சாட்டுக்களுமின்றி தன்னை விடுவித்துவிட்டதாக மனுதாரர் வழக்கில் தெரிவித்துள்ளார்.

பொலிசார் சார்பில் ஆஜரான அரசதரப்பு சட்டத்தரணி மனுதாரருக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

எனினும், இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைமை நீதியரசர் இருதரப்புக்கும் இடையிலான பிணக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், பொலிசாரின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு திருப்தியடையமுடியாது என்று கூறினார்.

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் கிழக்கு மாகாணத்தில் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய நீதியரசர் மொஹான் பீரிஸ், இவ்வாறான சிறிய சம்பவங்களால் கூட அந்த சமாதான சூழல் சீர்குலைந்துபோவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, சம்மந்தப்பட்ட பொலிசார் மனுதாரரிடம் நீதிமன்றத்தின் முன்னால் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் தலைமை நீதியரசர் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 7-ம் திகதிக்கு ஒத்திவைத்த மொஹான் பீரிஸ், அன்றைய தினம் மன்னிப்புக் கோருவதற்காக சம்மந்தப்பட்ட பொலிசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அரசதரப்பு சட்டத்தரணிக்கு அவர் உத்தரவிட்டார். bbc

No comments

Powered by Blogger.