நிந்தவூர் தொழில் பயிற்சி நிறுவன அதிகாரிகளே..! இது உங்களின் கவனத்திற்கு..!!
1995 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தொழிற்யிற்சிக்கான சட்டத்தின் பிரகாரம் கிராமிய இளைஞர்களது திறன்களை விருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தேசிய தொழில் பயிற்சி அதிகாரசபையின் கீழ் நாடெங்கும் 6 தேசிய தொழில்பயிற்சி நிறுவனங்களும் (NATIONAL VOCATIONAL TRAINING INSTITUTE) 22 மாவட்ட தொழில்பயிற்சி நிலையங்களும் (DISTRICT VOCATIONAL CENTER ),232 தொழில் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவருகின்றன .
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதேசம் சார் தேவைகளையும்,பிரதேசத்தில் காணப்படும் வளங்களையும் அடிப்படையாக வைத்து பயிற்சி நெறிகள் நடாத்தப்படுகின்றன. க/பொ /த சாதாரண தரம் பயின்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற இப்பயிற்சி நெறிகள் இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இலகுவாக தொழில் வாய்ப்பை வழங்குவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.மட்டுமன்றி தகவல் தொழில் நுட்பத்துறையில் குறிப்பிட்ட அதிகளவு கிராமிய மாணவர்களுக்கு பயிற்சிகள் கிடைப்பதற்கு உதவியும் செய்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான 20 நிலையங்கள் காணப்படுகின்றன அதில் நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள நிலையமானது, மாவட்டதொழில் பயிற்சி நிறுவனமாகும். இங்கு எனைய நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பிரதேச தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பயிற்சி நெறிகளை உள்ளடக்க தவறியிருப்பது இளைஞர்களதும் பிரதேச வாசிகளதும் வேதனையாக இருக்கின்றது ,
அம்பாறை மாவட்டம் இலங்கையைப் பொறுத்தவரை விவசாயத்தில் அதிகளவில் ஈடுபடும் ஒரு மாவட்டம் அதே போல் இலங்கையின் மீன்பிடி கைத்தொழிலிலும் பிரதானமாக ஈடுபடுகின்ற ஒரு மாவட்டமாக இருந்திட்டபோதிலும், விவசாய இயந்திரங்களை இயக்குதல்,பழுது பார்த்தல்,மீன்பிடி உபகரணங்களை திருத்துதல் போன்ற பயிற்சி நெறிகள் பிரதேசத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது விசனத்தை தெரிவிக்கக் கூடிய ஒரு விடயமல்லவா?
வெறுமனே தையல் பயிற்ச்சியையைம்,வீட்டு,மின்னிணைப்பு,குழாய் பொருத்துநர்,உள்ளிட்ட சில பாடநெறிகளை மட்டும் நடாத்துவதுடன் நின்று விடாது இன்றைய சமூகத்தின் தேவைகளை கொள்கை வகுப்போரிடம் எடுத்துக்கூறி இவ்வாறன பயிற்சி நெறிகளை ஆரம்பித்தால் இப்பிராந்திய ஏழை இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றுமல்லவா ? குறித்த நிறுவனம் சார் உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் முயற்சி செய்வதுடன் பிரதேச அரசியல் வாதிகள் குறித்த அமைச்சுடன் தொடர்பு கொண்டு குறித்த பாடநெறிகள் மட்டுமன்றி இன்னும் இங்கு குறிப்பிடப்படாத பிரதேசத்திற்கு நன்மை பயக்கக் கூடிய பயிற்சி நெறிகளை உட்புகுத்தி முயற்சி செய்வதும் ஒருவகையான அபிவிருத்தி என்று கூறலாம்.

Post a Comment