Header Ads



தரமற்ற வீதிகளை நிர்மாணித்த ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவு நிறுத்தப்படும்


(மொஹமட் நளீஜ்)

தரமற்ற வீதிகளை நிர்மாணித்துள்ள ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் கொங்ரீட் வீதிகளின் தரத்தை பரிசீலிப்பதற்கு குழுவொன்றை நியமித்துள்ளேன்.

அக்குழு மேற்பார்வை செய்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் இதற்கமைய தரமற்ற வீதிகளை நிர்மாணித்த ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவுகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒழுங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகத்தில் மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பிரதேசங்கள் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது அப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மற்றும் பெளதிக வளங்களை மேம்படுத்த கிழக்கு மாகாண சபையினூடாக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியினூடாக மூதூர் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப மூன்று மாவட்டங்களின் அரச அதிபர்களின் ஒத்துழைப்புடன் ஜெய்கா, என்டிர்ப், மற்றும் ஏ. டீ. பீ ஆகிய நிறுவனங்களின் நிதியின் மூலம் வீதிகள், பாலங்கள், குளங்கள் வாய்க்கால்களை புனர் நிர்மாணம் செய்ய பல கோடி ரூபாக்களை இவ்வருடம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

2 comments:

  1. நல்லதொரு அறிவிப்பு முதலமைச்சர் அவர்களே..!

    மிக விரைவில் காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் மேற்படி திட்ட நிதிகளில் இருந்தும், 'தயட்ட கிருள்ள' திட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ள "தரமற்ற கொங்றீட் வீதி"களின் பெயர்ப்பட்டியல் ஒன்றை உங்களின் கவனத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு இந்த நிமிடத்திலிருந்து முயற்சிக்கின்றேன்.

    அரசாங்கத்தின் பணம் மக்களின் பணம். அது துஷ்பிரயோகம் செய்வது எமக்கு நாமே தீங்கிழைப்பதாகும். இந்த விடயத்தில் பொதுமக்கள் தரமற்ற கொங்றீட் வீதிகள் தொடர்பான தகவல்களை அச்சமின்றி தெரிவிக்க முன்வர வேண்டும்.

    முதலமைச்சரின் கவனத்திற்கு..

    "தரமற்ற கொங்றீட் வீதி"களுடன் மட்டும் உங்கள் கவனத்தைச் சுருக்கிக் கொள்ளாது "தரமற்ற பொருத்துக்கல் வீதி"களின் பக்கமும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    எமது பிரதேசத்தில் தரமற்ற பொருத்துக் கற்களைக் கொண்டு பல மில்லியன் ரூபா செலவிலான வீதிகள் அமைக்கப்பட்டு வருவதாக காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர், ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர் என ஒட்டு மொத்த சபை உறுப்பினர்களுமே தமது அதிருப்திகளை கடந்த ஏப்ரல் மாத சபை அமர்வில் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றனர்.

    'இந்த அநியாய அபிவிருத்தி'யின் பக்கமும் உங்களின் பார்வை உடனடியாகத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Hon. CM,

    இந்த நடவடிக்கையை எப்பொழுதோ செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் கிண்ணியாவிலும் மூதூரிலும் அமைக்கப்பட்டுள்ள கொங்றீட் பாதைகள் பலவற்றிலுள்ள குழிகளில் விழுந்து எழுந்து மக்கள் கால்களை முறிக்கவும் வாகனங்களை உடைத்துக்கொள்ளவும் அவசியமில்லாமல் போயிருக்கும்.

    முதலமைச்சர் அவர்களே,

    ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவை நிறுத்துவதுபோல இன்னொரு காரியமும் நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். அதாவது கொங்றிட் பாதையின் தரத்தை பரிசீலிக்கச் செல்லும் குழுவினர் தமது கடமையை சரிவர செய்யாமலிருந்தால் அவர்களுக்குரிய கொடுப்பனவையும் நிறுத்தி விடுவதாக அறிவியுங்கள்.

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எதிர்வரும் ரமழானில் அதிகளவு பேரீச்சம்பழங்களை அருளுவான்.

    ReplyDelete

Powered by Blogger.