Header Ads



பொதுபல சேனா மூலமே அரசாங்கத்திற்கு வீழ்ச்சி ஏற்படும் - பிரபா கணேசன்


(ADT) பொதுபல சேன ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் பாராதூரமாக தென்படுகிறது. இவர்கள் வெறுமனே பௌத்த மத வாதத்தை தூண்டுபவர்களாக மட்டுமின்றி தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பது கண்கூடாக தெரிகின்றது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, 

இந்நாடு பௌத்த சிங்களவர்களுக்கே உரிமையானது எனவும் அரச விழாக்களில் பௌத்த மத வழிபாடுகளே இருக்க வேண்டும் என்றும் ஏனைய மதங்களை அரச விழாக்களில் சம்பந்தப்படுத்தக் கூடாது என்றும் பொதுபல சேனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. 

இது இந்நாட்டின் ஐக்கியத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும். பொதுபல சேனா சம்பந்தமாக கடந்த முறை இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்களாகிய நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த போது பொதுபல சேனா, ராவணா பலய போன்ற அமைப்புகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவை வெகு விரைவிலே கலைந்து விடும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 

இருப்பினும் இன்று இவ்அமைப்புகள் நாளுக்கு நாள் சிங்கள பௌத்த இனவாதத்தை முன்னிறுத்தி வருகின்றன. இலங்கை பௌத்த சிங்களவர்களின் நாடென்றும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அளவுக்கு செல்கின்றனர். 

இந்நாட்டில் ஜாதி மதங்கள் இல்லை எனவும் நாட்டின் மீது அன்பு கொண்டவர்களும் நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்களுமாக இரண்டு இனங்களே இருக்கின்றது என கூறிய ஜனாதிபதின் கூற்று இன்று கேள்விக்குறியாயுள்ளது. 

இப் பொதுபல சேன தமிழர்களுக்கு சரியான தீர்வை இந்த அரசாங்கம் கொடுக்கவில்லை என்றும் ஊடக அறிக்கையின் மூலமாக வெளிப்படுத்துகின்றது. இது முஸ்லிம் மக்களுக்ளும் தமிழர்களுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் நாடகமாகும். 

யுத்தம் முடிவடைந்தவுடன் விட்டுக்கொடுப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தால் ஒரு சில விடயங்களையாவது பெற்றுக்கொண்டு மேலதிக உரிமைகளுக்காக களமிறங்கியிருக்கலாம். ஆனால் தமிழ் தேசியம் என்ற போர்வையில் நம்மவர்களும் தமிழ் இனவாதத்தை பேசியதனாலேயே பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புபகள் உருவாவதற்கு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

அரசாங்கத்தின் போக்கை கண்டித்து ஜனநாயக ரீதியாக நடத்தும் எதிர்கட்சியின் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது. நாளை அரசாங்கத்தை வீழ்த்தி எதிர்கட்சியினர் ஆட்சியமைப்பார்களேயானால் அது ஜனநாயகத்திற்குரிய விடயமாகும். ஆனால் 75 வீதம் சிங்கள மக்கள் வாழும் இந்நாட்டில் 15 வீதமாக வாழும் தமிழ் மக்களின் ஒரு சில தலைவர்களும் தமிழ் தேசியம் என்ற போர்வையிலே ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுவதற்காக தங்களின் அரசியலை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் விடுக்கும் தமிழ் இனவாத ஊடக அறிக்கைகள் அரசாங்கத்தின் மூலமாக சிங்கள மொழியிலே மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள ஊடகங்களில் வெளியிடப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த இனவாதம் மேலோங்கி வருகின்றது. 

அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளை அம்பலப்படுத்துவது எதிர்கட்சிகளின் ஜனநாயக ரீதியான செயல்பாடுகளாகும். அரச எதிர்ப்பு என்ற போர்வையில் நாம் தமிழ் இனவாதத்தை முன் வைப்போமானால் பொதுபல சேனா போன்ற அமைப்புகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு யுத்தமோ கலவரமோ ஏற்பட்டால் மிச்சம் சொச்சம் இருக்கும் தமிழர்களும் இந்நாட்டில் இல்லாது போககூடிய அபாயம் உள்ளது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அதே நேரம் பொது பல சேனா, ராவண பலய போன்ற அமைப்புகளை அரசாங்கம் கண்டு கொள்ளாதிருந்தால் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி அவ் அமைப்புகள் மூலமாகவே ஏற்படும் என்பதை வெகுவிரைவில் புரிந்து கொள்ள வேண்டி வரும். 

No comments

Powered by Blogger.