Header Ads



பாப்பாக்களின் பற்களும், சில குறிப்புகளும்..!


ஒரு கோடி மின்னல்களை மனதில் வீசிப் போகும் புன்னகை... முத்துப்பற்களில் நட்சத்திரங்களைக் கோர்த்து இசைக்கிற போது நம் காதுகளில் விழும்  அந்த இசை வேறெந்த இசைக்கருவியாலும் தர முடியாதது. பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு முத்துப் பற்களில் உண்டாகும் பிரச்னைகளை சமாளிப்பது  குறித்து விளக்கம் அளிக்கிறார் பல் மருத்துவ நிபுணர் கைலின்...

வேர்: குழந்தையின் ஆரோக்கியத்தையும் அழகையும் பிரதிபலிப்பது பற்கள். ஒரு மாதக் கருவாக இருக்கும் போதே பற்கள் முளைப்பதற்கான  சாத்தியங்கள் தென்படும். அம்மாவுக்கு ஏற்படும் சத்துக்குறைபாடும் நோய்களும் குழந்தையின் பல் முளைப்புக்கான ஆதாரங்களை பாதிக்கும். புரதம்  மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முளை: பல் இல்லாவிட்டால் கூட குழந்தை யின் வாயை சுத்தமாகப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பால் குடித்த பிறகும், வேறு ஏதாவது  சாப்பிட்ட பிறகும் மெல்லிய துணியை விரலில் சுற்றிக் கொண்டு, ஈறுகளை மென்மையாகத் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். 8 முதல் 10  மாதங்களுக்குள் கீழ்த்தாடையில் 2 பற்கள் முளைக்கும். 3 வயதுக்குள் 20 பால் பற்கள் குழந்தைக்கு முளைத்து விடும். 

துளிர்: முன்பற்களில் கருப்பு நிறம் படிவதற்கும், பல் அரிப்பு பிரச்னைகளுக்கும் அதிக இனிப்பு சாப்பிடுவதே காரணம். இரண்டே பற்கள்  முளைத்திருந்தாலும் அதைத் துலக்க பெற்றோர் உதவ வேண்டும். டூத் பிரஷ்ஷின் கைப்பிடி பெரிதாகவும், தலை சிறிதாகவும் இருக்க வேண்டும்.  வெவ்வேறு வண்ணங்களில், வெவ்வேறு வடிவங்களில் 5 பிரஷ்களையாவது வாங்கி வைத்துக் கொள்ளவும். 

முதலில் குழந்தையை பொம்மைக்கு பல் துலக்கும்படி சொல்ல வேண்டும். அது விளையாட்டுப் போல குழந்தையைத் தொற்றிக் கொள்ளும். பளிச்சிடும்  பற்களை பாராட்ட வேண்டும். இரு வேளையும் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாக்கை மிருதுவாக சுத்தப்படுத்த வேண்டும். ப்ளூரைடு  உள்ள டூத்பேஸ்ட் பயன்படுத்தலாம். நிலக்கடலை அளவுக்கும் அதிக பற்பசை எடுத்துக்கொண்டால், உணவின் ருசி கெடும்.  

மலர்: 3 முதல் 5 வயதுக்குள் 20 பால் பற்களும் வரிசைகட்டி குழந்தைகளின் சிரிப்பை அழகாக்குகிறது. ஆரோக்கியத்துக்கு பல்தான் அச்சாரம்.  உணவை மெல்லும் கடைவாய்ப் பற்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அவற்றில் உணவுத்துகள் தங்கி விடுவதால் சொத்தை உண்டாகும். பல்  சொத்தையால் பள்ளம் ஏற்படும். அதில் கிருமிகள் வளர்ந்து அமிலத்தை வெளிப்படுத்துவதால், பற்கள் கரைந்து பல் கூச்சம் உருவாகும். 

அடுத்த கட்டமாக அடிக்கடி பல்வலி ஏற்படும். சத்தான உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் குழந்தை பலவீனம் அடையும். பற்கள் விழுவதால்  முகத்தின் அழகு பாதிக்கப்படும். பால் பற்கள் பாதிக்கப்பட்டால் நிரந்தர பற்கள் சீரான வரிசையில் முளைக்காது. அதைச் சரி செய்ய ‘கிளிப் போடுதல்’  போன்ற தொந்தரவுகளை குழந்தைகள் சந்திக்க நேரிடும். பற்களை இழக்கும் குழந்தையின் பேச்சு மாறவும் வாய்ப்புள்ளது. சொத்தையைத் தடுக்கவும்  பல்லை சீரமைக்கவும் சிகிச்சைகள் இருக்கின்றன. 

உதிர்வு: கீழே விழும்போதோ, யாராவது அடிக்கும் போதோ கூட குழந்தையின் பல் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை அடிக்கவே கூடாது. முக்கியமாக,  பல் விழும் அளவுக்கு கன்னங்களில் அடிக்கக் கூடாது. பற்களை முன் பக்க உதடுகள் பாதுகாக்கின்றன. கீழே விழும் போது, பல்லில் அடிபட்டால்  உடையும். உடைந்த பல்லின் நிறம் மாறும். அடிபட்ட பற்களின் வேரில் நோய்க்கிருமி தொற்று உண்டாகும். பல்லில் அடிபட்டால் உடனடியாக  மருத்துவரை அணுகிச் சரி செய்ய வேண்டும். 

ரத்தக்குழாய்கள் வலுவுடன் இருக்க ‘வைட்டமின் சி’ உயிர்ச்சத்து உதவுகிறது. உணவில் இந்தச் சத்துக் குறைபாடு ஏற்பட்டால் ஈறுகளில் ரத்தம் வடிய  வாய்ப்பிருக்கிறது. ஈறுள்ள பகுதியில் காயம் ஏற்பட்டாலும் ரத்தக்கசிவு உண்டாகும். பாக்டீரியாவும் நுண்ணுயிர் கிருமிகளும் தாக்கும்போது ஈறுகள்  தடித்து, புண்ணாகி, ரத்தம் வடிய வாய்ப்பிருக்கிறது. பழைய அல்லது தடித்த பிரஷ் உபயோகிப்பதாலும் ஈறுகளில் ரத்தம் வடியும். சரியான  காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். 

மன அழுத்தம்: பயம், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் குழந்தைகள் பல் பிரச்னைகளை சந்திக்கிறார்கள். தனிமையை உணரும் குழந்தை விரல்  சப்பும் பழக்கத்துக்கு ஆளாகிறது. 5 வயது வரை இதற்காக பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் தொடர்ந்தால் முன்பக்க பற்கள் தூக்கிக்  கொள்ளும். முக அழகு கெடும். இதை நிறுத்தவும் சிகிச்சைகள் இருக்கின்றன. 

மன அழுத்தம், பயத்துக்கு ஆளாகும் குழந்தை இரவில் பற்களை ‘நறநற’வென கடிக்கும். பற்களைக் கொறிப்பதால் அவை உடையும் அபாயம்  இருக்கிறது. இப்பாதிப்பைத் தடுக்க மருத்துவர் ஆலோசனையுடன் கிளிப் பொருத்தலாம். இந்த பாதிப்புள்ள குழந்தைகளிடம் பெற்றோர் அதிக அன்பு  செலுத்த வேண்டும். தூங்கப் போவதற்கு முன்னால் மகிழ்ச்சி தரும் கதைகள் சொல்லலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி ‘ஹேபிட் பிரேக்கிங்  அப்ளையன்ஸ்’ பயன்படுத்தலாம். 

சில குழந்தைகள் பேசும்போது நாக்கால் பற்களை உந்தித் தள்ளுவார்கள். அதை மாற்ற பயிற்சி அளிப்பது அவசியம். இந்தப் பழக்கத்தால் முன் பக்க  பற்கள் தூக்கிக் கொண்டு, முக அழகைக் கெடுக்கும். ஆண்டுக்கு ஒரு முறையாவது குழந்தைகளின் பற்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதனை  செய்து கொள்ள வேண்டும். 

No comments

Powered by Blogger.