மருத்துவ உலகில் புரட்சி - மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டு சாதனை (படம்)
மருத்துவ சிகிச்சையின் நவீன வடிவமாக குருத்தணு எனப்படும் ஸ்டெம்செல் சிகிச்சைமுறை கருதப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைமுறை மூலம், இரண்டுவயதுப் பெண்குழந்தை ஒன்று மூச்சுக்குழாயினைப் பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் அருகருகே அமையப்பெற்றிருக்கும். ஆனால், 2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்த ஹன்னா வாரன் என்ற பெண்குழந்தை, மூச்சுக்குழாய் இன்றிப் பிறந்துள்ளது.
அதனால், மூச்சுவிடமுடியாமல், பேச இயலாமல், தானே உணவு உண்ணமுடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே, செயற்கை சுவாசக்கருவியுடன் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஆறு வயதிற்குப் பின்னர், இந்தக் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
ஆனால், சென்ற மாதம், அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மருத்துவமனையில், ஒன்பது மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சையில், அவளுக்கு மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, கண்விழித்த ஹன்னா முதன் முறையாக, செயற்கைக் கருவியின் உதவியின்றி, தானே மூச்சு விட்டிருக்கின்றாள். அவளுக்கு பொருத்தப்பட்ட மூச்சுக்குழாயானது, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்டு, அவளது குருத்தணுத் திசுக்களின் உதவியின் மூலம் திசுவளர்ச்சி பெறப்பட்டபின், அவளது உடலினுள் பொருத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து, மூன்று வாரங்கள் கழிந்த நிலையில், அவள் தனது முதல் லாலிபாப் மிட்டாயை ஆர்வமுடன் சுவைத்து சாப்பிட்டுள்ளாள். சிலமாதங்கள் கழிந்தபின், வீட்டிற்கு அனுப்பப்படும்போது, அவளே நடந்து செல்லும் நிலைமையில் இருப்பாள் என மருத்துவர்கள் நம்புகின்றனர். அவளுடைய குருத்தணுவையே பயன்படுத்தியதால், நன்கொடையாளருக்காக காத்திருக்கத் தேவை ஏற்படவில்லை. மேலும், அவளது உடலும், அதனை எளிதில் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Post a Comment