மியன்மாரில் மீண்டும் அகோரம் - 2 பள்ளிவாசல்களுக்கு தீ வைப்பு, 40 பேர் காயம்
(Tn) மத்திய மியன்மாரில் கலகக்கார்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானதோடு 40 பேர் காயமடைந்தனர். இவர்கள் இரண்டு பள்ளிவாசல்கள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டடங்களை தீக்கிரையாக்கியுள்ளனர்.
மியன்மாரின் வர்த்தக நகரான ரங்கூனிலிருந்து வடக்காக 110 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் ஒக்கான் கிராமத்தின் மீதே கலகக்கார கும்பல் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கடந்த மார்ச் தொடக்கம் முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையிலான மதக் கலவரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட தீ பிளம்பு அண்டிய கிராமங்கள் வரை தென்பட்டதோடு செவ்வாய் இரவு முழுவதும் பல பகுதிகளிலும் தீப்பற்றி எரிந்துள்ளது. தீயை அணைக்க ஊர் மக்கள் இரவு முழுவதும் போராடினர்.
சுமார் 400 பேர் கொண்ட ஆயுத கும்பல் கம்பு, பொல்லுகளுடன் வந்து தாக்குதல் நடத்தியதாக உள்ளூர்வாசி ஒருவர் குறிப்பிட்டார்.
“மியன்மாரில் மையப்பகுதியில் வன்முறை பரவிவருகிறது” எனக் குறிப்பிட்ட பாங்கொக்கிலிருக்கும் அல் ஜஸீரா செய்தியாளர் “தற்போதைய வன்முறைகளையும் துருப்புகளோ பாதுகாப்புப் படையினரோ வந்து தடுக்கவில்லை” என்றார்.
கலகக்காரர்கள் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் பள்ளிவாசல்களை இலக்கவைத்தே தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 20 கலகமடக்கும் பொலிஸார் பின்னர் அங்கு பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் ஒக்கானில் இருக்கும் இரு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதோடு அருகிலிருக்கும் மூன்று கிராமங்கள் உட்பட 100க்கும் அதிகமான முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
“அவர்கள் ஒரு மணி அளவில் வந்தார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்களல்ல. பெரும்பாலானோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்” என்று ஒக்கான் பகுதியில் கடை ஒன்றில் பணி புரியும் 60 வயதான கின் மவுன் தன் குறிப்பட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானவர்கள் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருப்பதாக உள்ளூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
“சுமார் 200, 300 பேர் மோட்டார் சைக்கிள்களில் வந்து எமது பள்ளிவாசலை தகர்த்தார்கள். அனைவரும் பாதுகாப்புக் கருதி வெளியே ஓடிவிட்டோம். நாம் பயத்தால் எதிர்க்கவில்லை. அவர்களின் விருப்பப்படி அனைத்தையும் உடைத்தெறிந்தார்கள்” என 48 வயது முஸ்லிமான சொமையின் ஏ. எப்.பி. செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மேற்கு ரகின் மாநிலத்தில் ஆரம்பமான கலவரத்தை அடக்குவதில் மியன்மாரின் ஜனநாயக சீர்திருத்த அரசு கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது. கலகக்காரர்களை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி தைன் சைன் அரசு தோல்வியடைந்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் காட்டியுள்ளன. இதில் அரச நிர்வாகம், பெளத்த பிக்குகள், உள்ளூர் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் உட்பட சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம் இன அழிப்பு வேலையில் ஒன்றிணைந்து செயற்படுவதாக மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

Post a Comment