மையவாடிக் காணி மீதான அத்துமீறல் - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கண்டிப்பு
ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிக் காணி மீதான அத்துமீறலை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது
அபிவிருத்தி என்ற பெயரில் பொதுமக்களினதும், பள்ளிவாசல்களினதும் சொத்துக்களையும் ஆக்கிரமிப்புச் செய்யும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை தமது இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
11ம் திகதி சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடியின் முன் பகுதியை காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் தலைமையிலான ஆளுந்தரப்பினர் அடாவடித்தனமாக ஆக்கிரமிப்புச் செய்து எல்லையிட்டு அடைக்க முற்றபட்ட சம்பவம் குறித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது ஆடசேபனையையும், கண்டனத்தையும் தெரிவிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அபிவிருத்தி என்ற பெயரால் பொதுமக்களினதும், பொது நிறுவனங்களினதும் பள்ளிவாயல்களினதும் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் அபகரிக்கப்படுவது குறித்தும், அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்கின்ற கோடிக் கணக்கான நிதிகள் அவர்களால் சுரண்டப்படுவது குறித்தும் பொதுமக்களை எமது இயக்கம் நீண்ட காலமாகவே விழிப்பூட்டியும் எச்சரித்தும் வந்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொதுமக்களின் நிதியுதவியைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட குவைத் சிட்டி வீட்டுத் திட்ட காநியக் காட்டி பெருந்தொகைப் பணத்தினை அரசாங்கத்திடமிருந்து திருட்டுத் தனமாகப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறு இந்த அரசியல்வாதிகள் மோசடியான முறையில் முயற்சித்தார்கள் என்பது எமக்கு எல்லோருக்கும் பாடமாக இருக்கின்றது.
எனினும் எமது மக்கள் ஆட்சியதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளின் இதுபோன்ற பொதுச் சொத்துக்களை பலாத்காரமாகக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கும் அடாவடித்தனங்களுக்கும் தமது எதிர்ப்புக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்கும் விடயத்தில் பாராமுகமானவர்களாகவும் அஞ்சிப் பயந்தவர்களாக்கவுமே இருந்து வந்துள்ளனர்.
அரசாங்கத்தரப்பிலுள்ள அரசியல்வாதிகள் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்திடமிருந்து அரச காணிகளைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டுமேயன்றி, மக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் சொந்தமாகவுள்ள காணிகளை தமது அடியாட்களைக் கொண்டு களேபரப்படுத்தி, அதிகாரபலத்தால் பலாத்காரமாக அபகரித்து, பொலீசாரையும், படைத்தரப்புக்களையும் கொண்டு ஆக்கிரமித்து அவற்றை அரச சொத்துக்களாகத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு முனையக்கூடாது. நமது காத்தான்குடிப் பிரதேசத்தின் நிருவாக எல்லையைக் கூட இதுவரை சரியாக உறுதிப்படுத்த முடியாத கையாலாகாத் தனமான அரசியல்வாதிகளும் அவர்களின் கும்பல்களுமே இவ்வாறான மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதனை நாம் அவதானிக்கின்றோம். அவ்வாறு காத்தான்குடியின் எல்லைகள் உறுதிப்படுத்தப் பட்டிருக்குமேயானால் பெருந்தொகை நிலப்பரப்பு நமது மக்களுக்காகக் கிடைத்திருக்கும்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரான அல்ஹாஜ் யூ.எல்.எம்.என் முபீன் அவர்களும் கூட கடந்த 23.04.2012ம் திகதியில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் பேசும்போது நமது காத்தான்குடிப் பிரதேசத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்கும் பட்சத்தில் 1.6 சதுர கி.மீ பரப்பளவான காணி மேலதிகமாக நமக்குக் சேர வேண்டியேற்படும் எனச் சுட்டிக்காட்டி இருந்ததை நாம் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் நமது பிரதேசத்திற்கும், மக்களுக்குமான பௌதீக வளங்களை அதிகரிப்பது பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டுமே தவிர, அரச காணிகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியாத தமது இயலாமையை மறைப்பதற்காக 'குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்ற' கணக்காக நமக்கிருக்கின்ற குறுகிய நிலப்பரப்புக்குள் நமது பொது நிறுவனங்களுக்கு இருக்கின்ற குறைந்தளவு நிலங்களையும் அபகரிப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது.
சமூகத்திற்குத் தலைமை தாங்கக்கூடியவ அறிவும், ஆற்றலும், விவேகமும் நேர்மையும் இறையச்சமும் இல்லாதவர்களின் கரங்களில் அதிகாரம் வழங்கப்படுவதன் காரணமாகவே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றன என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறான தலைமைத்துவ பண்புகளைக் கொண்டவர்களை கவனமாக அடையாளங்கண்டு தெரிவு செய்ய வேண்டியது மக்களின் கடமை என்பதை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
எனினும், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி பொதுமக்களின் நிதியை பல வழிமுறைகளிலும் சுரண்டிப் பிழைக்கினவர்களின் தந்திரமான அரசியலுக்கு எமது மக்கள் தொடர்ந்தும் பலியாகி விருகின்றார்கள் என்பது எமது சமூகத்தின் பெரும் துரதிஷ்டமாகும்.
பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்களின் காணிகளை அரசாங்கக் காணிகளாக எழுதிக் கொடுப்பதற்குத்தான் நமது நகரசபையும் பிரதியமைச்சர் பதவியு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியும் பயன்படுத்தப் படுகின்றதா? என்பதும் இங்கு விடையளிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய கேள்வியாகும்.
முகைதீன் மெத்தைப்பள்ளிவாசலுக்குரிய கடைகளையும் நகர சபையின் தீர்மானம் எதுவுமின்றி இவ்வாறுதான் நகரசபைத் தவிசாளர் தனது அடியாட்களுடன் சென்று கபளீகரப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக தனக்குச் சொந்தமான பெறுமதியான காணியினை அப்பள்ளிவாயல் இழந்ததுடன் ஆறு இலட்சம் ரூபா வரையான பெருந்தொகைப் பணத்தினை பள்ளிவாயல் வழக்குச் செலவாக அநியாயமாகச் செலவழிக்க நேரிட்டது. அவ்வழக்கு தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்வதற்கு அப்பள்ளிவாசல் நிர்வாகம் முயற்சித்தபோது, தந்திரமாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி மேன் முறையீடு செய்வதற்கான காலத்தைக் கடத்தியதுடன் இன்னமும் அப்பள்ளிவாசலின் உடைக்கப்பட்ட கடைகளைக் கட்டுவதில் அவரது குடும்ப உறுப்பினரை வைத்து பள்ளிவாயலுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்து தாமதமாக்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.
அதுபோலவே, தற்போது ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாசலுக்குரிய மையவாடியையும் நகர சபையின் தீர்மானம் எதுவுமின்றி சண்டித்தனமான முறையில் தவிசாளரும், ஆளுந்தரப்பு உறுப்பினர்களும், அவர்களின் அடியாட்களுமாக கபளீகரமாக ஆக்கிரமிக்க முயன்றுள்ளனர். இவ்வாறான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பில் நகரசபை அமர்வுகளில் பேசப்படவுமில்லை தீர்மானிக்கப்படவுமில்லை. இது முழுக்க முழுக்க நகரசபைத் தவிசாளரினது தன்னிச்சையான எதேச்சதிகாரமான நடவடிக்கை என்பதனையும் கூறி வைக்க விரும்புகின்றோம். இவர் யாருடைய அரசியல் அதிகார பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலும் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார் என்பதனையும் மக்கள் மறந்து விடக்கூடாது.
இதனை யாரும் எதிர்பாராத வகையில் அப்பள்ளிவாசலின் நிர்வாகத்தினரும், ஜமாஅத்தார்களும், ஊர்மக்களும் ஒன்று சேர்ந்து துணிந்து எதிர்த்திருப்பதும், தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதும் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அநீதிக்கும், அக்கிரமத்திற்கும், அதிகார அடக்கு முறைக்கும் எதிரான முதலெழுச்சியாகும். இவ்வாறான சமூக அக்கிரமம், ஆக்கிரமிப்பு, அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது எமது இயக்கத்தினதும், எமது பிரதேசத்தை மையப்படுத்திய ஊடகங்களினதும் கடமை மாத்திரம் கிடையாது. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை என்பதனை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.
எனவே, மக்களின் பெயரால் அமானிதமாகக் கிடைத்த அதிகாரத்தினை அதே மக்களுக்கெதிராக பயன்படுத்துகின்ற பொது நிதிகளைக் கொள்ளையடிக்கின்ற பொது நிறுவனங்களின் சொத்துக்களை அபகரிக்க முற்படுகின்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு இவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. அதேபோன்று இதுபோன்ற அரசியல் அராஜகங்களுக்கு எதிராக துணிந்து குரல் கொடுப[பதற்கு உலமாக்களும், புத்திஜீவிகளும், இளைஞர்களும், தஃவா அமைப்புக்களும் சமூக நிறுவனங்களும் முன்வரவேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே நமது சமூகத்தின் நலன்களை இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாதுகாக்க முடியும் எனவும் எமது இயக்கம் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

Post a Comment