Header Ads



சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற காத்திருக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள்

சவுதி அரேபிய அரசின் புதிய தொழிலாளர் கொள்கையை அடுத்து, அந்நாட்டிலிருந்து வெளியேற ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்திருக்கின்றனர். 

வளைகுடா நாடான சவுதி அரேபியா, எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் முதலிடம் வகிக்கிறது. மன்னராட்சி நடக்கும் இந்த நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்பின்மை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. உள்ளூர் மக்களுக்கு வேலை அளிக்காமல், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சவுதி அரசாங்கம் புதிய தொழிலாளர் கொள்கையை அறிவித்தது. அதன்படி, சவுதியில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரியும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், 3 மாத காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், சவுதியில் உள்ள நிறுவனங்கள், உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது. தற்போது சவுதியிலுள்ள தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் பணியாளர்களில் 10ல் ஒருவர் மட்டுமே அந்த நாட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்கிறது ஆய்வறிக்கை.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சவுதி நிறுவனங்கள், சவுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது பணிக்கு அதிக ஊதியத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், அவர்களை வேலையை விட்டு நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் தெரிவிக்கின்றன. மேலும், கடின உழைப்பு தேவைப்படும் பணிகளில் சவுதியைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை எனவும், அதே நேரத்தில், குறைந்த ஊதியத்தில் கடினமான பணிகளை, வெளிநாட்டிலிருந்து வரும் பணியாளர்கள் செய்து விடுவதாகவும் அந்த நிறுவனங்கள் கூறுகின்றன. 

புதிய தொழில் கொள்கையை அறிவித்த கையோடு, சட்டவிரோத ஊழியர்களை தேடிக்கண்டுபிடிக்கும் பணியையும் சவுதி அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள வெளிநாட்டு பணியாளர்கள் தற்போது சவுதியில் இருந்து வெளியேற ஆர்வம் காட்டி வருகின்றன. இதைத்தொடர்ந்து ரியாத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில், எக்சிட் பாஸ் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இன்றி 24 மணிநேரத்திற்கும் அதிகமாக அங்கு காத்திருக்கின்றனர். 

No comments

Powered by Blogger.