நாளொன்றுக்கு 3 தேக்கரண்டி சீனியையும், 1 தேக்கரண்டி உப்பையும் நுகர சிபாரிசு
(மர்லின் மரிக்கார்) இலங்கையில் தனிநபர்களின் நாளாந்த சீனி மற்றும் உப்பு நுகர்வு அதிகரித்துக் காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய விசேட சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு எதிர்வரும் ஜுன் மாதத்தை தேசிய போஷாக்கு மாதமாகப் பிரகடனப் படுத்தியுள் ளது. இதன் நிமித்தம் சுகாதார அமைச்சின் சுகாதார கல்விப் பணியகம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறைப் பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்கா பிரதம அதிதியாக கலந்து கொண்ட இச்செய்தியாளர் மாநாட்டில் போஷாக்குத் துறை நிபுணர்களும் கலந்து கொண்டு கரு த்துக்களை முன்வைத்தனர்.
இச்செய்தியாளர் மாநாட்டில் விசேட வளவாளர்களில் ஒருவராகப் பங்குபற்றிய சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு பணிப்பாளர் டொக்டர் தலதா லியனகே “இலங்கையர் நாளொன்றுக்கு மூன்று தேக்கரண்டிகள் சீனியையும் ஒரு தேக்கரண்டிக்கும் குறைவான உப்பையும் நுகர்வதற்கே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் பாலித மஹீபால தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “சரியான போஷணை மூலம் ஆரோக்கியமான வாழ்வு” என்ற தொனிப் பொருளைக் கொண்டதாகவே இவ்வருட தேசிய போஷாக்கு மாதம் பிரகடனப்ப டுத்தப்பட்டிருக்கின்றது. இக்காலப்பகுதியில் சரியான போஷாக்கு குறித்து மக்களுக்கு அறிவூட்டப்படும்.
அதேநேரம் இவ் வருடத்தை தொற்றா நோய்களைத் தவிர்ப்பதற்கான வருடமாகவும் எமது அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. தொற்றா நோய்களுக்கும் போஷாக்குக்குமிடையில் மிக பெருங்கிய தொடர்புள்ளது.
அவை ஒன்றிலிருந்து பிரிபட முடியாதவை. அதனால் சரியான போஷாக்கு மிக்க உணவு வகைகளை உட்கொள்வதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் தொற்றா நோய்கள் அண்மைக் காலமாக எமக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இதற்கு எமது மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே பிரதான காரணம்.
இந்நாட்டில் தினமும் இடம்பெறும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவைக்கு தொற்றா நோய்களே அடிப்படைக் காரணமாக உள்ளன.
குறிப்பாக அதிக சீனி மற்றும் உப்பு பாவனை பல தொற்றா நோய்களுக்கு மூல காரணிகளாக விளங்குகின்றன. நீரிழிவு, இருதய நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, புற்று நோய்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை இந்நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவென சுகாதார அமைச்சு வருடா வருடம் பெருந்தொகை நிதியைச் செலவிட்டு வருகின்றது. ஆனால் தற்போதைய உணவு மற்றும் நடத்தை பழக்க வழக்கங்களின் மாற்றத்தின் மூலம் இந் நோய்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
இதேவேளை, இலங்கையர் மத்திய நாளாந்த சீனி மற்றும் உப்பு நுகர்வு மிக அதிகமாக உள்ளது. இதனைக் குறைப்பது மிக அவசியமான தேவையாக மாறியுள்ளது. அதமனால் இதற்கு வழி செய்யும் வகையிலான சுற்றறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. இச்சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். tn

Post a Comment