இஸ்லாமிய சட்டத்தை வலியுறுத்தும் போகோஹரம் போராளிகள் பொதுமன்னிப்பை நிராகரிப்பு
நைஜீரியாவில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வகைசெய்யும் அரசின் யோசனையை அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
அரசின் யோசனையை நிராகரித்ததுடன் "நைஜீரிய அரசுக்கு நாங்கள்தான் பொதுமன்னிப்பு வழங்குவோமே தவிர அவர்கள் எங்களுக்கு வழங்கக் கூடாது. பொது மன்னிப்பைப் பெறும் அளவில் நாங்கள் எதுவும் தவறாக செய்துவிடவில்லை' என்று போகோ ஹரம் அமைப்பின் தலைவர் விடியோவில் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பயங்கரவாத அமைப்பினருக்கு பொது மன்னிப்பு வழங்குவதுதான் தீர்வாக இருக்கும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக அந்நாட்டு அதிபர் குட்லக் ஜொனாதான் ஒரு குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
போகோ ஹரம் அமைப்பினர் நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களினால், இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து விட்டனர். நாட்டின் வடக்குப் பகுதியில் இஸ்லாமிய சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி போகோ ஹரம் அமைப்பினர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Post a Comment