Header Ads



மஹியங்கன வைத்தியசாலை அல் ஹிக்மா நிறுவனத்தால் புனரமைப்பு



மஹியங்கனை தேர்தல் தொகுதி பெரும்பான்மையின மக்கள் வாழும் பிரதேசமாகும். அப்பிரதேசத்தில் பங்கரகம்மன எனும் கிராமத்தில் சுமார் 650 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர். அவர்கள் பெரும்பான்மையின மக்களோடு பல்லாண்டு காலமாக உறவுகளைப் பேணி வருகின்றனர். 

தற்கால சூழலில் அவ்வுறவுகளை மேலும் வலுப்படுத்த சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அல் ஹிக்மா நிறுவனத்தின் பங்கரகம்மன கிளை சுமார் 800000 ரூபா செலவில் மஹியங்கனை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவை புணர்நிர்மானம் செய்து கொடுத்து 03.04.2013 அன்று அதன் பணிப்பாளர் மௌலவி எம்.எச். ஷைஹுத்தீன் மதனி அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அத்திறப்பு விழாவில் அஸ்கிரிய நிகாயவின் உப செயலாளரும் மஹியங்கனை ரஜ மஹா விஹாரையின் விகாராதிபதியுமான உருளே வத்தே தம்ம ரக்கித தேரர் அவர்கள், மஹியங்கனை பிரதேச சபைத் தவிசாளர் சுனில், அல் ஹிக்மா நிர்வாக உறுப்பினர்கள், வைத்தியர்கள், மற்றும் பெருந் தொகையான சிங்கள முஸ்லிம் மக்கள் கலந்து சிறப்பித்தனர். 

பங்கரகம்மன எனும் முஸ்லிம் கிராமம் பல்லாண்டு காலமாக அப்பிரதேச பெரும்பான்மையின மக்களுடன் சக ஜீவன வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் என்பது விசேட அம்சமாகும். இலங்கையை ஆட்சி செய்த சிங்கள மன்னர்களைக் கூட பாதுகாத்து இந்நாட்டுக்கு விசுவாசமாகத் திகழ்ந்தவர்கள் இக்கிராம மக்கள். 

இரண்டாம் இராஜசிங்க மன்னனை போர்த்துக் கேயர்கள் கொலை செய்வதற்கு விரட்டிக் கொண்டு வந்த சமயம் அம்மன்னன் பங்கரகம்மன எனும் முஸ்லிம் கிராமத்தில் தஞ்சம் புகுந்த பொழுது அவனைக் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்த ஒரு முஸ்லிம் பெண்மணியை அவர்கள் கொடூரமாக் கொலை செய்தனர். நாட்டுப் பற்றுக்காகவும் இந்நாட்டு மன்னனைப் பாதுகாப்பதற்காகவும் அப்பெண்மணி தன்னுயிரையே நீத்தார் என்பது வரலாற்று உண்மை. அதற்காக அம்மன்னன் 'மா ரெக லே' 'என்னைக் காத்த இரத்தமே' எனக் கதறியழுத சம்பவமும் அப்பெண்மணியின் ஞாபகார்த்தமாக அக்கிராமத்தையே முஸ்லிம்களுக்கு எழுதிக் கொடுத்த வரலாறும் தனக்காக இன்னுயிரை நீத்த அப்பெண்மணியின் வரலாறும் திட்டமிடப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டது கவலைக்குரிய விடயமாகும். 



No comments

Powered by Blogger.