Header Ads



இலங்கைக்கு தெற்கே சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகள் நடமாட்டம்..?



இலங்கைக்கு தெற்கே, சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை இந்தியக் கடற்படை அவதானித்துள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்து சமுத்திரத்தில் சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்ச்சியாக ஊடுருவி வந்துள்ளதாகவும், இலங்கைக்கு  தெற்கே குறைந்தது 13 தடவைகள் இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாகவும் இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. 

இந்து சமுத்திரத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இந்திய சோனார் கருவிகளில் 22 அடையாளம் தெரியாத நீர்மூழ்கிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியக் கடற்படை வட்டாரங்கள் கூறியுள்ளன.  இந்தப் பிராந்தியத்தில், செயற்படத்தக்க ஏனைய ஒரே கடற்படை சீனாவினது மட்டுமேயாகும்.  இந்த ஊடுருவலை இந்திய மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இந்து சமுத்திரத்தில் சீன நீர்மூழ்கிகளின் இந்த ஊடுருவல் இந்தியக் கடற்படைக்கு பாரிய பிரச்சினையாக இருக்கும்.  சந்தேகத்துக்குரிய ஒரு சீன நீர்மூழ்கி இந்தியக்கரையில் இருந்து 90 கி.மீ தொலைவில்- அந்தமான், நிகோபார் தீவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

ஆறு தடவைகள் மலாக்கா நீரிணைக்கு வடமேற்கிலும், 13 தடவைகள் இலங்கைக்கு தெற்கிலும், இரண்டு தடவைகள் அரேபியன் கடற்பகுதியிலும் இந்த சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் தென்பகுதியில் இந்த இரு கடற்படைகளும் மட்டுமே ரோந்து செல்கின்றன. 

சீனக் கடற்படை சொந்தமாகத் தயாரித்துள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் கடலுக்கு அடியில் 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்யத்தக்கவை என்று தகவல்கள் கூறுகின்றன.  தென் சீனக்கடலில் உள்ள சன்யா என்ற தளத்தில் இருந்தே இவை செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.