அரசாங்க ஊழியர்களுக்கான இழப்பீடு, மருத்துவ காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிப்பு
அரசாங்க ஊழியர்களுக்காக அறிமுகப் படுத்தப்பட்ட ‘அக்ரஹார’ காப்புறுதித் திட்டம் மூலம் வழங்கப்படும் இழப்பீடு மற்றும் மருத்துவ காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கமைய இதய நோய் சம்பந்தமான சத்திர சிகிச்சைகளுக்கு ஆகக் கூடியது நான்கு இலட்சம் ரூபாவும், சாதாரண சத்திர சிகிச்சைகளுக்கு ஆகக் கூடியது ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவும் வழங்கப்படுவதுடன் திடீர் விபத்து அல்லது இயற்கை மரணங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மேற்படி நிதிய பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
முன்னர் இதய நோய் சத்திர சிகிச்சைகளுக்காக 3,75,000 ரூபாவும், சாதாரண சத்திர சிகிச்சைகளுக்காக ஒரு இலட்சம் ரூபாவும், மரணத்திற்காக 50,000 ரூபாவும் உச்சமாக வழங்கப்பட்டது.எனினும், தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவ சத்திரசிகிச்சைக்களுக்கு எவ்வித கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாது .
21வயதுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவ கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ‘அக்ரஹார’ காப்புறுதி திட்டத்தில் சகல அரசாங்க ஊழியர்களும் சேர்ந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கத்தவரின் கட்டணம் 75 ரூபாவில் இருந்து 125 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment