''கல்முனை பொது நூலகம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்''
(இப்னு செய்யத்)
கல்முனை நகரில் அமைந்துள்ள பொது நூலகம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். ஒரு காலத்தில் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக இருந்த இப் பொது நூலகம் இன்று சந்தை போன்று காணப்படுவது கண்டிக்கத்தக்தாகும்.
இவ்வாறு கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் (சு.க) 29-04-2013 பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.00மணிவரை நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிவு தலைமையில் நடைபெற்ற போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், கல்முனை நகரில் அமைந்துள்ள பொது நூலகம் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரினால் நிர்மாணிக்கப்பட்டது. அன்று அது ஒரு பூங்காவினைப் போன்று மிகவும் அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. இதனால், கல்முனையைச் சுற்றியுள்ள எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து அறிவைத் தேடிக் கொண்டனர்.
ஆனால், தற்போது இந்நூலகம் அமைதியற்றதொரு சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது, நூலகத்தைச் சுற்றி சுற்றுமதில் கிடையாது. தனியார் பஸ் சேவையில் ஈடுபடுகின்றவர் அங்கு ஒரு கட்டிடத்தை சட்டவிரோதமாக அமைத்துள்;ளார். இதனை மாநகர சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பந்தம் வாங்கிக் கொண்டு அனுமதித்துள்ளனர். அத்தோடு, அருகில் இ.போ.சபையின் பஸ்களின் பிரதான தரிப்பு நிலையமும் அமைந்துள்ளது. இவை போன்ற காரணிகளினால் இந்த பொது நூலகம் ஒரு சந்தை போன்று இருக்கின்றது வேதனைக்குரியதாகும்.
கல்முனை நகர் பொது நூலகத்தை தரம் உயர்த்துவதற்கு பதிலாக, அதன் தரத்தை இன்னமும் தரங் குறைக்கும் வேலைகளை நகர முதல்வர் மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. ஆயினும், மாநகர சபையிதான் மக்கள் இவ்வாறு சிந்திப்பதற்கு காரணமாகும்.
கௌரவ மேயர் அவர்களே, பொது நூலகத்தின் அபிவிருத்தி பற்றி தங்களிடம் நான் எடுத்துக் கூறிய போது அதனை ஏற்றுக் கொண்டீர்கள். ஆனால், நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
அங்குள்ள, சட்டவிரோதக் கட்டிடம் அகற்றப்பட்டு அமைதியான சூழலை முடிந்தவரை ஏற்படுத்த வேண்டும்.
அத்தோடு. இங்கு புத்தகங்களும் பெருமளவிற்கு குறைவாகவே இருக்கின்றன. இதற்கு முதல் இருந்த முதல்வர்களைப் போன்று நீங்களும் பாராமுகமாக இருக்க முடியாது. பொது நூலகத்தை அபிவிருத்தி செய்து பல ஊர் மக்களும் நன்மை பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதே வேளை, கல்முனை நகரில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தில் பிரயாணிகள் இருப்பதற்கு ஒழுங்கான வசதிகள் கிடையாது. ஆனால், மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்தில் ஓரளவு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிலையையாவது இங்கு ஏற்படுத்த வேண்டும்.

Post a Comment