சிரியா கிளர்ச்சியாளர்கள் வெற்றிபெற்றால் அரபுநாடுகளுக்கு பாதிப்பு - பசார் அல் ஆசாத்
சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகின்றனர். இந்த போர்களில் இதுவரை 70 ஆயிரம் மக்கள் இறந்துள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஒரு மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
புரட்சிக் குழுக்கள் அமெரிக்க உதவியுடன் ரசாயன ஆயுதங்களைக் கொண்டு போரிட்டு வருவதாக அதிபர் ஆசாத் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் பிராந்திய நாடுகளும் புரட்சிக்குழுக்களுக்கு ஆயுதங்களும் தங்கும் வசதிகளும் வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
சிரியாவில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொண்டுவர, மத்திய கிழக்கு நாடுகளிடம் அமெரிக்கா விரைவில் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளது. இந்நிலையில் சிரியாவின் அதிபர் பசார் அல் ஆசாத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்நாட்டு போர்களில் புரட்சியாளர்கள் வெற்றி பெற்றால் அல்லது நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு நாடுகளில் எதிரொலிக்கும். இந்த கொந்தளிப்பு அனைத்து திசைகளிலும் பரவும். நாடுகளின் நிலைத்தன்மையை பல ஆண்டுகளுக்கு பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment