இலங்கையின் கனிம வளங்கள் சீனாவுக்கு அள்ளிக்கொடுக்கப்படுகிறது..!
கனிம அகழ்வு மற்றும் கனிம மணல், கிராபைற் ஏற்றுமதியில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
கனிம வளங்கள் துறையை விருத்தி செய்ய இலங்கை ஆர்வமுடன் இருப்பதாகவும், சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இலங்கைகான சீனத் தூதுவர் வூ ஜியாங்காவோவிடம் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்தத் துறையில் சீன நிறுவனங்கள் இலங்கையுடன் கணிசமாக இணைந்திருப்பதாகவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் கிராபைற், கிறிஸ்டல் ,இல்மனைற் என்பன அனைத்துலக தரத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவுக்கான இலங்கையின் கனிம ஏற்றுமதியும் கடந்த ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
2008இல் 4.47 மில்லியன் டொலர்களாக இருந்த சீனாவுக்கான கனிம ஏற்றுமதி 2012இல் 15.14 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையின் கனிம ஏற்றுமதி 42.7 மல்லியன் டொலர்களாகும். இது 2011ம் ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாகும்.
இதில் கனிம மனல் 65 சதவீதமும், சிலிக்கா மற்றும் குவாட்ஸ் 20 வீதமும், கிராபைற் 10 வீதமும், மைக்கா 3 வீதமும், ஏனைய இயற்கை மணல் 2 வீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு 2.676 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது. இது முன்னைய ஆண்டைவிட 19.5 வீத அதிகரிப்பாகும்.
சீனாவில் இருந்து 2.56 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கை அந்த நாட்டுக்கு 108 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இலங்கையில் இருந்து இன்னும் அதிகமான பொருட்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை வரவேற்பதாக சீனத் தூதுவர் வூ தெரிவித்துள்ளார்.
அத்துடன் கனிம அகழ்வில் முதலீட்டை விரிவாக்குவதன் மூலம் தமது நாட்டு உற்பத்தித் தரத்தை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் சீனத் தூதுவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment