Header Ads



மியன்மாரில் அவதிப்படும் முஸ்லிம்கள் - பெரும்பாலான வீடுகள் தீக்கிரை



மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமாகியுள்ளன. அங்கு கடைகள் மூடப்பட்டு இயல்புநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரங்கூன் நகரில் இருக்கும் பிரபல சந்தைகளான மன்கவர் மற்றும் யுசானா பிளாசா ஆகியவற்றுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்க தூதரகம் அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியன்மார் மத்திய நகரான மெய்கிடிலாவில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான நகைக் கடை ஒன்றில் கடந்த வாரம் இடம் பெற்ற வாக்குவாதமே கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தீமூட்டப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அரசு கடந்த வெள்ளிக்கிழமை அவசர நிலையை பிரகடனப்படுத்தியதோடு நகரெங்கும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஐ. நா. மனிதாபிமான உதவிகளுக்கான நிறுவனம் வெளியிட்ட தரவுகளில் கலவரம் காரணமாக 12,000 க்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

இடம் பெயர்ந்திருப்போர் தற்போது பாடசாலைகள் மற்றும் மடாலயங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறிய மியன்மாருக்கான ஐ. நா. வதிவிட இணைப்பாளர் அஷொக் நிகம், இவர்களுக்கு அரசினால் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இந்த கலவரத்தினால் முஸ்லிம்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வின் ஹ்டெயின் குறிப்பிட்டார். “பெரும்பாலான முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. ஒரு சிலதே எஞ்சியுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார். 



No comments

Powered by Blogger.