அரபு உலகத்துக்கு ஆபத்தான நடத்தைக்கான எடுத்துக்காட்டு - ஈரான் கண்டனம்
அரபு லீக் வருடாந்த மாநாட்டில் சிரியாவின் வெற்றிட ஆசனமானது எதிரணி தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்டமையை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் அதை ஆபத்தான நடத்தை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் ஊடகத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
அரபு லீக்கில் சிரியாவின் உறுப்புரிமை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெற்றிடமாக சிரியாவின் ஆசனமானது, அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாட்டுக்கு எதிராகப் போராடும் சிரிய கூட்டு எதிரணியின் பிரதான முக்கியஸ்தரான மோஸ் அல்ஹக்தீப்புக்கு அரபு லீக் வருடாந்த மாநாட்டின் போது செவ்வாய்க்கிழமை அந்த அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு சிரியாவில் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பித்ததில் இருந்து அந்நாட்டு ஜனாதிபதி அசாட்டுக்கு ஷியாகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. ஏனெனில் , இஸ்ரேலுக்கு எதிரான நகர்வில் முக்கியஸ்தராகவும் சிரியாவில் செயற்படும் சுன்னி முஸ்லிம் குழுக்களுக்கு எதிரான அரணாகவும் பஷார் அல் அசாட்டை தெஹ்ரான் கருதுகிறது.
மக்களின் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு அரபு லீக்கில் சிரியாவின் ஆசனத்தை வழங்குவதானது அரபு உலகத்துக்கு ஆபத்தான நடத்தைக்கான எடுத்துக்காட்டாகி விடும். அது எதிர்காலத்தில் அரபு லீக்கின் ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் புதிய முன்மாதிரியை ஏற்படுத்தி விடும் என்று ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹ் தெரிவித்திருப்பதாக ஈரானின் செய்தி முகவரமைப்பொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
“இந்த நடவடிக்கைகளான இந்த பிராந்தியத்தில் அமைப்பின் (அரபு லீக் ) வகிபாகத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அமையக் கூடும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment