மூத்த முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு சமூக பற்று இல்லையா..?
(சட்டத்தரணிகளுக்கும், அஸாத் சாலிக்கும் இடையே நெருங்கிய தொடர்பை பேணும் ஒரு மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் மூலம் இந்த தகவலகள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்தது)
நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள தீவிரவாதிகளின் அடாவடித்தனங்களுக்கு எதிராக சட்டரீதியாக எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக இளம் முஸ்லிம் சட்டத்தரணிகள் குழுவொன்று நாட்டில் சட்டத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சிரேஷ்ட சட்டத்தரணி இந்த மாதிரியான வழக்குகளைக் கையாள்வதில் பேர்போனவர். இவரின் வீட்டில் இது தொடர்பான ஒரு சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த சந்திப்பில் இளம் சட்டத்தரணிகளின் எதிர்ப்பார்ப்புக்கும் ஆர்வத்துக்கும் உரிய தீனி கிடைக்கவில்லை.
மாறாக அவர்களின் ஆர்வத்தை மழுங்கச் செய்யும் வகையிலேயே அவர் பேசியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக எந்த வகையான சட்டநடவடிக்கை எடுக்கவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ அவர் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்ட இளம் சட்டத்தரணிகள் அங்கிருந்து அதிருப்தியுடன் வெளியேறினர்.
வெளியேறும் போது அவர்களில் ஒருவர் ஆத்திர மேலீட்டால் ..................................................... முஸ்லிம்களுக்கு ஓரளவாவது விமோசனம் கிடைக்கும் அவர்தான் தற்போது அரசுக்கு அளவுக்கு அதிகமாக வக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியுள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணியும் தனது வழமையான செயற்கைப் புன்முறுவலுடன் “மற்றவர்களும் விலகினால் அவரும் விலக வேண்டி வரலாம்” என்று நீதிமன்றத்தில் பதில் சொல்லும் பாணியிலேயே பதில் அளித்துள்ளார்.
ஆத்திரத்துடன் வெளியே வந்த இளம் சட்டத்தரணிகள் அவர்களுள் ஒருவரின் ஆலோசனையின் பிரகாரம் உடனடியாக அங்கிருந்து அஸாத் சாலியுடன் தொடர்பு கொண்டுள்ளனர். நீதிமன்றம் செல்ல இளம் சட்டத்தரணிகள் தயார் என்றால் அதற்குத் தேவையான சிரேஷ்ட சிங்கள சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்யவும், வழக்காட தேவையான முழு செலவையும் பொறுப்பேற்கவும் தான் தயார் என்றும் அஸாத் சாலி உடனடியாக பதில் அளித்துள்ளார்.
அதன் பிரகாரம் இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த சட்டத்தரணிகள் குழு அஸாத் சாலியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளது. இங்கு சட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. அஸாத் சாலியின் சொந்த பாதுகாப்புக் கருதி அவருக்கு நெருக்கமான முக்கிய நண்பர்கள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அஸாத் சாலிக்கு நெருக்கமான சிங்கள சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலர் இந்த விடயத்தில் அவருக்கு உதவ ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Can you please let everybody know who that senior lawyer pls!
ReplyDeleteநீங்கள் ஆரம்பித்து வையுங்கள் அதனை முடித்த வைப்பது அல்லாஹ்வின் பொறுப்பு.அவன்தான் நிர்க்கதியானவர்களின் நிரந்தர இரட்ஷகன்.அவனின் உதவி உங்களுக்கு நிச்சயம் உண்டு.
ReplyDelete