சவூதி அரேபியாவில் கைதானவர்கள் ஈரான் உளவுப் பிரிவுடன் நேரடி தொடர்பு
(TN) சவூதி அரேபியாவில் கைதான 18 பேரும் ஈரான் உளவுப் பிரிவுடன் நேரடி தொடர்புகொண்டவர்கள் என சவூதி உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
“ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் கைது செய்யப்பட்டோரிடமிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள், வாக்குமூலங்களைக் கொண்டு இவர்கள் ஈரான் உளவுப் பிரிவுடன் நேரடித் தொடர்புகொண்டவர்கள் என்பது உறுதியாகியுள்ளது” என சவூதி உள்துறை அமைச்சின் பாதுகாப்பு பிரிவு பேச்சாளர் அந்நாட்டு அரச ஊடகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
சவூதியின் முக்கியமான தளங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பரிமாறுவதற்கு சந்தேக நபர்களுக்கு ஈரான் உளவுப் பிரிவு ஊதியம் வழங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு 16 சவூதி நாட்டவர்கள் மற்றும் ஒரு ஈரான் மற்றும் லெபனான் நாட்டவர்களை சவூதி நிர்வாகம் கடந்தவாரம் கைது செய்தது. எனினும் தமது நாட்டு உளவுப் பிரிவினர் என வெளியான செய்தியை ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மறுத்தது.
இதில் கைது செய்யப்பட்டோர் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சவூதியின் சிறுபான்மை ஷியா பிரிவு முஸ்லிம்கள் கூறியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோருள் இரு முன்னணி மதத் தலைவர்கள், மருத்துவர் மற்றும் பேராசிரியர் ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுன்னி முஸ்லிம் நாடான சவூதிக்கும் ஷியா நாடான ஈரானுக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment